Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தலைமை பண்பின் இலக்கணம் ஆண்டாள்
 
பக்தி கதைகள்
தலைமை பண்பின் இலக்கணம் ஆண்டாள்

தலைமை பண்பின் இலக்கணம் என நீங்கள் எதைச் சொல்வீர்கள்? பிறரை தனக்கு சமமாக பாவித்து,  பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, நம்பி வருவோரை அரவணைத்துச் சென்று, களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக பணி செய்தல் போன்றவை தலைமை பண்பின் இலக்கணம்.  இப்படி பார்க்கும்போது இது அத்தனையும் ஆண்டாளுக்கும் பொருந்துகிறது.

கோதை வாழ்ந்த ஊர் மிகச் சிறியது. பாமர மக்களான ஆயர் குலத்தை சார்ந்தவர்கள் அந்த ஊர் மக்கள். தமக்காக எதைக் கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்று கூட தெரியாதவர்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். தங்களுக்கு எது வேண்டும் என்று கூட தெரியாது, உதிரிப் பூக்களைப் போல சிதறிக் கிடக்கும் அவர்களை ஒன்றாக ஒரே நாரில் வரிசையாக கோர்க்க வேண்டும். அந்த எளியவர்களை கடவுளிடம் சேர்க்கும் ஆன்மிக பார்வையாக பார்ப்பது ஒரு கண்ணோட்டம் என்றால் திருப்பாவையை நவீன நிர்வாகவியல் நோக்கில் பார்க்கும்போது தெரியும் வெளிச்சக்கீற்றுகளோ வேறுவித அனுபவம்!

ஆண்டாள் என்ற தலைவி எப்படி எல்லாம் தன் ஆன்மிக பயணத்துக்கு அழகாக ஆள் சேர்க்கிறார் பாருங்கள்! எப்படி லாவகமாக நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கிறாள். ஆண்டாளின் குழுவில் ஆரம்ப நிலையில் சேர்ந்தவர்கள் சிறுமிகள். பாலைக் கடைந்து, தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து விற்று வாழும் ஆயர் சிறுமிகள். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை என்பது அறவே இருக்கக் கூடாது என்ற தெளிவு இருந்ததால் நீங்கள் அனைவரும் ‘செல்வச் சிறுமீர்காள்’ என அழைக்கிறாள், ஒரு புதுதோரணையில். மகளிர் தினம் என்று கொண்டாடும் நாம், மகளிர் சுயச்சார்பு என்பதை பற்றி இப்போது பல இடங்களில் பல்வேறு நிலைகளில் பார்க்கிறோம். ஆனால் அதை அப்போதே பிரமாதமாக சொன்னவள் தான் நம் கோதை.

அவளது குழுவினருக்கு, உலகத்துக்கெல்லாம் தலைவனாக விளங்கும் நாராயணனை நம்மால் பார்க்க முடியும் என்றெல்லாம் தெரியாது. அப்படியே போய் பார்த்தாலும் பதற்றத்திலும் பரவசத்திலும் தேவையானதைக் கேட்டுப் பெறத் தோன்றுமோ தோன்றாதோ தெரியாது. அப்படிப்பட்டவர்களை ஆண்டாள் ஆற்றுப்படுத்துகிறாள். தன் குழுவினருக்கு நம்பிக்கை அளித்து ஒரே வரியில் அவர்களின் உள்ளத்தை கவர்கிறாள். எப்படி தெரியுமா?

‘நாராயணனே நமக்கே பறை (மோட்சம்) தருவான்’ என்கிறாள். மழலை வகுப்பு செல்லும் குழந்தைகள் முதல் ஐடி ஊழியர்கள் வரை இன்று அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ’பிராஜக்ட்’.   அப்படி ஆண்டாள் கையில் எடுத்த இந்த நோன்பு பிராஜக்ட் மார்கழி மாதம் முதல் நாளில் தொடங்கி முப்பதாம் நாளில் நிறைவு பெறுகிறது. எந்த ஒரு இயக்கத்திற்கும் நிறுவனத்துக்கும் ஒரு ‘மிஷன்’ ஒரு ‘விஷன்’ உண்டு என்கிறது நிர்வாகவியல். ஆண்டாள் தன் குழுவால் ஏற்படுத்தப்பட்ட இயக்கத்தை 30 நாட்களில் தொடங்கி நடத்தி வெற்றியும் கண்டு விட்டாள். முதல் நாளிலேயே அந்த உறுதி அவளிடம் காணப்படுகிறது.

‘எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும்...’ என்னும் வரியில் உள்ள நேர்மறை உறுதிப்பாடு எவ்வளவு கம்பீரத்துடன் வெளி வருகிறது! ஒரு ஆதர்ஷ தலைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை நம் கண் முன்னே நிறுத்திக் காட்டி இருக்கிறாள் கோதை. அது மட்டுமல்ல குழுவினர் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்பதான ஆணைகளையும் உருவாக்கிக் கொடுக்கிறாள். ‘உண்ணோம்’  என்று உறுதியுடன் சொல்லி அவர்களுக்கும் கண்ணனுக்குமான பிராஜக்ட்டில் தானே முதலில் பங்கேற்கிறாள்.

அவர்கள் உள்ள உறுதி கொண்டவர்கள் என்பது ‘செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்’ என்பதில் தெரிகிறது. ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களாகட்டும்,  ஊழியர்களாகட்டும்  வெறுமனே பேசி பொழுது போக்காமல் இருக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பு காட்டுகிறாள். இது எல்லா நிலைகளிலும் நாம் பார்ப்பது தான்.

ஒரு இயக்கத்தின் வளர்ச்சி எப்போது பலப்படும்? உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகினால் தானே? அதற்கு எண்ணற்றோர் ஒன்றாக இணைய வேண்டும். ஆனால் அது எளிதான செயல் இல்லையே. இந்த சமூகத்தில் சோம்பேறிகளும், சந்தேகப்பிராணிகளும், வாய்ச்சவடால் பேசுபவர்களும் இருப்பார்களே… இவர்களை ஒருங்கிணைப்பது லேசான விஷயமா என்ன? ஆளுக்கு ஒரு மூலையில் பிரிந்து நிற்பார்கள். இது மிகப்பெரிய சவால். அனைவரையும் ஒன்று சேர்ப்பதோடு அனைவரையும் விழிப்புடன் இருக்கச் செய்ய வேண்டும். ஆண்டாளுக்கு இதில் பல சோதனைகள் வந்தன. முதல் பத்து நாட்களுக்கும் இதே பாடு தான். ‘‘வெறும் பேச்சுக்காரிகளா நீங்கள்?”  என்று மெல்ல தோழியரிடம் கோபிக்கிறாள் கம்பீரம் மிக்க அந்த தலைவி. திருப்பாவையின் 30 பாசுரங்களிலும் ஒரு இடத்தில் கூட ‘நான்’ என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ‘நாம்’ என்றே குறிப்பிட்டதோடு அதை பெருந்தன்மையைப் பின்பற்றி வெற்றியும் கண்டாள்.

அது மட்டுமல்ல, ஆண்டாள் புருஷகாரத்தில் சிறந்து விளங்கினாள்.  அது என்ன புருஷகாரம் என்றால் ஆன்மாக்களாகிய உயிர்கள், எல்லையற்ற கடவுளை அடைய ஆற்றுப்படுத்தும் செயலே புருஷகாரம். ஜீவாத்மாக்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பெருமாளிடம் சிபாரிசு செய்கிறாள்.   
நாம் கோயிலுக்கு சென்றால் முதலில் கோபுர தரிசனம் முடித்து பின் கொடிமரம் தாண்டி கருடாழ்வாரை வணங்கி துவார பாலகர்களை கடந்து பிறகே பெருமாளை வழிபடுகிறோம் அல்லவா? அதுபோல பாவை நோன்பு மேற்கொண்ட ஆண்டாள் தோழியருடன் செல்லும் போது கோயில் காப்போன், தோரண வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, நம்பி மூத்தபிரான் என ஒவ்வொருவராக எழுப்புகிறாள். அப்படித்தான் பாசுரங்களில் பார்க்கிறோம். ஆனால் கண்ணனை எழுப்பச் சென்றவள் நேரடியாக அவனை எழுப்பவில்லை. முதலில் நப்பின்னையை எழுப்ப முனைகிறாள். இதைக் காணும் போது நப்பினையை முதலில் பற்றிக் கொண்டு பிறகு அவள் மூலமாக கண்ணனை அடைய விழைகிறாள் என்பது தெரிகிறது. ஆக கண்ணனை அடைவதற்கு நப்பின்னை பிராட்டியே புருஷகாரமாக திகழ்கிறாள்.  

என்னதான் எளிதில் கிடைப்பதாக இருந்தாலும் முறைப்படி கடவுளை அடைதல் தானே சிறப்பு.  முறை தவறினால் பழி ஏற்படும் வாய்ப்புண்டு அல்லவா! ஆம்,  சூர்ப்பனகை பட்ட அவதிகள் நமக்குத் தெரியும் தானே!  இங்கே ஒரு சூட்சமம் ஒளிந்து இருப்பதை பாருங்கள். ஆண்டாள் கண்ணனை அடைய விரும்பியதைப் போலத்தான் சூர்ப்பனகையும் ராமனை அடைய முயன்றாள். ஆனால் சூர்ப்பனகை மட்டும் ஏன் இத்தனை அவதிகளை பெற்றாள்?  நப்பின்னை ஆதரவுடன் புருஷகாரமாக கண்ணனை அடைய விரும்பினாள் ஆண்டாள். ஆனால் சூர்ப்பனகை சீதையை விட்டு ராமனை அடைய விரும்பினாள். அதனாலேயே அவள் அல்லலுற்றாள். ஆண்டாள் புருஷ காரத்தின் உயர்வை திருப்பாவையில் இவ்வாறு புலப்படுத்தி உள்ளார். இதன் மூலம் அவள் சிறந்த தலைவி மற்றும் சிறந்த நிர்வாகி என்பதும் தெரிய வருகிறது.

      அப்படி ஆண்டாள் அனைத்து சூட்சமங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதன்படி வாழவும் பிறருக்கு வழிகாட்டவும் முனைந்திருக்கிறாள். அதனால் தான் அவளது சிறப்பு விண்ணைத் தொடுகிறது. ஒரு தலைவியாக, அத்தனை சிறப்பான பண்பு நலன்களையும் பெற்று மற்றவர்களையும் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறாள். அதனாலேயே அவள் மிகச் சிறந்த தலைவியாக, தலைமை பண்புக்கு இலக்கணமாக திகழ்கிறாள்.  

ஒரு அடர்ந்த காடு இருக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த காட்டில் நாம் தனித்து விடப்பட்டு விட்டோம் என்றால் என்ன ஆகும்? இரவு நேரம் வேறு. வெளிச்சம் ஏதுமில்லை. மேடு எது, பள்ளம் எது என்று தெரியாது. கொடிய மிருகங்கள் ஏற்படுத்தும் சத்தம் வேறு நம்மை மிரட்டுகிறது. பயத்திலேயே உயிர் போய்விடும். இந்த இக்கட்டான நேரத்தில் நம் கைபிடித்து ஒருவர் பத்திரமாக அழைத்துச் சென்று காட்டுக்கு பக்கத்தில் உள்ள ஊரில் நம்மை விட்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இந்த மனிதப்பிறப்பில் சில நேரங்களில் துன்பம் விடாது துரத்தும் போது, நமக்கும் அவ்வாறு எண்ணம் தோன்றும். அப்படி நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தலைவியாக ஆண்டாள் நம் கண் முன் இருக்கிறாள். அந்த சிறந்த தலைவி வழிகாட்ட அவள் கரம் பற்றி தொடர்ந்து செல்வோம்…  வாருங்கள்!                                               


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar