Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பள்ளிகொண்ட ரங்கநாதர்
  உற்சவர்: கஸ்தூரி ரங்கன்
  அம்மன்/தாயார்: ரங்கநாயகி
  ஆகமம்/பூஜை : மூன்று கால பூஜைகள்
  புராண பெயர்: இருகரை
  ஊர்: இடிகரை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் ஆண்டு முழுவதும் எல்லா சனிக்கிழமைகளிலும் மற்றும் மார்கழி மாதம் முழுவதும் காலை 5.00 மணிக்கு திருப்பளியெழுச்சி, திருப்பாவை ஸேவித்து திருவாராதனமும், இரவு பஜனையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வைணவ முதன்மை திவ்ய தேசமாகிய திருவரங்கத்தைப் போலவே தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி பாஞ்சராத்தர ஆகமத்தில் (காலை 7.00 முதல் 9.00, இரவு 7.00 மணி) மூன்று கால பூஜைகள் நடந்து வருகின்றன. அனைத்து ஆழ்வார்களின் திருநட்சத்திரம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி கொலு, தீபாவளி, கார்த்திகையில் சர்வ கோயில் தீபம், பாஞ்சராத்தர தீபம், அனுமன் ஜெயந்தி, தை முதல் நாள் கருட சேவை சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு என மாத வைபவங்களாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாள் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு நாட்களிலும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் வைபவமாகும். கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியை கைசிக ஏகாதசி எனவும், அன்று சயனத்திலிருந்து பெருமாள் விழித்தெழுவதால் மிக சிறப்பான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தலத்தின் வருட முக்கிய பெருவிழாவாகக் கருதப்படுவது பிரம்மோத்ஸவம்- சித்திரை மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழாவாகும். கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினசரி அலங்கார ஆராதனைகள் ஸந்நதி புறப்பாடுகள் நடைபெறும். மாலை வேளையில் அன்னவாகனம், சிம்மவாகனம் அனுமந்த வாகனம், கருடவாகனம் ஆகிய வாகனங்களில் பெருமாள் சதுர்வீதிகளில் உலா வருவார். நான்காவது நாள் இரவு 8.00 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலுக்கு வடபுரம் குருகுறிஞ்சி அம்மனை வைத்து வழிபட்டுள்ளனர். வைணவ சம்பரதாயத்தில் அம்மன் அழைப்பு ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். ஐந்தாம் நாள் அதிகாலை 5.00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதன்பின் சதுர்வீதி புறப்பாடும் மாலையில் கஜேந்திரமோட்ஷம் மற்றும் கஜ வாகனத்தில் சதுர்வீதி உலா நடைபெறும். 6ம் நாள் காலை 10.00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு. சிறிய தேரில் ஆண்டாள் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில் உலா வர பின் தொடர்ந்து பெரிய தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி ரங்கன் திருவீதி உலா வருவர். ஏராளமான பக்தர்கள் புடைசூழ வடம் பிடித்து தேரை இழுத்து வர ஆடி அசைந்து வரும் தேரில் பெருமாள் பவனி வரும் அழகை காண கண்கோடி வேண்டும். மனதை விட்டு அகலாத நிகழ்வாகும். அதுவும் பெருமாள் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரதன்று கண்டு தொழுவது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். ஏழாம்நாள் குதிரை வாகனத்தில் திருவீதிஉலாவும், பார்வேட்டை, திருமங்கை மன்னன் வேடுபறியும், அடுத்தநாள் தெப்போற்சவம் மற்றும் சேஷ வாகனத்தில் திருவீதி உலா, நிறைவு நாளன்று டோலோற்ஸவத்துடன் விழா இனிதே முடிவுறும் இந்த பிரம்மோத்ஸவ விழாவின் போது ஊரே திருவிழா கோலத்துடன் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். (சனிக்கிழமை மற்றும் மார்கழி மாதம் முழுதும் காலை 4.00 முதல் 9.00 வரை)  
   
முகவரி:
   
  அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயில், இடிகரை, கோவை.641 022  
   
போன்:
   
  +91 98436 31947 
    
 பொது தகவல்:
     
  விஜய நகர மன்னரின் மதுரை ராஜ பிரதிநிதி மூலம் இடிகரை கோயிலை நிர்வகிக்க அனுப்பி வைக்கப்பட்ட பெத்தப்ப நாயக்கரால் 36 கல் தூண்களைக் கொண்ட மஹா மண்டபமும் திருமதில்களும் கட்டப் பெற்றதாக மண்டபத்தில் உள்ள கல்வெட்டு செய்தி மூலம் அறியப்படுகிறது.  இத்திவ்ய தலம் மற்ற வைணவத் தலங்களிலிருந்து மாறுபட்ட அமைப்பைக் கொண்டதாக உயரமான இடத்தில் மாடக் கோயில் போல் அமைந்துள்ளது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வந்தால் கோவிலுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக இந்த அமைப்பு. பெருமாளின் பன்னிரு திருநாமங்கள் ஸ்மரணம் செய்து கொண்டே ஏறும்படியாக பன்னிரண்டு படிகளைக் கொண்டது. அடுத்து உயர்ந்த 3 நிலை ராஜ கோபுரம் கடந்து உள்ளே சென்றால் துவஜஸ்தம்பம் அடுத்து பெரிய திருவடி எனும் கருடன் சுவாமியை நோக்கி உள்ள சிறிய சன்னிதியில் சேவை சாதிக்கின்றார். 36 தூண்களைக் கொண்ட மஹா மண்டபத்தில் ஜெய விஜய துவார பாலகர்கள் கம்பீரமாய் வீற்றிருக்க அடுத்துள்ளது சதுர் வேதங்களைக் கொண்ட ரங்க மண்டபம். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது கருவறை. நம்மாழ்வார், பெரியாழ்வார் திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னிதிகள் உள்ளன. மேலும் திருச்சுற்றில் ரங்கநாயகி தாயார், சத்ய நாராயணர், நாகர், காளிங்கநர்தணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் சேவை சாதிக்கின்றனர். கோயில் முகப்பு கலை நுணுக்கத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு மண்டபத்தின் மேல்புறம் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள் தேவியருடன் உள்ள சுதைச் சிற்பமாக எழிலுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் இருபுறமும் தசாவதார சுதைச் சிற்பங்களை கலைநயத்துடன் வடித்துள்ளனர். கோயில் வாசல் எதிரே கொங்குநாட்டு வழக்கப்படி விளக்குத் தூண் மண்டபத்துடன் விளங்குகின்றது.  
     
 
பிரார்த்தனை
    
  சத்ய நாராயணர் சன்னிதியில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு ஸேவித்து விவாகமாகாத பெண்கள் திருமணமாகி வளமுடன் வாழ்ந்து வருகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வைணவத்தில் பெருமாள் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமா மற்றும் அர்ச்சை என ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட ரங்கநாதர் மூலவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் குடதிசை பின்புகாட்டி, குணதிசை ஸ்ரீரங்கத்தை நோக்கி வடதிசை பாதம் நீட்டி தென்திசை முடியை வைத்து கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். ஆனந்த ஓரக சயன கோலத்தில் அதாவது தூங்குவது போல் படுத்து விசேஷமான பார்வை நம் மீது படும்படி அருள்புரிகின்றார். உத்ஸவர் கஸ்தூரி ரங்கன் உபய நாச்சியார் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் சேவை சாதிக்கின்றனர். மஹா மண்டபத்தின் வடபகுதியில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கான பரமபத வாசல் அமைக்கப்பட்டுள்ளது. மிகப் புராதனமான திவ்ய தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. ஸ்ரீரங்கத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் நடுவே கரையில் பெருமாள் நித்யரங்கனாக எழுந்தருளி உள்ளார். அதுபோலவே இங்கு இரு ஆற்றின் கரைகளுக்கு நடுவே பெருமாள் எழுந்தருளி உள்ளார். கொங்கு நாட்டில் ஸ்ரீரங்கத்தை போன்று பாம்பணையில் பள்ளி கொண்டு அர்ச்சாரூபியாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் தொன்மையான தலம் இது ஒன்றே. ஸ்ரீரங்கத்தைப் போன்றே பெரிய பிராட்டி ரங்கநாயகி தாயாருக்குத் தனி சன்னிதி இங்கும் காரமடையில் மட்டுமே உள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  கோவை மாநகரை அடுத்து உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி குருஅடிமலை, வைணவ குருவான ராமானுஜர் திருஅடிபட்டதால் குருஅடிமலை என வழங்கப்படுகிறது. குரு அடிமலை மற்றும் அருகே உள்ள பாலமலை ஆகிய மலைகளிலிருந்து மழைக் காலங்களில் பெருகி வரும் வெள்ள நீர் இரு காட்டாறுகளாக இடிகரை எனும் ஊரின் வடபகுதியில் ஒன்றும் தென்பகுதியில் ஒன்றும் ஆக ஓடி, ஊரைத் தாண்டி கிழக்கு திசையில் இரு ஆறுகளும் ஒன்று சேருகின்றன. இரு கரைகளுக்கு நடுவே அமைந்த ஊர்ப்பகுதி இருகரை என காரணப் பெயராய் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மருவி இடிகரை என்றாகிவிட்டது. இவ்வூரில் அமைந்துள்ள திவ்ய வைணவத் தலம் பள்ளி கொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயிலாகும்.கி .பி. 1070 முதல் 1116 வரை ஆண்ட சோழ மன்னன், தவறான சிலரின் வழிகாட்டுதலின் பேரில் வைணவத்தின் மீது வெறுப்பு கொண்டான். வைணவத்தை வளர்த்தவரும், தலைமை பீடத்தை அலங்கரித்த வருமான ராமானுஜரையும் வைணவத்தையும் அழிக்க பல கொடுமைகளைச் செய்தான். சோழ மன்னரின் எண்ணத்தை அறிந்த ராமானுஜரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் குருவின் காவி வேஷ்டியையும், அவரது திரிதண்டத்தையும் ஏந்தி தானே ராமானுஜர் எனக் கூறிக் கொண்டு சோழ மன்னனின் அரசவைக்குச் சென்றார்.

அரசவையில் தர்க்கம் செய்து அனைவரையும் வென்று, வைணவ சமயத்தை நிலைநாட்டினார். அதனைப் பொறுக்காத மன்னன் கூரத்தாழ்வார் மற்றும் ராமானுஜரின் ஆச்சாரியார் பெரிய நம்பிகள் ஆகியோர் கண்களைப் பிடுங்க ஆணையிட்டான். ஆனால் கூரத்தாழ்வார் கோபத்துடன் தன் கண்களைப் பறித்து சோழ மன்னன் மீது வீசிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். தன் ஆடைகளை கூரத்தாழ்வார் அணிந்து சென்றதால், ராமானுஜர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து தன் சீடர்களுடன் கொங்கு நாட்டில் உள்ள பாலமலை, குருஅடிமலை, காரமடை சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை தரிசித்து விட்டு வைணவத்தையும் வளர்த்து வந்தார். ஆங்காங்கே தன் சீடர்களை நிறுத்தி வைணவத்தை வளர்க்க உத்தரவிட்டார். ஸ்ரீரங்கத்தை விட்டு ராமானுஜர் வந்த சிஷ்யர்கள் குருஅடிமலை, பாலமலை, பெட்டாதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் மறைந்திருந்து அரங்கனை சுயம்பாக வழிபட்டு வந்தனர். ராமானுஜருடன் வந்த வைணவ பிராமணர்கள் இடிகரை பகுதிக்கு வந்தனர். செழிப்பானதும், பாதுகாப்பான இடம் என்பதையும் உணர்ந்தனர். மேலும் இரு ஆறுகளுக்கு நடுவே அதமந்திருந்ததால் ஸ்ரீரங்கத்தை ஒத்து இருந்தது. எனவே இவ்வூரில் தங்கி பள்ளி கொண்ட ரங்கநாத பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். 14ம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் பாண்டிய மன்னர்களால் கோயில் கட்டப் பெற்றது. திருமாலின் மச்சாவதாரமான மீனைச் சின்னமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் பாண்டியர்கள் இத்தலத்தில் பல இடங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar