Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நதிகளும் நாச்சியாரும்
 
பக்தி கதைகள்
நதிகளும் நாச்சியாரும்


மனிதனுக்கு இயற்கை வழங்கிய மிகப் பெரிய வரம்தான் நதி. நாம் ஒரு கிணற்றை  வெட்டலாம், குளம் கட்டலாம். ஆனால் நதியை உருவாக்க முடியாது. உலகத்தில் காணப்படும் அத்தனை நாகரிகங்களும் நதிக்கரையில் தான் தோன்றின என்பது வரலாறு.

இங்கிலாந்தில் ஓடும் தேம்ஸ் நதி, ரஷ்யாவின் வோல்கா நதி, ஐரோப்பாவின்  நைல் நதி, ஆப்பிரிக்காவின் காங்கோ நதி, கனடாவின் நெல்சன் நதி, சீனாவின் மஞ்சள் நதி, அமெரிக்காவின் அமேசான் நதி என புகழ்பெற்ற நதிகள் நம் எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் பெருமைமிகு பாரத நாட்டைப் பொறுத்தவரை நதிகள் என்பது ஆன்மிகப் பெருமைக்கும் கலாச்சார சிறப்புக்கும் பண்பாட்டுக்கும் நிலைக்களனாக விளங்குகின்றன.  இமயம் முதல் குமரி வரை ஓடும் நதிகளில் புண்ணிய நதிகள் எனப் பெயர் பெற்றவை சில.

 நீரை மட்டுமின்றி ஆன்மிகம், பண்பாடு, கலாசாரம், தெய்வீகம், எண்ணற்ற புராண இதிகாச நிகழ்வுகளையும் நதிகள் கடத்திச் செல்கின்றன.  

’நதிகள் பூமியின் ரத்த நாளங்கள்’ என நீரியல் நிபுணர் மார்க் ஆஞ்செலோ கூறுகிறார். நதிகளுக்கு பெண் பெயர்களைச் சூட்டி தாயாக போற்றியவர்கள் நாம். நம்முடைய கொண்டாட்டம், பண்டிகைகள் ஆதிகாலத்தில் நதிகளின் மடியினில் தான் நடைபெற்றன. சராசரி மனிதர்கள் முதல் ஞானிகள் வரை பாவம் போக்க நதிகளைத் தேடி நீராடுகிறார்கள். ஆனால் புண்ணிய நதி ஒன்றிற்கே பாவம் வந்து சேர்ந்துவிட்டால்? அது எப்படி தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளும்?

அப்படி பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்ட நதிதான் கோதாவரி. அந்த கோதாவரியின் பாவத்தை நம் ஆண்டாள் போக்கியிருக்கிறாள் பாருங்கள். ஆண்டாள் என்ற அற்புதப் பெண்ணின் மகிமை என்று தான் சொல்ல வேண்டும்.

அழகு தமிழால் அரங்கனை ஆண்டதால் ‘ஆண்டாள்’ எனப் பெயர் பெற்றவர் பூமிப்பிராட்டியார். ஆனால் அவர் பிறந்தபோது, ‘கோதை’ என பெரியாழ்வார் பெயர் சூட்டினார். ‘கோதை’ என்னும் பெயர் ஆண்டாளுக்கு ஏன் சூட்டப்பட்டது என்பதை ‘கோதாஸ்துதி’ என்ற நுாலை இயற்றிய வேதாந்த தேசிகர் விளக்குகிறார். 29 ஸ்லோகங்கள் கொண்ட இந்த நுால், ஆண்டாளின் பெருமைகளைச் சிறப்பித்துச் சொல்கிறது. நம் மண்ணின் கதையான ராமாயணத்துடன் தொடர்பு கொண்டது இக்கதை. அன்னை சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது, சென்ற வழியெல்லாம் தன் அணிகலன்களை எறிந்து, ‘மலைகளே, நதிகளே, என் கணவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் என் கொடிய நிலையைச் சொல்லுங்கள்’ என வேண்டினாள். பிறகு ஒருநாள் ஸ்ரீராமர் கோதாவரி ஆற்றிடம், ‘‘ என் சீதையை பார்த்தாயா?’’ என்று கேட்டார். ராவணன் தான் பெரும் அரக்கன் ஆயிற்றே! அவனது பொல்லாப்புக்கு ஆளாக வேண்டாம் என எண்ணி சீதையைப் பற்றி சொல்லாமல் இருந்து விட்டது கோதாவரி நதி. இதனால் அந்த நதிக்கு பெரும்பாவம் சேர்ந்தது.

பூமிப்பிராட்டி பிறந்து அவளுக்கு ‘கோதை’ எனப் பெயர் சூட்டப்பட்ட போது தான் கோதாவரி நதியின் பாவம் பொசுங்கியது என அந்த நுால் சொல்கிறது. பாருங்கள்… ஆண்டாள் பிறந்த போதே கோதாவரி நதியின் பாவத்தை நீக்கி, அவளுக்கு மங்களம் அருளியிருக்கிறார். இப்படி, ஆண்டாளின் வாழ்வும் பாடல்களும் அன்றும் இன்றும் என்றும் மங்களத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது உண்மை.

கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளத்தில் மகாமக நாளில் கங்கை, காவிரி, யமுனை, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நதிகள் வந்து சேர்வதாக புராணங்கள் கூறுகின்றன. இக்குளத்தின் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மேற்கண்ட நதிகளை தெய்வ வடிவங்களாக அமைத்து வழிபடுவதைக் காண முடியும்.

“பூமருவும் கங்கை முதல் புனிதமாம்
பெரும் தீர்த்தம் மாமகந்தான்
ஆடுதற்கு வந்து வழிபடும் கோவில்”

என பெரிய புராணம் சிறப்பித்துப் பேசுகிறது. அப்படிப்பட்ட புனித நதி என பெயர் பெற்ற கோதாவரி நதிக்கு ஏற்பட்ட பாவத்தை போக்கிய பெருமை பெற்றவர் ஆண்டாள். பாவத்தை புனித நதிகளில் மூழ்கி தொலைக்கச் செல்வார்கள் நம் முன்னோர். ஆனால் வேடிக்கை பாருங்கள்! அந்த புனித நதிக்கே ஏற்பட்ட பாவத்தை நம் நாயகி தீர்த்து வைத்திருக்கிறாள். அவள் பிறப்பிலேயே ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

’தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற திருக்குறள் வழி கோதையின் பிறப்பிலேயே எத்தனையோ மனிதர்களின் பாவத்தை கழுவிய அந்நதியின் பாவமும் தொலைந்து போனதாம்.

சுவாமி வேதாந்த தேசிகர் ‘ஸ்ரீகோதாஸ்துதி’ என்னும் நுாலில் கோதை நாச்சியார் குறித்து 29 ஸ்லோகங்கள் இயற்றியதாகச் சொன்னேன் அல்லவா? கோதையை ‘கோதாவரி’ என்று சொன்ன அவர், ஆறாவது ஸ்லோகத்தில், சோணை, துங்கை, பத்திரை, சரஸ்வதி, விரஜை, நர்மதை போன்ற நதிகளின் பெயர்களைச் சொல்லி ஒப்பிட்டுப் பாடுகிறார்.

அவளது வாய் சோணை நதியாகவும் அவளது தனங்கள் துங்கபத்திரையாகவும் அவருடைய சொல் வன்மை சரஸ்வதி நதியாகவும் அவள் மறுமையில் காணக் கூடிய விரஜா நதியாகவும் விளங்குகிறாள் என்கிறார் அவர்.

மேலும் இவளை கோதை என்று கூறுவதால் இவளே கோதாவரி நதியாக விளங்குகிறாள் என்றும் நிறைவு செய்கிறார்.  கோதாதேவியின் வார்த்தைகள் சுவை மிக்க பாடல்களால் தமிழ் மொழியை அலங்கரித்தது நாம் அறிந்ததே!  அவையனைத்தும் அர்த்தமிக்க ஆழ்ந்த பாடல்கள். அவை பகவானின் தொடர்பை உண்டாக்கக் கூடியவை என்று உணர வேண்டும்.
இந்திய மண்ணில் எத்தனையோ நதிகள் இருக்க, புண்ணிய நதிகள் என சிலவற்றை மட்டுமே அடையாளப்படுத்துகிறோம். இது எதனால்? நதிக்கரையில் புண்ணியத்தலங்கள் இருந்தால் அவை புண்ணிய நதியாகச் சொல்லப்பட்டன.
ஹிந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஒன்பது ஆறுகளை மிகப் புனிதமாகக் கருதுவர். இவற்றில் நீராடினால் பாவம் நீங்கி, நற்பேறு கிடைக்கும். இந்த நதிகளின் பெயர்களை  நீராடும் போது உச்சரித்தாலே, அவற்றில் நீராடிய பலனை அடையலாம். நதிகளுக்கு பெருமை ஏற்பட்டதற்கு காரணம் அதன் கரைகளில் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.

 பெரும்பாலும் நதிக்ரைகளில் புண்ணியத்தலங்கள் இருக்கும். பல ஞானிகள் நதிக்கரைகளில் யாகங்களை நடத்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் நதிக்கரைகளில் தான் முனிவர்கள் தம் சீடர்களுக்கு கல்வி போதித்தனர். பெரும்பாலான புராணங்கள், கங்கை நதிக்கரையில் சொல்லப்பட்ட புராணங்கள்தான் என்பதும், உபநிடதங்களில் பல கங்கை நதிக்கரையில்தான் தோன்றின என்பதும் வரலாறு.


ஆண்டாளால் சிறப்புப் பெற்ற கோதாவரிக் கரையில் பிரபல சரஸ்வதி கோயில் உள்ளது.  துறவிக் கவிஞர் தியானேஸ்வர்,  இந்நதிக்கரையில் தான் தியானேஸ்வரியை இயற்றினார். கோதாவரி உருவாகும் தலமான திரியம்பகேஸ்வர் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  நடக்கும் கும்பமேளா கொண்டாடப்படும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

 கோதை கோதாவரியுடன் தொடர்பு உடையவள் என்றால், கண்ணனின் சரித்திரம் யமுனையோடு தொடர்புடையது.  கண்ணனின் குழந்தைப் பருவ வாழ்வில் ஆழமாக இணைந்தது யமுனை நதி! இது கங்கை நதியின் இரண்டாவது பெரிய கிளை நதி. பாண்டவர்களின் தலைநகரமான இந்திரபிரஸ்தம் (தற்போது டெல்லி) யமுனை நதியின் கரையில் உள்ளது. டில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் உள்ளன. கங்கையும், யமுனையும் கலக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது.

 யமுனை நதி, சூரியக்கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறாள். யமுனை நதியில் நீராடினால்  நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
துாய பெருநீர் யமுனைத் துறைவனை
என யமுனையைப் போற்றுகிறாள் ஆண்டாள்.

அப்படியென்ன துாய்மை? கண்ணன் வடமதுரை என்னும் மதுராவில் பிறந்தான். வசுதேவனுக்கு கம்சனிடம் ஏற்பட்ட அச்சத்தால் கண்ணனை ஆயர் பாடியில் ஒளிந்து வளர்க்கக் கருதினான்.  வழியில் யமுனையில் வெள்ளம். கண்ணனை அக்கரையில் சேர்க்க யமுனை தன்னை முழங்கால் அளவிற்கு வற்றுவித்துக் கொண்டு பகவானுக்கு செய்த தொண்டை, ஒப்புயர்வற்ற துாய்மையாகக் கருதித் துாய பெருநீர் யமுனை என்கிறாள் ஆண்டாள்.
இப்படி நதி கோதையின் வாழ்வோடு எண்ணத்தோடு பொருந்திப் போயிருக்கிறது. அதுமட்டுமல்ல, எந்த ஒரு சிறப்பான பொருளைப் பற்றி எண்ணினாலும் உடனே ஆண்டாள் அதை கண்ணனுடன் பொருத்திப் பார்த்துக் கொள்வாள் போலும். நாச்சியார் திருமொழியில் கண்ணனின் திருவாய் எச்சில் கூட ஒரு புனித நதியே என்கிறாள்.

“போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வாலாய் வலம்புரியே”

கங்கையோ யமுனையோ புனித நதிகள் அல்ல. கண்ணனின் உடம்பில் வியர்க்கும் வியர்வையும் அவன் திருவாய் எச்சில் அமுதமும் கூட புனித நதிகளே.
அவன் கைகளை அடைந்து அவனது உடல் வியர்வை தீர்த்தம் பெற்றதோடு அல்லாமல் அவனுடைய வாய் தீர்த்தமும் பெற்ற உன் வல்லமை எத்தனை சிறப்புப் பெற்றது என வலம்புரி சங்கைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள் ஆண்டாள்.

நதி என்பது சிறப்புப் பெற்ற ஒன்று என்பதால் அதை கண்ணனுடன் இணைத்துப் பார்க்கும் ஆண்டாளின் எண்ணங்களில் ஓடுகிறது கவிநதி. வாருங்கள் தொடர்ந்து நீந்திச் செல்வோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar