Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மேன்மக்கள் சொல் கேள்
 
பக்தி கதைகள்
மேன்மக்கள் சொல் கேள்


பிறர் சொல்வதைக் கேட்பது என்பதே ஒரு கலை. பெரும்பாலும் ஒருவர் பேசும் போது அவர் பேசி முடிப்பதற்குள்ளாக அல்லது அவர் கருத்தைச் சொல்லி முடிப்பதற்குள்ளாக குறுக்கே புகுந்து பேசுவது நம் பழக்கம். பிரபலமான திரைப்பட நகைச்சுவை ஒன்று உண்டு. கணவன் சொல்லத் தொடங்கியவுடன் மனைவி அது தான் எனக்குத் தெரியுமே என்றும் எங்கே சொல்லு எனக் கேட்டால் தெரியாது என்றும் சொல்வாள். இது தான் உலக வழக்கம். ‘நல்ல கேட்பாளனே நல்ல பேச்சாளன்’  என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. நாம் முதலில் நல்ல கேட்பாளராக இருப்பது அவசியம். முதலில் யார் எதைச் சொன்னாலும் அதை சில நிமிடங்கள் பொறுமையாகக் கேட்டுப் பழக வேண்டும். ஆனால் இன்று பலர் அலைபேசியில் கூட நம்மை பேச விடாமல் குறுக்கே, குறுக்கே பேசும் மனிதர்களையே அதிகம் சந்திக்கிறோம். கேட்பதற்கு முதலில் தேவை பொறுமை என்னும் குணம். நம் கையில் எப்போது ரிமோட் வந்ததோ அப்போதே பொறுமை காற்றில் பறந்து விட்டது. கோயிலுக்குப் போனால் கூட பொறுமை இல்லை. திரை போட்டிருந்தால் நுாறு பேரை விசாரிக்கிறோம். எப்போது திரை விலக்குவார்கள். அபிஷேகம் ஆகி விட்டதா? அலங்காரம் ஆகிறதா? வேறு ஏதேனும் சிறப்பு அலங்காரம் உண்டா? எனத் தொடர்ந்து அருகில் இருப்போரிடம் கேள்விக் கணையைத் தொடுத்துவிடுவோம். அவரே ஏதாவது மவுனமாக இருந்தாலோ அல்லது பக்திப் பாடல்கள் பாடினாலோ இன்னும் சிக்கலாகி விடும். கோயிலுக்குத் தான் வந்துவிட்டோமே! கொஞ்ச நேரம் பொறுமையாய் தான் இருப்போமே என்ற எண்ணம் வருவதில்லை. தெரிந்தவர்கள் யாராவது கண்ணில் தென்படுகிறார்களா எனத் தேடுவோம். காரணம் குறுக்கு வழியில் சென்று நேராக இருக்கப் பிரார்த்தனை செய்வோம். கோயிலின் எந்த மூலையில் இருந்தாலும் கடவுள் நம்மைப் பார்த்து விடுவார் என்னும் பக்தி தோய்ந்த பொறுமை இருந்தால் போதும் எல்லாம் சாத்தியமாகும்.
     அனுபவத்துடனேயே ஒருவன் பிறக்க இயலாது. சிறிய வயதிலே நெருப்பைப் தொடும் போது சுடும் எனத் தெரியாது. சுட்டவுடன் ஒதுங்கிக் கொள்கிறோம். பிறகு நெருப்பைக் கண்டால் சுடும் எனப் புரிகிறது. இப்படி ஒவ்வொன்றையும் அனுபவம் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என முயன்றால் நம் ஆயுள் காலம் போதாது.    
    எனவே தான் கல்வி கற்க தொடங்குகின்றோம். கல்வி என்பது அனுபவங்களின் தொகுப்பு. நாம் எவ்வாறு வாழ்க்கையை அணுக வேண்டும் என்பதை பழங்காலத்தில் குருகுலக் கல்வி கற்றுத் தந்தது. ஆனால் தற்காலக் கல்வி வெறும் பொருள் ஈட்ட மட்டுமே கற்றுத் தருகிறது. எனவே நாம் நல்லவர்களிடம் இருந்து அனுபவப் பாடங்களைத் கேட்டுத் தெளிய வேண்டும்.
    அதை முதலில் பெற்றோரிடம் இருந்து தொடங்க வேண்டும். தற்காலத்தில் பெற்றோர் சொல் கேட்பது என்பதே குறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. பல வீடுகளில், ‘எல்லா டெசிஷனும் அவ தான் செய்வா! நாங்க ஒன்னும் சொல்ல முடியாது’ என பெற்றோர் சொல்வதைப் பார்க்க முடிகிறது.
    எனவே தான் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றார்கள் நம் பெரியோர்கள். தாய் கோயில் என்றால் தந்தை சொல் மந்திரம் ஆகி விடும். மந்திரம் என்ற சொல்லுக்கு, யார் அதைச் சொல்கிறார்களோ, அது அவர்களைக் காக்கும் என்பது பொருள். எனவே தந்தையின் அனுபவச் சொற்கள் நிச்சயம் நம்மைக் காப்பாற்றும்.  நம் மீதும், நம் எதிர் காலத்தின் மீதும் அக்கறை கொண்டவர் தந்தை. இளம் பருவத்தில் கசப்பாகத் தோன்றினாலும். பிற்காலத்தில் அனுபவ பூர்வமாக உணரும் போது பெரிய உதவியாக இருக்கும் என்பது உலகறிந்த உண்மை. இதையே மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் என்பார்கள்.
    மகா பாரதத்தில் மூத்தவர் பீஷ்மர். சபையில் பாண்டவரை சூது மூலம் தோற்கடித்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் மேலாடையையும் கழற்றச் செய்தான் துரியோதனன். பிறகு திரவுபதியும் சபைக்கு இழுத்து வரப்பட்டாள்.
    துச்சாதனன் மூலம் அவளை அவமானப்படுத்த எண்ணி அவளின் மேலாடையை அகற்றச் சொன்னான். அப்போது அனைவரும் மவுனமாக இருந்தனர். எழுந்து பேச முயன்ற பெரியவர்களையும் பேச விடாது தடுத்தான். யார் சொல்லையும் கேட்கவில்லை. விளைவு, கண்ணனின் கருணையால் திரவுபதி மானம் காக்கப்பட்டது. துச்சாதனன் மயங்கி வீழ்ந்தான். பன்னிரு வருட வனவாசமும், ஓராண்டு மறைந்து வாழும் வாழ்வும் முடிந்த பாண்டவர்களுக்கு முறைப்படியான பங்கைக் கேட்டார்கள். பகவான் கிருஷ்ணரே துாது சென்றார். முறைப்படியான பங்கு இல்லாவிடினும் ஐந்து ஊர்கள், குறைந்த பட்சம் ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்றார்கள். ஊசி முனை அளவு கூட நிலம் கிடையாது என மறுத்தான். விளைவு போர் மூண்டது. பெரியவர் பீஷ்மர் சொன்னதையும் கேட்கவில்லை. கடவுளே வந்து சொன்ன போதும் கேட்கவில்லை துரியோதனன். மகாபாரதத்தின் முடிவை உலகமே அறியும்.
    அதே சமயம் பாண்டவர்களும் அர்ஜுனனும் பகவான் கிருஷ்ணனின் சொல்படி நடந்து வெற்றி கண்டனர். அர்ஜுனன் மூலம் நமக்கு பகவத் கீதை கிடைத்தது. பெரியவர்கள், அனுபவசாலி, ஒழுக்கமுள்ள சான்றோர் வாய்ச் சொற்கள் அத்தனையும் வழுக்கும் நிலத்தில் உதவும் ஊன்றுகோல் போல உதவும் என்கிறார் திருவள்ளுவர்.
    ஸ்ரீராமன் சிறு வயதிலிருந்தே குலகுரு வசிஷ்டரின் சொற்படி நடந்தான். அவரின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டான். அதனால் அவனால் இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாகப் பார்க்க முடிந்தது. முதல்நாள் மாலையில் ராமனை அழைத்து நீ தான் நாட்டிற்கு சக்ரவர்த்தி என்றனர். அவன் மகிழவும் இல்லை. வெறுக்கவும் இல்லை என்பார் கம்பர். மறுநாள் காலையில் கைகேயி தன் மகன் பரதன் நாடாள்வான்.  நீ காட்டுக்குப் போ என்ற போதும் வருத்தமடையவில்லை. அவன் முகத்தில் சிறிதும் வருத்தம் இல்லை. அன்று மலர்ந்த செந்தாமரை போல மலர்ச்சியாக இருந்தான் என்கின்றார் கம்பர்.
    வள்ளுவர் சொல்கின்றார், யார் இன்பம் வந்த போது துள்ளிக் குதிக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் துன்பம் வந்த போது வருந்த மாட்டார்கள். அதற்கு உதாரணம் ராமன். அதற்கு காரணம் அவன் வசிஷ்டர் சொற்கேட்டு நடந்தது தான்.

ஹிந்து சாம்ராஜ்யத்தின் எழுச்சி நாயகர் சத்ரபதி சிவாஜியின் அத்தனை பெருமைக்கும் புகழுக்கும் காரணம் அவரது குருவான சமர்த்த ராமதாசர் ஆவார். அவரின் ஆலோசனைப் படியும், வழிகாட்டுதலின்படியும் தான் சிவாஜியால் மாபெரும் வெற்றிகளைப் பெற முடிந்தது.
    இன்றும் காண்கிறோம். அரசியலிலும் சரி, குடும்பத்திலும் சரி, தொழில் நிறுவனங்களிலும் சரி யாராவது திறமை மிக்க நல்ல மனம் கொண்ட ஒருவரின் ஆலோசனையை பெற்றுச் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயமாகிறது. ஆனால் பதவியும், செல்வமும், செல்வாக்கும் ஒருவருக்கு வந்து விட்டால் பின்னர் அவர்கள் யார் சொல்வதையும் கேட்பதில்லை என்னும் முடிவிற்கு வந்து விடுகிறார்கள். ஆனால் வள்ளுவர் சொல்கிறார். இடித்துச் சொல்லி அறிவுரை கூற ஆள் இல்லாத மன்னர்கள் கெடுப்பவர் யாருமின்றி தானாகவே கெட்டு விடுவார்கள் என்று. எனவே எச்சூழலிலும் பெரியோரின் ஆலோசனை இன்றி செய்யும் செயல்கள் பெரும் வெற்றி பெற்றததாக வரலாறு இல்லை.
    எங்கள் செட்டிநாட்டில் ஒரு வழக்கம் உண்டு. உதவியோ, ஆலோசனையோ,  முக்கிய முடிவு எடுப்பது குறித்தோ ஒருவரிடம்  கேட்டால் உடனே அவரது ஒரே பதில், ‘கலந்து விட்டு சொல்கிறேன்’ என்பது தான். காரணம் உணர்ச்சி வசப்பட்ட சூழலில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. மேலும் ஒரு துறை சார்ந்த விஷயங்கள் தெரியாவிட்டாலும், அது சார்ந்த அனுபவசாலிகளிடம் ஆலோசித்த பிறகு அதற்கான பதிலைக் கூறுவதே வெற்றிக்கான வழி.  
    மேன்மக்கள் சொல் கேட்பதற்கு முதலில் நம்மை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், துாய்மையான மனம் இவை இருந்தால் தான் பெரியவர்களை அணுகி கற்றுக் கொள்ள முடியும்.
    ஒரு ஜென் துறவியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். குருவே... தங்களிடம் ஞானம் பெற வேண்டும் என வந்திருக்கிறேன்.  இதுவரை இந்த இந்த கலைகளை கற்றிருக்கிறேன். பல நாடுகளை சுற்றியிருக்கிறேன். பார்க்காத குருமார்களே இல்லை எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டான். குரு அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் வரச் சொன்னார்.  பெருமிதத்துடன் மறுநாள் வந்தான் சீடன். அவனிடம் ஒரு கப் நிறைய டீ கொண்டு வரச் என்றார். டீயைக் கொண்டு வந்தான். வேறொரு கப்பில் இருந்த டீயையும் அதில் நிரப்பு என்றார். ஏற்கனவே டீ நிரம்பி உள்ளது. மேலும் ஊற்றினால் வழியுமே என்றான்.
    அப்படித்தான் மகனே! ஏற்கனவே உன்னிடம் அகங்காரம் நிரம்பியுள்ளது. நான் என்ன சொன்னாலும் இவ்வளவு தானா என உன் காதில் ஏறாது. வெற்றுக் கோப்பையாக மனதை வைத்துக் கொள். பிறகு வா! அதை ஞானத்தால் நிரப்பலாம் என்றார். ஆம், நாமும் நம்மை எப்போதும் வெற்றுக் கோப்பையாக வைத்துக் கொள்வோம். அதைப் பெரியோர்களின் அனுபவ அறிவால் நிரப்புவோம். வாழ்வில் வெற்றியே காண்போம்.                    
சிதம்பரத்திற்கு இத்தனை பெயர்களா...
கோயில் என்றால் சிதம்பரத்தை குறிக்கும். அங்கு மூலவரும், உற்ஸவரும் ஒருவரே. சிதம்பரத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவற்றை காண்போமா...
1. கோயில் – சிவபெருமான் மீது நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
2. பெரும்பற்றப்புலியூர் – புலிக்கால் முனிவர் இங்கு பூஜை செய்ததால் இப்பெயர் வந்தது.   
3. தில்லை –  தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லை என்று பெயர். (இம்மரங்கள் தற்போது அருகிலுள்ள பிச்சாவரத்தில் காணப்படுகின்றன)
4. திருமூலட்டானம் – எல்லா கோயில்களில் அர்த்தஜாம வழிபாடு முடிந்த பின், அக்கோயிலின் ஆற்றல் அனைத்தும் சிதம்பரத்திற்கு வந்து சேரும். அதனால் திருமூலட்டானம் என்பர்.
5. சிற்றம்பலம் - நடராஜர் நடனமாடும் சபையை ‘சித்சபை’ என்பர். சித் என்றால் ஞானம். சித்சபையை சிற்றம்பலம் என அழைப்பர். அம்பலம் என்றால் மேடை. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என பெயர் பெற்றது.
6. பொன்னம்பலம்
 பராந்தகசோழன் பொன் வேய்ந்ததால் பொன்னம்பலம் என்பர்.
7. பூலோக கைலாயம்
பக்தர்கள் இக்கோயிலை ‘பூலோக கைலாயம்’ என போற்றுவர்.
8. ஆகாயத்தலம்
  பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக உள்ளது.
9. இருதய தலம்
விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரம், திருவானைக்காவல் உந்தி, திருவண்ணாமலை மணிபூரகம், திருக்காளத்தி கழுத்து, காசி புருவமத்தி, சிதம்பரம் இருதய தலமாகவும் போற்றப்படுகின்றன.
10. திருசித்ரக்கூடம்
நடராஜர் சன்னதி அருகே பள்ளிகொண்ட நிலையில், பெருமாள் தனிக்கோயில் கொண்டுள்ளார். இது 108 திவ்யதேசங்களில் 40 வது தலம், வைணவர்களால் திருசித்ரக்கூடம் எனப்படுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar