Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதா கல்யாணம் – 4
 
பக்தி கதைகள்
சீதா கல்யாணம் – 4


தேவர்கள் பூமழை பொழிந்தனர். மேகங்கள் பொன் மழை பொழிந்தன. கடல்கள் ரத்தினங்களை வாரி இறைத்தன. முனிவர்கள் நல்வாழ்த்து கூறினர். மிதிலை நகரமே சீதையின் திருமணத்தை நினைத்து ஆரவாரித்தது. நகரத்து மக்கள் ஆபரணங்கள், சந்தனம், வாசனை தைலம், வெள்ளை முத்துக்கள், தங்கம், ரத்தினங்கள், ஆடைகள் இவைகளை ஒருவருக்கொருவர் வழங்கி கொண்டனர்.  

இடையில் கன்னி மாடத்தில், ராமனையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும், சீதையின் நிலை எப்படி இருந்தது என்று சற்று எட்டிப் பார்க்கலாமா?
அவரையே எண்ணி துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து அஞ்சாதே என்று சொல்லி ஆறுதல் தராத ஆண்மை என்ன ஆண்மையோ! இவ்வாறு ராமனையே எண்ணி ஏங்கும் வேளையில், சீதையின் தோழிகளில் ஒருத்தியான நீலமாலை மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறாள்.  வழக்கப்படி சீதையை கண்டதும் அவள் வணங்கவில்லை. ஆடினாள், பாடினாள். அவளது மகிழ்ச்சியையும் ஆடலையும் கண்ட சீதை உன் ஆனந்தத்திற்கு காரணம் என்ன என்று கேட்கிறாள்.

“யானை, தேர், குதிரை ஆகிய படைகளை கொண்ட அயோத்தியில் அரசாளும் தசரத சக்ரவர்த்தியின் மைந்தன், திருமாலுக்கு ஈடான ஆற்றல் பொருந்தியவன், தன் தம்பியோடும், விஸ்வாமித்திர முனிவனுடனும் இந்நகரை அடைந்து உன் தந்தைக்கு தரப்பட்ட சிவதனுசுவை நொடியில் நாணேற்றி வளைத்தான். அந்த வில் அந்த சபையே நடுங்க முறிந்து விழுந்தது’’ என்றாள்.

சீதையின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. திடீரென ஒரு ஐயம்! வில்லை முறித்தவன் நம் மனம் கவர்ந்தவன்தானோ அல்லவோ? ஆனால் நீலமாலை என்ன சொன்னாள்? ‘‘நேற்று நாம் பார்த்த நாயகன் முனிவருடனும் மற்றும் அவனைப் போலவே இன்னொருவனுடனும் இருந்தான். ஆகையால் நம் காதலன்தான்  வில்லை முறித்திருக்க வேண்டும் என ஓரளவு சந்தேகத்தை தீர்த்துக்கொண்டாள்.  

வில் முறித்த நிகழ்ச்சியின் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருவாறு அடங்கியதும், ஜனகன் முனிவரைப் பார்த்து ‘‘எம்பெருமானே, ஞானப் புதல்வனான ராமனின் திருமணத்தை இன்றே முடிக்கலாமா அல்லது தசரத சக்கரவர்த்தியை அழைத்து அதன்பின் திருமணம் நடத்த வேண்டும் என விரும்புகிறீர்களா?  தங்கள் எண்ணம் போல் செய்யலாம்’’ என்றான்.  முனிவர் ‘‘தசரதன் விரைவாக இங்கே வருவது நல்லது’’ என்று தன் கருத்தை தெரிவித்தான். ஜனகன் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் துாதர்களை அழைத்து, திருமண ஓலை கொடுத்து ‘‘இங்கு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தசரத சக்கரவர்த்தியிடம் சொல்லுக’’ என்று அனுப்பி வைத்தான்.  

திருமண ஓலையுடன் அயோத்தி சென்ற சென்ற துாதுவர்கள் வணங்கி, ‘‘அரசே! உன் புதல்வர்கள் விஸ்வாமித்திரனுடன் சென்ற பிறகு நடந்த செய்தி இது’’ என்று ஆரம்பித்து சிவபெருமானின் வில்லை ஜனகரின் அரண்மனையில் முறித்த நிகழ்ச்சி வரை விளக்கி, ஜனகன் அனுப்பிய ஓலையை அரசனிடம் பணிவுடன் கொடுத்தனர்.  

ஓலையை படிப்பதற்கென்றே உள்ளவன் அந்த ஓலையை மன்னர் உத்தரவு பெற்று படித்தான்.  ஜனகன் தீட்டிய ஓலையில் உள்ள ராமனின் வில்லாற்றல் அறிந்து தசரதன் தோள் பூரித்து, ‘‘ வில்லை முறித்தபோது உண்டான பேரொலிதானா அன்று நாம் கேட்டது?’’ என்று கேட்டான். துாதுவர்களுக்கு சன்மானம் வழங்கி அனுப்பி விட்டு, ‘‘என் முன்னோர் செய்த தவத்தால் பிறந்த ராமனின் திருமணம் அவன் தற்போது தங்கியுள்ள மிதிலை நகரில் நடக்கவிருக்கிறது. அந்த மங்கல நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். மிதிலை நோக்கி நம் படை, பரிவாரம் அனைத்தும் செல்லட்டும் என முரசு அறிவியுங்கள்’’ என்று ஆணையிட்டான்.  

சீதைக்கு திருமணம் எனக் கேள்வியுற்ற மிதிலை மக்கள் போலவே ராமனுக்கு திருமணம் என்றறிந்த அயோத்தி மக்களும் ஆனந்தத்தில் ஆரவாரித்தனர்.   

முரசறிவிப்பைக் கேட்டவுடன் சேனை வீரர்கள் மகிழ்ச்சியுடன் அணிவகுத்தார்கள். வெற்றிடம் ஏதும் எல்லை எனும்படி கடல் போல சேனை எழுந்தது.  யானைகள், குதிரைகள், தேர்கள், சிற்றரசர்கள், அயோத்தி மக்கள் அனைவரும் மிதிலை நோக்கி நகர்ந்தனர்.

கங்கையைக் கடந்து, மிதிலை நகரை நெருங்கியது.  தசரதன் வரவை அறிந்த ஜனகன், ஊர் எல்லையிலேயே வரவேற்று அழைத்து வர பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

ஜனகனை தொலைவிலேயே கண்டு விட்ட தசரதன் உடனே தனது பெரிய தேரிலிருந்து இறங்கி, சேனையை பின்னால் நிறுத்தி விட்டு, தான் மட்டும் முன்னால் சென்றான். ஜனகன் தசரதனை தழுவி வரவேற்று தன்னுடன் வந்திருந்த முக்கிய மந்திரிகள், பிரமுகர்களையும் அறிமுகம் செய்தான்.  அதுபோலவே,  தசரதன் ஜனகனுக்கு தன்னுடைய முக்கியஸ்தர்களை அறிமுகம் செய்தான்.  பிறகு, தசரதன் ஜனகனை தன்னுடைய தேரில் ஏறிக்கொள்ளுமாறு விண்ணப்பித்துக்கொண்டான். ஜனகனும் அவ்வாறே ஏறினான்.  தசரதன் முக மலர்ந்து ஜனகனை தழுவிக்கொண்டான்.  தேர் மிதிலை நோக்கி நகர்ந்தது.

செல்லும்பொழுது எதிரே இன்னொரு தேரில் ராமனும், லட்சுமணனும் தந்தையை அழைக்க எதிர் நோக்கி வந்தனர்.  தசரதனை நெருங்கியதும் இருவரும் தன் தந்தையை வணங்கினர்.  தசரதன் ராமனை தழுவிக்கொண்டான்.  பிறகு அயோத்தியில் இருந்து வந்திருந்த பரதனும், சத்ருக்கனனும், ராமனை வணங்கினார்கள்.  

தசரதன் சொற்படி ராமன் தசரதனின் சேனையை அழைத்துக்கொண்டு முன்னே தேரில் சென்றான்.  தம்பிகள் மூவரும் ராமனுக்கு பக்கத்தில் குதிரைகளின் மீது அமர்ந்து சென்றார்கள்.  

தேரில் செல்லும் பொழுதே ஜனகன் தசரதனிடம் ராமனின் குணங்களையும், அவனது போர் திறமையைப் பாராட்டியதோடு, அவனை மருமகனாக அடைவதில் பெருமையும், அதுபோல் சீதையின் அதிர்ஷ்டத்தையும்  சிலாகித்து பேசிக்கொண்டு வந்தான்.  அதைக்கேட்டு தசரதன் பெருமிதம் கொண்டான்.

ராமன் தேரில் வந்து கொண்டிருப்பதை காண மிதிலை நகர பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு தெருவில் குவிந்தார்கள். இதுதான் தற்காலத்தில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆயிற்றோ?

திருமாலின் அவதாரமான ராமன் வீதியில் வந்து தம் வீடுகளை நெருங்குவதால், பேதை முதல் பேரிளம் பெண்கள் வரையுள்ள ஏழுபருவத்துப் பெண்கள் மலரம்புகளை மன்மதன் ஏவிவிட வந்து சேர்ந்தார்கள்.  

பெண்களின் ஏழு பருவங்கள்:

1) பேதை
2) பெதும்பை
3) மங்கை
4) மடந்தை
5) அரிவை
6) தெரிவை
7) பேரிளம்பெண்

நல்ல நீரைக் கண்டால் அதை குடிக்க வரும் மான் கூட்டம் போல், பெண்கள் யாவரும் தங்கள் ஆடை அணிகள் அவிழ்வதை கூட பொருட்படுத்தாமல் ராமனைக் காண ஓடி வருகிறார்கள்.  

வீதி வழியே தாவும் குதிரைகள் பூட்டிய தேரில் செல்கையில் அங்குள்ள மகளிர் கண்களில் ராமனது உருவமே நிரம்பி விளங்கியதால் அவன் யாவருக்கும் கண்ணன் என்னும் பெயரை உடையவன் போல் விளங்கினான். திருமாலுக்கு கண்ணன் என்னும் பெயருக்கேற்ப விளங்கி அனைவரது கண்களிலும் நிறைந்தான்.

ராமனைக் கண்டோர் நிலை என்ன?

பரம்பொருளின் உருவத்தை தனித்தனியாக படைத்துக் கொண்டு அதை மட்டுமே கொண்டாடும் சமயவாதிகளைப் போல், ராமனைக் காண வந்த பெண்களில், ராமனின் தோளை முதலில் கண்டவர்கள், முடிவுவரை வேறு உறுப்புகளை காணாது அத்தோளையே தொடர்ந்து கண்டார்கள்.  தாமரை போன்ற பாதங்களையே முதலில் பார்த்தவர்கள், அப்பாதங்களையே பார்த்தார்கள்.  பெரிய கைகளை முதலில் தரிசித்தவர்கள் அந்தக் கைகளையே தரிசித்தார்கள்.  ராமனுடைய திருவுருவம் முழுவதும் யார்தான் கண்டார்கள்?

தன்னைக் கண்ட பெண்கள் அனைவரும், இத்தகைய காமநிலை எய்திக் கலங்கிட, ராமன் வசிட்டனும் விஸ்வாமித்திரனும் வீற்றிருந்த அரசவையை தம்முடன் வந்த அரசர் கூட்டத்துடன் அடைந்தான்.

அதன்பின் வந்த தசரதனும் தன் சுற்றத்தாருடன் மண்டபத்தை அடைந்து முனிவர்களின் திருவடிகளை வணங்கி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தான்.  மகளிர்கள் குழலிசையோடு பொருந்தும் முறையில் தசரதனை வாழ்த்தும் பல்லாண்டுப் பாடல்கள், மழலையைப் போல இனிதான யாழின் இசையோடு பொருந்தி எங்கும் நிறைந்தன.  

ஜனகன் மகிழ்ச்சியோடு வந்தவர்களை உபசரித்தான். அவன் காட்டிய அன்பு தாழ்ந்த நிலையில் உள்ளவர்க்கும், மாப்பிள்ளையான ராமனுக்கும் ஒரே மாதிரி இருந்தது.  

அப்போது வசிஷ்டன் ஜனகனை பார்த்து, ‘‘ஜானகியை அழைத்து வருக‘‘ என சொன்னான். ஜனகன் ‘‘சீதையை இங்கு அழைத்து வாருங்கள்‘‘ என்று அங்கிருந்த மகளிருக்கு ஆணையிட்டான். அவர்கள் வேகமாகச் சென்று சீதையின் தோழியர்களிடம் அரசனின் கட்டளையை சொன்னார்கள்.  

சீதையை அழைத்து வரச்சொல்லி தோழியரிடம் சொல்லும்பொழுது அவர்கள் சீதையை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.  சீதைக்கு அலங்காரம் செய்வது அமிழ்ததுக்கு இனிமை சேர்ப்பது போன்ற அறியாமையின் பாற்பட்டது என்கிறான் கம்பன். ஆனாலும் தோழியர் விடுவதாக இல்லை!  தலை கூந்தலிலிருந்து பாதம் வரை பொருத்தமான ஆபரணங்களை சூட்டினர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar