Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் போட்ட தடுப்பூசி
 
பக்தி கதைகள்
அவள் போட்ட தடுப்பூசி


பொற்றாமரைக் குளத்தில் அமர்ந்திருந்தபோது முன்னால் உருவெளிப்பாடாகத் தோன்றினாள் பச்சைப்புடவைக்காரி.
“உனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைக்கிறேன்”
“இதுவரை நான் கொண்டுவந்த பிரச்னைகளுக்குக் குறிப்பாகத் தீர்வு சொன்னீர்கள். இன்று ஒரு நல்லவனின் மொத்த வாழ்க்கையில் உங்கள் அன்பு அவனை எப்படி வழிநடத்திச் சென்று காத்தது என்பதைக் காட்டியருளவேண்டும்”
“அவ்வளவுதானே! அங்கே நடக்கும் காட்சியைப் பார்’’
நல்லவர்களின் மகனாகப் பிறந்தான் ராகவன். படித்து முடித்ததும் தன் தந்தையின் தொழிலில் நுழைந்து அதை இன்னும் சிறப்பாக நடத்தினான்.
காலாகாலத்தில் மாலதியைக் கரம்பிடித்தான். இரண்டு மகள்கள். நிறைய செல்வம். நிறைவான வாழ்க்கை.
ராகவனுக்கு நாற்பத்தி ஐந்து வயதானபோது அவனுடன் பள்ளியில் படித்த ராஜனைச் சந்தித்தான். ஒருநாள் ராஜன் ராகவனின் அலுவலகத்திற்கு வந்தான்.
“ஒரு பெரிய கம்பெனி ஷேர் பத்தி தகவல் கிடைச்சிருக்கு. இன்னிக்கு ஐநுாத்திச் சொச்சத்துக்கு விக்கற ஷேர் நாலே நாள்ல ஆயிரத்தி ஐநுாறு ரூபாய்க்கு விக்கப் போவுது. நான் என் பணம் முப்பது லட்சத்த போட்டிருக்கேன். கைவசம் பணம் இருந்தா கொடு. பல மடங்காத் திருப்பித்தரேன்”
பங்கு விற்பனையின் நெளிவு சுளிவுகளை எல்லாம் மணிக்கணக்காக விளக்கினான் ராஜன்.
முப்பது லட்சத்தைக் கொடுத்தான் ராகவன்.
“கெடச்ச தகவல் உண்மைன்னா மூணு மடங்கு லாபம் கிடைக்கும். அது பொய்யா இருந்தா போட்ட பணத்த திருப்பி எடுத்துரலாம்”
ஐந்தே நாட்களில் ராகவன் போட்ட முப்பது லட்சம் ஒரு கோடி ரூபாய் ஆனது. ராஜன் மொத்த பணத்தையும் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டான்.
“இதுதாண்டா ஷேர் மார்க்கெட். நான் உனக்கு அட்வைஸ் பண்றேன். நாலே வருஷத்துல உங்கிட்ட ஐநுாறு கோடி இருக்கும் பாரேன்!”
ஆசையில் மயங்கினான் ராகவன். முதல் ஆறு மாதங்களில் கோடிக்கணக்கில் லாபம் வந்தது. ஒரு கூட்டுத் தொழில் பத்திரத்தில் ராகவனின் கையெழுத்தை வாங்கினான் ராஜன். ஓரிரு மாதங்களில்  ராஜன் தலை மறைவாகிவிட்டான்.
பிரச்னையே பிறகுதான் ஆரம்பித்தது.  ராகவனுக்கு நிறைய வக்கீல் நோட்டீஸ்கள் வர ஆரம்பித்தன.
ராகவனும் ராஜனும் சேர்ந்து நடத்திய கூட்டு நிறுவனத்தின் பெயரில் பல கோடிகள் கடன் வாங்கியிருந்தான் ராஜன். அந்தக் கடனெல்லாம் ராகவனின் தலைமேல் விழுந்தது. அதிர்ச்சி தாங்காமல் மாலதிக்கு மாரடைப்பு வந்துவிட்டது.  ராகவன் ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தான்.
ராகவனுக்கு அறுபது  வயதாகும் போதுதான் வழக்கில் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. பங்கு மார்க்கெட்டில் சம்பாதித்த பல கோடிகளில் வழக்கிற்காக சில லட்சங்கள்தான் செலவாகியிருந்தன.
காலாகாலத்தில் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தான். பேரன் பேத்திகள் வந்தார்கள். வீட்டில் மகிழ்ச்சி திரும்பியது. அந்த மகிழ்ச்சியில் மாலதிக்கும் பூரண குணமாகிவிட்டது.
தன் வாழ்க்கையின் கடைசி பதினைந்து வருடங்களை மகிழ்ச்சியாக வாழ்ந்தான் ராஜன். 75வது வயதில் ஒருநாள் இரவு துாங்கப்போனவன் காலை எழுந்திருக்கவேயில்லை. நிறைவான வாழ்க்கை, நிம்மதியான சாவு என்று எல்லோரும் சொன்னார்கள்.
ராகவனின் ஆன்மா பச்சைப்புடவைக்காரியின் முன் நிறுத்தப்பட்டது.
“ஒரு கேள்விக்கு மட்டும் எனக்கு விடை தெரியவில்லை தாயே”
“கேள்”
“என் கர்மக் கணக்கைப் பார்த்தேன். எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து கடைசிப் பத்து பிறவிகளில் நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. யாரையும் நோகடித்ததில்லை. பிறகு ஏன் வாழ்க்கையில் பதினைந்து வருடங்களை நான் வலியிலும் வேதனையிலும் கழிக்க வேண்டியிருந்தது? கையில் இருப்பதை எல்லாம் இழந்து தெருவிற்கு வந்து விடுவோமோ என்ற நடுக்கம், மனைவி இறந்துவிடுவாளோ என்ற  பயம்.  இதையெல்லாம் எனக்கு ஏன் கொடுத்தீர்கள் தாயே!”
“நீ பாவம் செய்யாமல் இருக்க உனக்கு நான் போட்ட தடுப்பூசிதான் நீ அனுபவித்த வலியும் வேதனையும்.”
“புரியவில்லையே தாயே!”
“உன் வலிக்கும் வேதனைக்கும் காரணம் யார்?”
“அந்த நம்பிக்கைத் துரோகி ராஜன்தான்”
“அவனை அனுப்பியதே நான் தான். அவன்தான் நீ அழியாமல் பார்த்துக்கொண்டான்.”
“என்ன சொல்கிறீர்கள் தாயே”
“நான் ராஜனை அனுப்பியிருக்காவிட்டால் உன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று கோடி காட்டுகிறேன் பார்.”
ராஜன் என்ற வில்லன் இல்லாத ராகவனின் வாழ்க்கை திரைப்படமாக அந்த ஆன்மாவின் கண் முன்னால் ஓடியது.
ராகவனுக்கு 45 வயது. தொழிலில் கொழித்துக்கொண்டிருந்தான். இன்னிசையாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் அபஸ்வரமாக உள்ளே நுழைந்தாள் நேகா.
நேகா வடநாட்டுப் பெண். ராகவனுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகள். ராகவனின் நிறுவனம் நேகாவின் நிறுவனத்திற்கு ஆண்டொன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்குமேல் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தது.
எப்போதாவது நேகா ராகவனைப் பார்க்க வருவாள். பத்து நிமிடம் தொழில் சம்பந்தமாகப் பேசிவிட்டுப் போய்விடுவாள்.
ஒருமுறை ஜெர்மனியில் நடந்த வர்த்தக மாநாட்டில் எதேச்சையாக நேகாவைப் பார்த்தான் ராகவன். வெளிநாடு. கேட்க ஆள் இல்லை. இருவருக்கும் நெருக்கமான உறவு உண்டாகிவிட்டது. அந்த உறவு இந்தியா வந்த பின்னும் தொடர்ந்தது.
பெரிய இடத்து விஷயம் என்பதால் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ராகவனின் மனைவி தன் மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். விவாகரத்தும் வாங்கிவிட்டாள். நேகா அவள் கணவனை விவாகரத்து செய்ய முயன்றுகொண்டிருந்தாள்.
இந்த நிலையில் திடீரென நேகாவின் கணவன் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டான். கொலைப்பழி ராகவனின்மேல் விழுந்தது. ராகவன் சொன்னதை யாருமே நம்பவில்லை. நேகா அப்ரூவராக மாறி ராகவன்மேல் பழியைப் போட்டாள்.
ராகவனுக்கு ஐம்பத்தியைந்து வயதானபோது  தீர்ப்பு வந்தது. ஆயுள் தண்டனை கொடுத்துவிட்டார்கள். மேல் முறையீடும் தோற்றுப்போனது. சிறையில் ஆயுள் கைதியாக இருந்த போது ராகவனுக்கு மாரடைப்பு வந்து இறந்து போனான்.
“ஆசையால் உந்தப்பட்டு அவமானப்பட்டு, கொலைப்பழியைச் சுமந்து, குடும்பத்தை இழந்து, ஊரார் கேலி செய்ய சிறையில் அனாதையாக நீ சாகவேண்டும் என்பதுதான் விதி. நேகாவைத் தவிர்த்திருந்தால் நீ தப்பித்திருக்கலாம். ஆனால் உன்னால் அது முடியாது எனக்கு முன்னாலேயே தெரிந்துவிட்டது.
“அதனால்தான் நான் ராஜனை அனுப்பி வைத்தேன். ராஜன் சம்பந்தப்பட்ட வழக்கிலும் உன் மனைவியின் உடல் நலப் பிரச்னையிலும் மூழ்கியிருந்த உனக்கு நேகா உன் மேல் தொடுத்த ஆசைக் கணைகள் தெரியவில்லை. அதனால்தான் நீ அந்த ஆபத்திலிருந்து தப்பினாய். இதனால் நேகாவும் தப்பினாள். கணவனை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு நல்லவனை மணந்துகொண்டு நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். நேகாவின் கணவனும் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
ராஜன் என்ற தீமை இல்லையென்றால் உன் வாழ்க்கை நாசமாகப் போயிருக்கும். உன்னைக் காப்பாற்ற உனக்குப் பெண்ணாசை நோய்வராமல் இருக்க நான் போட்ட தடுப்பூசிதான் ராஜன்”
ராகவனின் ஆன்மா பச்சைப்புடவைக்காரியில் கால்களில் விழுந்து கதறியது.
நானும் கதறிக்கொண்டிருந்தேன்.
“நீ ஏனப்பா அழுகிறாய்?”
“அரைநொடிப் பொழுதில் ஆயிரம் பிரபஞ்சங்களை உருவாக்கும் உங்கள் ஆற்றலை ஓரளவாவது புரிந்துகொள்ளலாம். பண்டாசுரன் போன்ற அரக்கர்களை அழித்த உங்கள் வீரத்தைக் கொஞ்சமாவது அறிந்துகொள்ளலாம். கோடானு கோடி ஆன்மாக்களில் ஒன்று துன்பப்படக்கூடாதே  என்று ராகவனின் வாழ்க்கையில் ராஜனை நுழைத்து அவனைக் காப்பாற்றிய உங்கள் அன்பை யாராலும் புரிந்துகொள்ள முடியாது தாயே!”
“அதையும் புரிந்து கொள்ளும் சக்தியை உனக்குத் தரட்டுமா?”
“வேண்டாம் தாயே! அந்த சக்தி வந்துவிட்டால் உங்களுடன் ஒன்றிவிடுவேன். எனக்குக் காலமெல்லாம் உங்கள் கொத்தடிமையாக இருக்கும் அந்த உன்னத வரம்தான் வேண்டும்”
அழகாகச் சிரித்துவிட்டு ஆகாசத்தில் மறைந்தாள் அன்பரசி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar