Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒய்யாரமான ஓவியக்காரி
 
பக்தி கதைகள்
ஒய்யாரமான ஓவியக்காரி

மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. பேசியவர் என் நண்பரான மருத்துவர் ராஜேஷ்.

“ஒரு எமர்ஜென்சி கேஸ். பேரு நரேன். வயசு நாற்பது. ரயில்வேல வேலை; கல்யாணமாகி குழந்தை இருக்கு. தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்காரு. போராடிக் காப்பாத்திட்டோம். அவரிடம் கொஞ்சம் பேசிப் பாக்கறீங்களா?”
“நான் என்ன மனநல ஆலோசகரா... எப்படி போய் அவரிடம்?”  
இருந்தாலும் பச்சைப்புடவைக்காரியை நம்பி நரேனைப் பார்க்கச் சென்றேன். அவரிடம் பேசுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

“ரயில்வேல வேலை பார்த்தேன் சார். என்னுடைய மேலதிகாரி ஊழல் செய்தாரு. கண்டிச்சேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மேலிடத்திற்கு கடிதம் எழுதினேன். செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிச்சாரு. ஆனா என்னைப் பழி வாங்கிட்டாரு.  
ஆகாத டிப்பார்ட்மெண்ட்டுக்கு மாத்தி விட்டாங்க. பொழுதே போகாம எப்போதும் உக்காந்து பேப்பரில் கிறுக்கிக்கிட்டு இருக்கேன். என்ன தப்பு செஞ்சேன் சார்? ஊழலக் கண்டிச்சது தப்பா? அதான்... நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.” என்று சொல்லி அழுதார். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.  

கரகரத்த குரலில் நரேன், “எனக்குப் பச்சைப்புடவைக்காரி தான் எல்லாம். அவ ஏன் என்னை சோதிக்கணும்?”

நேரமாகி விட்டதை ஜாடையாக தெரிவித்தார் மருத்துவர் ராஜேஷ்.  
“நரேன் உன் கேள்விக்குப் பதில் கெடைச்சாத் திரும்பியும் வருவேம்ப்பா” என்று சொல்லி விடைபெற்றேன்.

மறுநாள் வங்கியில் டோக்கனை வாங்கி விட்டு நின்றேன்.

“ஐயா..இந்தச் சலானை எழுதிக் கொடுங்களேன்.”  ஒரு பெண் கேட்டாள்.

ஒரு ஓரத்தில் கிடந்த மேஜைக்கு அழைத்துச் சென்றாள். நானும் எழுத ஆரம்பித்தேன்.

“ நிறுத்துங்கள்; நரேன் பற்றி பேசவே அழைத்தேன்”

சட்டென நிமிர்ந்தேன். ஆகா பச்சைப்புடவைக்காரி... வணங்கினேன்.

“நரேனின் பிரச்னை இன்று பலருக்கும் இருக்கிறது. ஒழுங்காக வாழ்ந்தும் தண்டனை கிடைப்பது ஏன் எனக் கேட்கிறார்கள்”

“ஆம் தாயே!”

“இப்போது ஒரு காட்சியை உனக்கு காட்டுகிறேன். பார்”

நாட்டின் சிறந்த ஓவியர் அவர். மன்னரின் ஆதரவு பெற்ற நல்ல மனிதர். அன்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

ஒருநாள் இளைஞன் ஒருவன் ஒரு பிரச்னைக்கு உதவி கேட்டு அவரிடம் வருகிறான்.   

அந்த இளைஞன் கலைகளில் ஆர்வம் மிக்கவன்; ஜமீன்தார் ஒருவரது மகளின் காதல் வலையில் விழுந்து விட்டான். விஷயம் தெரிந்த ஜமீன்தார் கொதித்தெழுந்தார். ஊரார் கூடிப் பேசினார்கள்.

இளைஞனுடைய படைப்பு ஒன்றை – எழுத்தோ, கவியோ, ஓவியமோ, இசையோ – ஆயிரம் வராகன்களுக்குக் குறையாமல் விற்க முடிந்தால் திருமணத்திற்கு சம்மதிப்பதாகச் சொன்னார் ஜமீன்தார்.  

அவனது படைப்புக்கு யாரும் அந்தளவுக்கு  பரிசு தர மாட்டார்கள் என்பதால் ஓவியரின் உதவியை நாடியிருந்தான் அவன்.

“என் படைப்பை உன்னுடையதாகச் சொல்லி விற்க நினைக்கிறாயா? அது ஒருபோதும் நடக்காது” என்றார் ஓவியர்.

இறப்பதை தவிர வழியில்லை என்று சொல்லி இளைஞன் அழுதான். மனம் இளகிய ஓவியர், “மனதில் தோன்றுவதை வரைந்து விட்டு வா; நாளை பார்க்கலாம்” என்றார்.

இளைஞன் இரு தடியான வளைந்த கருப்புக் கோடுகளை வரைந்து வந்தான்.  

அதன் பின் ஓவியர் ஒரு பெண்ணின் படத்தை இரண்டு நாட்களில் வரைந்தார்.

தான் வரைந்ததை ஏலமிட ஏற்பாடு செய்தார் ஓவியர்.  
ஜமீன்தாரையும் அதற்கு வரவழைத்தார்.

யாருமே ஒரு வராகனுக்கு மேல் கேட்கவில்லை. “திருஷ்டி பொம்மையை விடக் கேவலமாக இருக்கிறது” என்று கூட சிலர் விமர்சித்தனர்.

“ஆக என் ஓவியத்தின் விலை ஒரு வராகன் தான் என்று சொல்லி விட்டீர்கள். இப்போது இந்த இளைஞனின் ஓவியத்தை என் ஓவியத்துடன் இணைத்து முழுமையாக்க பார்க்கிறேன். அதன் பின் ஒரு வராகனுக்கு மேல் விலை கிடைத்தால் அது இந்த இளைஞனைச் சேரும். அந்த விலை ஆயிரம் வராகனுக்கும் அதிகமானால் இவனை மருமகனாக ஏற்கத் தாயாரா?” என ஜமீன்தாரிடம் கேட்டார் ஓவியர். அவரும் சம்மதித்தார்.

இளைஞன் வரைந்த கருப்புக் கோடுகள் வெட்டியெடுக்கப்பட்டு, ஓவியர் வரைந்த ஓவியத்தில் சரியான இடத்தில் ஒட்டப்பட்டது.
ஐந்தே நிமிடத்தில் ஓவியங்கள் இணைந்தன. திரைச்சீலை விலக்கப்பட்டதும் பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.  மீண்டும் ஏலம் தொடங்கியது. இந்த முறை ஐயாயிரம் வராகன்களுக்கு ஓவியம் விற்கவே, இளைஞனின் காதல் வென்றது.

ஓவியர் செய்த உத்தி இது தான். அவர் ஒரு அழகான பெண்ணின் படத்தை வரைந்திருந்தார். ஆனால் அதில் அவளுக்கு புருவங்கள் வரையவில்லை. அதனால் கேலிக்குரியதாக இருந்தது. அந்த இளைஞன் வரைந்த கோடுகளை அப் பெண்ணின் புருவங்களாக ஒட்டியவுடன் பேரழகியாக காட்சியளித்தாள். ஓவியம் நல்ல விலைக்கு விற்று விட்டது.

பச்சைப்புடவைக்காரி தொடர்ந்தாள்.

“ஆயிரக்கணக்கான தேவதைகள் கடவுளின் கட்டளைகளைச் சுமந்தபடி அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கிறார்கள். சில தேவதைகள் ஒன்றும் செய்யாமல் கடவுளின் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள். கடவுளின் கட்டளையைத் தாங்கிக் கொண்டு பறப்பது மட்டும் சேவையில்லை; அவன் ஆணைக்காகக் காத்திருப்பதும் சேவை தான் என்பதை புரிய வை.

இன்று பொழுது போகாமல் செய்யும் கிறுக்கல்கள் பிற்காலத்தில் கேலிச்சித்திரங்களாகப் புகழ் பெறும்.  பெரும் கலைஞனாக வரப் போகிறான் அவன். தற்கொலை எண்ணம் இனி அவனுக்கு வராது. எதிர்காலத்தில் நன்றாக வாழ்வான்”

“அது சரி நீ ஏனப்பா அழுகிறாய்?”

“தாயே, நாங்கள் செய்வது எல்லாம் வெறும் கிறுக்கல்கள் தான். நாங்கள் செய்யும் வேலை எல்லாம்  இளைஞன் வரைந்த அர்த்தமற்ற கருப்புக்கோடுகள் போலத் தான். நீங்கள் தான் உங்கள் அன்பால், படைப்பாற்றலால் கோடுகளை அழகிய பெண்ணின் புருவங்களாக மாற்றுகிறீர்கள். அந்த இளைஞன் வரைந்த கருப்புக் கோடுகளை ஏலம் விட்டால் காலணா கூட பெறாது. அருள் என்னும் உங்களின் ஓவியத்தின் ஒரு பகுதியாக எங்கள் பணி இருந்தால் அதற்கு அர்த்தம் உண்டு.  கருப்புக் கோடுகளை வரைந்து விட்டு அகந்தையில் ஆடும் எங்களைக் காத்தருள வேண்டும் தாயே!” கலகலவென சிரித்தாள் பச்சைப் புடவைக்காரி. வங்கி ஊழியர் என் டோக்கன் நம்பரைச் சொல்லி அழைத்தார். அந்த ஒய்யாரமான ஓவியக்காரி சட்டென்று மறைந்தாள். நடந்ததை நரேனிடம் தெரிவிக்க புறப்பட்டேன். 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar