Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நேர்மைக்கு அழிவில்லை
 
பக்தி கதைகள்
நேர்மைக்கு அழிவில்லை

பொதுப்பணித்துறை ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் ’பச்சத்தண்ணி’  பத்மநாபன். ஊழல் புரையோடிய துறையில், பச்சத் தண்ணீர் கூட பிறரிடம் வாங்கி குடிக்காதவர் என்பதால் பெற்ற பட்டப்பெயர் இது. நோய்வாய்ப்பட்டு உயிர் பிரியும் நேரத்தில் கடவுளை பிரார்த்தித்து விட்டு பிள்ளைகளை அருகில் அழைத்தார். “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும்  தேவைகளை குறைத்து நேர்மையுடன் வாழ வேண்டும்” என தழுதழுத்தார். இரு மகன்கள் அமைதியுடன் கேட்க, கடைசி மகள் பிரியா மட்டும் வெடித்தாள். அரசு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் அவளுக்கு அப்பா மீது கோபம். “அப்பா. உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நயாபைசா கூட  கிடையாது. உங்கள் அறிவுரைகளை எங்களால ஏற்க முடியாது. ஊழல் பெருச்சாளிகள் என்று நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் பல தலை முறைக்கும் சொத்து சேர்த்திருக் கிறார்கள். ஆனால் நாம வாடகை வீட்ல குடியிருக்கோம் ஸாரி. உங்க நேர்மையால நாங்கள் பட்டதெல்லாம் போதும். இனி எங்கள் வழியை நாங்க பாத்துக்கிறோம்” என்றாள்.

அவளை  பரிதாபமாக பார்த்த அவரது உயிர் பிரிந்தது. காலங்கள் உருண்டன. தட்டுத் தடுமாறி படிப்பை முடித்த பிரியா புகழ் மிக்க கட்டுமான நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்தாள். தகுதியுடைய ஒருவரை ஏற்கனவே தேர்ந்தெடுத்தாலும், நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் சிலர் ஒப்புக்காக நேர்காணலை நடத்தினர். பிரியாவின் முறை வந்ததும் அறைக்குள் சென்றாள். அவளது விண்ணப்பத்தை பார்த்த ஒருவர் “உன் அப்பா பத்மநாபன் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவரா?” என்றார். “ஆமா சார்” உடனே நிறுவனத்தின் தலைவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பிரியாவிடம்,“உங்கப்பாவுக்கு ’பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா?” ஆமாம் சார்” என்றாள் கூச்சமுடன். “ஒ இந்தக் காலத்துல அவரை மாதிரி நல்லவங்களை பார்க்க முடியாதும்மா இந்த நிறுவனம் இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன்.

என்னைவிட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொல்லியும், உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அதை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை தரலேன்னா இன்னைக்கு இந்த நிறுவனம் இருக்காது. ஏன்னா என் சொத்தையெல்லாம் அடகு வெச்சு இதை ஆரம்பிச்ச நேரம் அது. அந்த  காண்ட்ராக்ட் மூலமாத் தான் நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில நிக்க முடியுது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு மாறுதல் ஆயிட்டார்.” “அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா யூ ஆர் செலக்டட். நாளைக்கே சேர்ந்து கொள்.” என்றார். அந்நிறுவனத்தின் மனித வளப்பிரிவின் தலைமை அதிகாரியாக  வேலையோடு,  பல சலுகைகள். கனவிலும் பிரியா எதிர்பார்க்காதது கிடைத்தது.

நிறுவனத்தில் நல்ல பெயர் எடுத்தாள் பிரியா. இதற்கிடையே சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பாளர் ராஜினாமா செய்யவே, அந்த வாய்ப்பு பிரியாவுக்கு வழங்கப்பட்டது. மாதம் பத்துலட்ச ரூபாய் சம்பளம், கார், வீடு என வசதிகள் கிடைத்தன. கடின உழைப்பால் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள்.  பத்திரிகை ஒன்றின் பேட்டியில்,“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?”கேட்ட போது பிரியா மனம் உடைந்து அழுதாள். “இது எல்லாம் என் அப்பா எனக்கு இட்ட பிச்சை. அவர் இறந்த பிறகு தான் இதனை நான் உணர்ந்தேன். ஏழையாக வாழ்ந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் அவர் கோடீஸ்வரராக இருந்தார்” “அதுக்கு ஏன் இப்போ அழறீங்க?” “என் அப்பா இறந்த போது அவரது நேர்மையை அவமதித்தேன்.
என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என நம்புகிறேன்.  இன்று நானிருக்கும் நிலையை அடைய நான் ஏதும் செய்யவில்லை. அவரது தியாகத்தால் இந்த வளர்ச்சியை சுலபமாக எட்டி விட்டேன்”“அப்போது உங்கள் அப்பாவின் எண்ணத்தை இன்று அடியொற்றி செல்கிறீர்களா?”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவரது படத்தை பெரிதாக வைத்திருக்கிறேன். கடவுளுக்கு பிறகு  எல்லாம் எனக்கு அப்பா தான்.” கண்ணீரை துடைத்தபடி சொன்னாள். “ நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா?” “உண்மையான நல்லபெயரை சம்பாதிப்பது என்பது மிக கடினம். அதன் வெகுமதி உடனே கிடைப்பதில்லை. ஆனால் அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு  நிலைத்திருக்கும்.  நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, தீமையைக் கண்டு அஞ்சுவது, கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை – இவையெல்லாம் மனிதனை முழுமையாக்குகின்றன. உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள்.  “பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதைவிட புண்ணியத்தை சேர்க்க வேண்டும்”  என அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்வார்களே. அது சத்தியமான உண்மை. நேர்மையாக   வாழ்ந்தால் கண்ணீர் தான் பரிசு என கலங்காதீர்கள். நேர்மை ஒன்றே உங்கள் குடும்பத்தை, நாட்டைக் காப்பாற்றும். நேர்மையாக பணிபுரிவோம். லஞ்சம் இல்லாத   சமுதாயத்தை உருவாக்குவோம் என்றாள் பிரியா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.