Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆத்ம ரகசியம்!
 
பக்தி கதைகள்
ஆத்ம ரகசியம்!

ஆத்ம ரகசியம் அறிய விரும்பிய நசிகேதன், தந்தை வாசஸ்ரவ முனிவர் நடத்திய யாகத்தில் விருப்பத்தோடு இடப்பட்டு, யமலோக வாசலில் வந்து நின்றான். அங்கிருந்த யமகிங்கரர்கள், அவன் கேட்ட கேள்வியால் அதிர்ந்தார்கள். அதில் ஒரு கிங்கரன், நசிகேதனிடமே ‘ஆத்ம ரகசியம் என்றால் என்ன?’ என்று திருப்பிக் கேட்டு தன் அஞ்ஞானத்தை காட்டிக் கொண்டான். நசிகேதனும் புரிந்துகொண்டான். “நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. பேசுவதால் பயனுமில்லை. உயிரான ஆத்மாவின் நிர்வாக அதிகாரியான எமதேவனையே காண விரும்புகிறேன் - என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்றான். கிங்கரர்கள் சற்றும் - ஏதிர்பாராத பதில் அது. “அப்படி எல்லாம் அவ்வளவு சுலபத்தில் அவரைப் பார்க்க முடியாது. பார்த்தாலும் பயந்து விடுவாய் -வேண்டாம் விட்டு விடு....” என்றான் ஒரு சிங்கரன். இப்படி என்னிடம் பேசுவதை நீங்கள் விடுங்கள்” என்றான் நசி, கடுமையான குரலில். “வேண்டாம் சிறுவனே.. இது ஒன்றும் பூலோகமல்ல - நீ அடம் பிடித்தால் நடப்பதற்கு இது எமலோகம்...”

“சிறுவன் என்பதால் மிரட்டினால் மடங்கி விடுவேன் என்று நீங்களும் கருதி விடாதீர்கள். எனக்கு ஒரே நோக்கம் தான் ... அது எம தரிசனம்.” -நசிகேதனின் ஆணித்தரமான பதிலைத் தொடர்ந்து அந்த கிங்கரர்கள் என்னென்னவோ செய்து பார்த்தனர். நாட்கள் கடந்ததுதான் மிச்சம்! நசிகேதன் ஒரு யோகி போல ஒரு ஓரமாய் போய் உட்கார்ந்து விட்டான். இறப்புக்குப் பின் ஏற்படும் ஸ்வேத உடம்போடு அதற்கான பசி தாகத்தோடு அவைகளை தன் மன உறுதியால் அடக்கிக் கொண்டு இப்படி மூன்று நாட்களைக் கடந்து நான்காம் நாளை அடையவும் கிங்கரர்கள் வெலவெலத்தார்கள். இதற்கு மேல் நாள் கடத்தி புதிதாக எதாவது வினைப்பாடு ஏற்பட்டு விட்டால் என்னாவது என்கிற அச்சத்தோடு எமதர்மனிடம் சென்று முறையிட்டனர். “ப்ரபோ... பார்க்கத்தான் சிறுவன்! ஆனால் மிக தீர்க்கமாக இருக்கிறான். ஒரு துளி நீர்  அருந்தவில்லை. உங்களை சந்திக்கும் விருப்பத்தோடு உங்கள் பெயரை த்யானித்தபடி அப்படியே ஒரு யோகி போல் அமர்ந்து விட்டான்....” என்ற அவர்களின் விளக்கம் எமனுக்கே சிலிர்ப்பேற்படுத்தியது. “எடுத்த எடுப்பில் உங்களுக்கு ஆத்ம ரகசியம் தெரியுமா? என்று கேட்டு எங்களை குழப்பி விட்டான். அது என்ன ரகசியம் பிரபு?” என்று ஒரு கிங்கரன் எமனிடமே கேட்கவும், எமனின் சிலிர்ப்பு பலமடங்காகி விட்டது.
“அப்படியா கேட்டான்?”
“அப்படியேதான் கேட்டான் பிரபு...”
“சரி, நீங்கள் அவனை என் முன் அழைத்து வாருங்கள்...” என்று எமன் தன் புதர்மீசையை நீவிவிட்டுக் கொண்டான். அடுத்த சில நொடிகளில் நசிகேதன், எமன் முன் வந்து நிறுத்தப்பட்டான். நசியும் எமனை பக்குவப்பட்ட ஞானிபோல புளகாங்கிதத்தோடு வணங்கத் தொடங்கினான்.

“வந்தனங்கள் எமதேவா... ப்ரியமான வந்தனங்கள்.”
“வந்தனமா... ஆச்சரியப்படுத்துகிறாயே சிறுவனே... உனக்கு என்னைக் காண பயமாக இல்லையோ?”
“ஆசை மிகுந்தவர்களுக்கே அச்சமும் மிக இருக்கும். நான் அப்பாவின் விஸ்வஜித் வேள்வியில் தங்களின் பிரசாதமாக சேர்க்கப்பட்டவன். விரும்பி வந்திருக்கும் என்னிடம் அச்சம் எப்படி இருக்க முடியும்?”
--நசிகேதன் பதிலைக் கேட்டு எமன்தான் அச்சப்பட ஆரம்பித்தான். இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல்,
“என் பிரசாத உயிர் நீ என்பதாலேயே உன் கர்மவினைப்பாடுகளை கணக்கில் கொள்ளவில்லை. யாக நெருப்பில் அவை நேராகி விட்டன. நீ இப்போது என் மதிப்பிற்குரிய திதி!”
“மதிப்பிற்குரிய அதிதியை மூன்று தினங்கள் சந்திக்க மறுத்தது சரியா பிரபு?”
“உன் வேட்கையை நான் அறியவில்லை. சிறுவனே! நீ இத்தனை தெளிவாகப் பேசுவது எனக்கு வியப்பைத் தருகிறது. போகட்டும்... என் மதிப்பிற்குரிய அதிதியான உன்னை நான் மூன்று நாட்கள் காக்க வைத்து கஷ்டப்படுத்தி விட்டேன். அதற்காக பூலோக மானிடர்களைப்போல் நாம் மன்னிப்புக் கோர மாட்டேன்...”
“பின் என்ன செய்வீர்கள்?” “எமலோக தர்மப்படி மூன்று நாட்கள் காக்கவைத்ததன் நிமித்தம் மூன்று வரங்களை உனக்குத் தருகிறேன்...” “மகிழ்ச்சி...” “எமலோகத்தில் என் எதிரில் மகிழ்ச்சி என்று சொன்ன ஒரே மனிடன் நீ தான்... சரி, உனக்கான வரங்களைக் கேள்...” “நான் கேட்கத் தொடங்கிய பின் வாக்கு மாறமாட்டீர்களே...?”
“அது பூலோகவாசிகள் பழக்கம் ஒன்றைச் சொல்வது, பின் மறுப்பது... பின் வேறொன்றைச் சொல்வது... அப்படிப்பட்டவர்களுக்கு இங்கு என்ன தண்டனை தெரியுமா?”

“என்ன தண்டனை பிரபு?”
“அவர்கள் நாக்கை அறுத்து எண்ணெயில் பொரித்து பின் அவர்களையே உண்ணச் சொல்வோம்.”
“இதுவா எமதர்ம நிர்வாகம்? இதனால், யாருக்கு என்ன பயன்?”
“என்ன பயனா? அடுத்து அவன் தவறாக நடக்க மாட்டான் அல்லவா?”
“ஒருவன் பூலோகத்தில் பிறக்கும் போது தன் முற்பிறப்பு பற்றியும்  அதன் பாவ புண்ணியங்கள் பற்றியும் அறிந்தா பிறக்கிறான்? தான் யார் என்றே தெரியாமல்தானே?
“அதனாலென்ன?”
“அப்படியிருக்க அவனுக்கு இது போல் தண்டிக்கப்பட்டதெல்லாம் நினைவில் இருக்குமா?”
“ஓ... நீ அப்படி வருகிறாயா? உன் கேள்வி சரிதான்! இங்கே தண்டிக்கப்பட்டாலும் சரி, சொர்க்கத்தில் சுகப்பட்டிருந்தாலும் சரி, எதுவும் மீண்டும் பிறப்பவருக்கு நினைவில் இருக்காது.. இருக்கவும் கூடாது.” “ஏன் அப்படி?” “நினைவில் இருந்தால் மனிதன் மாயாவை வென்று சன்யாசி போல் ஆகிவிடுவான். உலக வாழ்வு இப்போது இருக்கிற மாதிரி இருக்காது.” “அப்படியானால் நீங்கள் இங்கே தரும் தண்டனைகளால் என்ன பயன் என்று நான் கேட்டது சரிதானே? “நேரடியாக பயனில்லைதான்.. ஆனால் மறைமுகமாக பயன் உண்டு. சொர்க்கத்தில் மகிழ்ச்சி, நரகத்தில் தண்டனை என்று இருந்தாலே மனிதர்கள் பாவம் செய்ய அஞ்சுவர்.” “ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லையே.... உங்களது கிங்கரர்கள் என்னை அழைத்து வரும் வழியில் நான் ஆயிரக்கணக்கானவர்களைப் பார்த்தேன்.” “உண்மைதான்... மனிதர்களில் பாவிகளே அதிகம் உள்ளனர். ஆயிரத்தில் ஒருவர்தான் சொர்க்கம் செல்கிறார். அதிலும் மோட்சத்திற்கு எப்போதாவது ஒருவர்தான் செல்கிறார்....”

“அப்படியானால் மோட்சம் என்பது என்ன எமதர்மா?”
“அது மீண்டும் பிறவாத நிலை ”
“மோட்சத்திற்கு செல்ல என்ன வழி?”
“முதலில் நீ உனக்கான வரங்களைக் கேட்டு வாங்கிக் கொள். பிறகு கேள்விகளைக் கேள்.”
“நல்லது.. என் தந்தை இந்த மோட்சத்தை விரும்பியே விஜயாபதி யாகம் செய்தார். அவர் விருப்பம் ஈடேற வேண்டும். இதுவே என் முதல் வரம்!”
“அடுத்து”
“நான் அவரை கோபப்படுத்தி என்னை வெறுக்கும்படி செய்துவிட்டேன். அவர் என்னை திரும்பவும் நேசிக்க வேண்டும். இது என் இரண்டாம் வரம்...”
“மூன்றாவது வரம்?”
“ஆத்ம ரகசியத்தை நானறிய வேண்டும்..”
-நசிகேதன் இப்படி கேட்ட மாத்திரத்தில் எமன் முகம் சுருங்கியது. “சிறுவனே! நீ முதலில் கேட்ட இரு வரங்களைத் தருவதில் எனக்கொரு தயக்கமும் இல்லை. ஆனால் மூன்றாவதாக கேட்டாய் பார் ஒரு வரம், அதைத் தர என்னால் முடியாது.” என்ற எமனைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான் நசிகேதன்

“சிரிக்காதே.. அது என்னை இகழ்வது போல் உள்ளது.”
“உண்மையும் அதுதான்... நான் சொன்னால் சொன்னது தான். பூலோகமானிடன் போல் பேச்சு மாறமாட்டேன் என்று மார்தட்டி விட்டு இப்போது முடியாதென்றால் எப்படி எமதர்மரே?” “அது... அது... ஆத்ம ரகசியம் சொல்லித் தெரிந்து கொள்வதல்ல.. முயன்று தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...” “அப்படியானால் எப்படி முயல்வதென்று கூறுங்கள்...” “நசிகேதா.... உன் வயதுக்கேற்ற வரமாக கேளேன். எதற்கு இந்த வேண்டாத வேலை உனக்கு?” “எது வேண்டாத வேலை எமதர்மரே! எனக்கே தெரியாமல் என் உயிர் என் உடம்பில் இருக்கும். அதை உணராமல் நான் வாழ வேண்டுமா?” “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்?”
“மறைந்திருந்து அதை என்னை மட்டுமல்ல - உலக உயிரினங்கள் சகலத்தையும் ஆட்டுவிக்கிறது. என் உயிர் என் கட்டுப் பாட்டில்தான் இருக்க வேண்டும். ஆனால் அதன் கட்டுப்பாட்டில் அல்லவா நான் இருக்கிறேன்?” “நீ இப்படிக் கேட்டது போல வியாசர், வசிஷ்டர் போன்ற பிரம்ம ரிஷிகள் கூட சிந்தித்ததில்லை..”

“அதற்காக நான் சிந்திக்கக் கூடாது என்று கூற வருகிறீர்களா?” “சிறுவனே... நசிகேதா! இப்படி வாதம் புரியாதே. நான் சொல்வதைக் கேள். அழியாத உடலைக் கேள், தருகிறேன. உலகின் சக்ரவர்த்தியாக வேண்டும் என்று சொல் - ஆக்குகிறேன். அரம்பையர் புடை சூழ உல்லாசமாய் ஆயிரம் வருடங்கள் வாழும் வரம் கேள். தருகிறேன். இப்படி அனுபவிக்கும் விதமாய் வரம் கேட்காமல் ஆத்மரகசியம் தெரிய வேண்டும் என்று அடம் பிடிக்கிறாயே...?” எமன் கெஞ்சாத குறையாக பேசினான். பதிலுக்கு நசிகேதன் கண்களை அகட்டி உருட்டி முறைத்தான். “முறைக்காதே... நான் கூறுவதை பரிசீலனை செய்.” ‘அதற்கெல்லாம் இடமேயில்லை. எனக்குத் தெரிய வேண்டியது ஆத்மரகசியம். ஆத்மாவான உயிர் உடம்பில் எங்கே உள்ளது? எப்படி உள்ளது? அதை உணரும் வழி என்ன? உயிர் உடம்பை உதிர்த்த நிலையில் அது எங்கு செல்கிறது?’ “திரும்பவும் கூறுகிறேன். அதை நீ அறிவது கடினம். அறிய வேண்டுமானால் புற உலகைப் பார்க்கும் நீ உன்னுள் உன்னைப் பார்க்க வேண்டும்..” “அது எப்படி?”
“அதற்கு தியானம் என்று ஒன்று உள்ளது...” “அதை எப்படிச் செய்ய வேண்டும்?” “சொல்கிறேன்.. அதற்குமுன் என் விருந்தினர் மாளிகையில் நீ ஓய்வெடு... சில தினங்கள் செல்லட்டும் கூறுகிறேன்.” “வாக்கு மாறமாட்டீர் தானே?” “நீ மாறாமல் இருந்தால் நானும் மாறாமல் இருப்பேன்”

-எமதர்மன் இருபொருள்படக் கூறினான்.

விருந்தினர் மாளிகை! பொன்னால் இழைக்கப்பட்டு தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளேயே நீரூற்றுகள் - அதில் வாவிகள் - வாவிக்குள் அன்னங்கள்! குளிர்ந்த தென்றல் வளையவரும் அந்த மாளிகையில் வனப்புமிக்க தாதியர்கள் வளைய வந்தபடி இருந்தனர். அவர்கள் கரங்களில் சோம, சுராபானங்கள் நிம்பிய வெள்ளிப் பாத்திரங்கள்!

ஒரு புறம் நாட்டிய மகளிரின் ஆட்டத்தோடு இனிய குரலில் பாட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. சற்று முன் வரை உயிர்களின் ஓலக்குரலோடு அய்யோ அம்மா என்கிற அலறல் சப்தம் கேட்ட விகாரமான இடம் என்னும் அறிகுறியே இன்றி, ஒளிமிகுந்த ஏகாந்தமான இடமாய் அந்த விருந்தினர் மாளிகை இருந்தது.

கணிகையர் பலர் நசிகேதன் அருகே வந்து புன்னகைத்து அவனை மயக்க முயன்றனர். அவ்வளவு பேரையும் மட்டுமல்ல அங்கு கிடைத்த உணவையும் தவிர்த்து ஒரு ஓரமாய் போய் தரையில் அமர்ந்து கொண்டான்.

நாட்கள் கடந்தது!

எமனும் வந்து நின்றான்... மிகுந்த சலனத்தோடு நசிகேதனைப் பார்த்தான்.

“எதற்காக அப்படிப் பார்க்கிறீர்கள் எமதர்மரே! என் கேள்விக்கு பதில் கூறுங்கள். ஆத்மா எங்கிருக்கிறது? எப்படியிருக்கிறது? இறப்புக்குப் பின் என்னாகிறது?”

“விடமாட்டாயா நசிகேதா...”

“விடவே மாட்டேன்...”

“நல்லது - எரியும் யாக நெருப்பில் விழ நீ எப்போது அஞ்சவில்லையோ அங்கேயே நீ மற்றவர்கள் போல் அல்ல என்பது தெரிந்துவிட்டது. அடுத்து என்னைக் காண விரும்பிய செயல்.... எல்லாவற்றுக்கும் மேலாக என்னிடம் நீ கேட்ட வரங்கள்... அதைவிட மேலாக பலவித இன்பங்களை உனக்குக் காட்டியும் உன் மனம் அதில் மயங்கவில்லை. உன் மன உறுதி - தெளிந்த சிந்தை இதை பாராட்டுகிறேன்.

ஆயிரமாயிரம் உயிர்களை பிரம்மா சிருஷ்டித்தார். இவ்வுயிர்களில் மனிதனே விசேஷமானவன்! அவன் ஒருவனுக்குத்தான் தன்னையறியும் தன்மையோடு தான் சார்ந்த உலகை அறியும் அறிவு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அறிவால் புறஉலகையே மனிதர்கள் காண்கின்றனர். புறத்தைப் போலவே தன் அகத்தைக் காணும் முயற்சியை எவரும் செய்வதில்லை. அப்படிச் செய்ய உலகமாயை விடுவதில்லை.

ஆத்மாவை உணர உலகமாயையை வெல்ல வேண்டும். அடுத்து தன்னுள் நோக்க வேண்டும். இதுவே நன்மைக்கான பாதை, மற்றதெல்லாம் அழிகின்ற இன்பதுன்பத்துக்கான பாதையே... நன்மைக்கான பாதையைத் தேர்வு செய்தாலே ஆத்ம தத்துவத்தை நெருங்க முடியும்.

அதே சமயம் இந்த ஆத்மா அழிவற்றது. உடம்போ மாற்றங்கள் கண்டு அழிந்துவிடக் கூடியது. இதை ஒருவர் வேத மந்திரங்களைச் சொல்வதாலோ, இறைவழிபாடுகளினால் மட்டுமோ அறிந்துவிட முடியாது.

- எமதர்மன் தான் சொன்ன கருத்தின் இடையில் சற்று இடைவெளி விட்டான். நசிகேதன் காத்திருந்தது போல் அவன் சொன்னதில் இருந்தே தன் சந்தேகத்துக்கான கேள்வியை கேட்கத் தொடங்கினான்.

“எமதர்மரே! அழிவற்ற ஆத்மா எதனால் அழிகின்ற இந்த உடம்பைத் தேர்வு செய்கிறது? இது என் முதல் கேள்வி.. இல்லை உடல் தான் ஆத்மாவை தேர்வு செய்கிறதா? இது என் அடுத்த கேள்வி” என்றான்.

“ஆத்மாவே உடலைத் தேர்வு செய்கிறது. தாயின் கருவில் ஆணின் சுக்லமும் பெண்ணின் சுரோணிதமும் கருவுக்குள் மனிதப் பிண்டத்தையே உருவாக்குகின்றன. அந்த பிண்டத்தை ஆத்மாதான் தேடிச் சென்று அடைகிறது. அதன்பின் ஆத்மாவின் வினைக்கேற்ப பிறப்பும் அதைத் தொடர்ந்து ஆயுளும் பின் மரணமும் அமைகின்றன”.

“இப்படி, தான் தேடி அடையும் உடலுக்குரிய மனதுக்கு இது ஏன் சுலபத்தில் புலப்படுவதில்லை?”

“நல்ல கேள்வி... சுலபமாக புலப்படாது.... அவ்வளவுதான்! மற்றபடி உடம்பை அதன் போக்கில் போகவிடாமல் அடக்கி ஆண்டால் புலப்பட்டே தீரும். ஆனால் உடம்பு இந்திரியப் போக்கு உடையது. ஆசையே அதன் பாதை. எனவே ஆசையை விடுத்து புலனை அடக்கிட உடம்பு அடங்கும். இப்போது நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்..

இந்திரியத்தை விட ஆத்ம நோக்கம் பெரியது!

ஆத்ம நோக்கை விட மனமும், மனதை விட புத்தியும், புத்தியை விட ஹிரண்ய கர்பத்வம் என்னும் கருக்கொள்ளலும், கருக்கொள்ளலை விட மாயையும், மாயையைவிட ஆத்மாவும் பெரிது...!”

“என்றால், ஆத்மாவை அறிய முதலில் இந்திரியப் போக்கை கட்டிப்போட்டு உடம்பை வெல்ல வேண்டும். பின்புறத்தே நோக்காமல் அகத்தை நோக்க வேண்டும். அப்படி நோக்க முனையும் போது புத்தி பலவித சந்தேகங்களை எழுப்பி நம்மை நோக்க விடாமல் செய்யும். எனவே வைராக்யமாக புத்தியை அடக்கி, பின் அழியும் இன்பங்களையே தருகிற மாயாவையும் பொருட்படுத்தாது த்யானித்தால் ஆத்மா புலப்படுமா?”

“ஆம்... இவ்வேளையில் த்யானிப்பதற்கு ஒரு மந்திரம் வேண்டும். அதுவே சப்தப்பிரபஞ்சத்தின் முதல் மூல எழுத்தான ஓம் எனும் பிரணவமாகும். இதை தியானிக்க தியானிக்க சுவாசம் சீராகும். பின் அந்த பிரணவ சப்தமும் ஒடுங்கி ஹ்ருதய குகைக்குள் கட்டை விரலளவு ஒரு வெளிச்சத்தைப் பார்க்கலாம். அதுவே உன் ஜீவாத்மா. இதை உடம்புக்குள் இருக்கும் போது த்யானத்தால் மட்டுமே காண முடியும். உடல் சிதையும் போது இது வெளியேறும். அவ்வாறு இது வெளியேறிட நாடிகள் உதவும். அந்த வகையில் உடம்பில் நூறுக்கும் மேல் நாடிகள் உள்ளன. இதில் ஒரு நாடிதான் உச்சி நோக்கிச் செல்வது. அதன் வழியாக ஆத்மா வெளியேறினால் முக்தி. மற்ற எந்த வழியில் வெளியேறினாலும் திரும்பவும் பிறக்க வேண்டும். அந்த ஆத்மா தன் வினைக்குரிய கருப்பிண்டத்தை தேடிச் சென்று அடைந்து விடும்.”

-எமன் சொல்லி முடிக்கவும் அவன் காலில் விழுந்து வணங்கினான் நசிகேதன். எமனும் ஆசிர்வதித்து அவனைத் தொட்டு எழுப்பினான். ஆழமாய் பார்த்தான். பின் பேசினான்.

“நசி... பிரம்ம சிருஷ்டியில் நீ ஓர் அதிசயம்! நீ கேட்ட கேள்விகள், வரப்போகும் மானிடர்களுக்கு ஒரு பாடம். இது வேதத்தின் ஒரு துணைப்பாடமாக  உபநிடதமாக அமையும். உன்னால் நானும் சிந்திக்கப்படுவேன். எமன் என்றாலே உயிர் விழுங்கி என்று என்னை சிந்திப்பவர்கள், இனி நான் ஒரு உயிர் விளக்கி என்றும் சிந்திப்பர். அதற்கு உனக்கு என் நன்றிகள்...”

“ஐயனே! நானே உங்களுக்கு நன்றி கூற வேண்டும் என் ஆத்மாவை நானறிய உதவியுள்ள நீங்களே என் ஆத்ம குரு. நான் என் ஆத்மாவைக் கண்டு தெளிய எனக்கு ஆசி வழங்குங்கள்!”

“அப்படியே ஆகட்டும் நசிகேதா... உனக்கு என் நல்லாசிகள்” - எமனின் பாசக் கயிறில் சிக்காமல் பாசத்தில் சிக்கி பாடமும் கற்ற நசி, அதன்பின் தன் ஆத்மாவை தன் ஹ்ருதய குகையில் கண்டு தெளியும் வரை ஓயவில்லை.

இதை எமனுடைய கருத்தாக கூற வேண்டுமானால் ஆத்மாவே ஒருவனைத் தேர்வு செய்கிறது. அது விரும்பினாலே ஒருவனால் அதை அறிய முடிகிறது. அதற்கு நற்கருமங்களின் துணை பெரிதும் தேவைப்படுகிறது. தியாகங்களும் துணை நிற்கின்றன. நசிகேதன் வரையிலும் அவ்வாறே நிகழ்ந்தது. எவர் வரையிலும் கூட அவ்வாறே நிகழ முடியும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.