Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் ஒரு ஏமாற்றுக்காரி
 
பக்தி கதைகள்
அவள் ஒரு ஏமாற்றுக்காரி

அன்று மீனாட்சியம்மனை கும்பிட்டு விட்டு பொற்றாமரைக் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்தேன். அருகில் முப்பது வயதுப் பெண் ஒருத்தி இருந்தாள்.  
ஆகா! பச்சைப்புடவைக்காரி! என்பதை அறிந்து வணங்கினேன்.  “இன்று உன் மனதில் கேள்வி இல்லை போலிருக்கிறதே!”“மனதில் ஏதும் தோன்றவில்லை தாயே! இருந்தாலும்...” ”என்ன இழுவை?” “பக்தருக்கு துன்பம் என்றால் எப்படி உதவுகிறீர்கள் என விளக்கம் கொடுங்களேன்.” “இதோ... அங்கு பார்!
மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண் செல்வி. வயது 28. படிப்பு பி.காம்., ஐந்து வருஷமா வேலை தேடுகிறாள்.
திருமணம் நடத்த பெற்றோர் முயற்சித்தும் பயனில்லை. சராசரி உயரம். மாநிறம். களையான கண்கள். வயதிற்கேற்ற முகப்பொலிவு. மீனாட்சி மீது ஆழ்ந்த பக்தி. ஆனால் பெண் பார்க்க வந்தவர்கள் அவளை ’சுமார்’ என உதாசீனப்படுத்தினர். செல்வியின் அம்மாவிற்குக் கோபமும் ஆற்றாமையும் வர மகளிடம் வெளிப்படுத்தினாள்.
“ உன் வயசுப் பொண்ணுகளுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தை வந்தாச்சு. ஆனா  நீ மட்டும் என்னை சாவடிக்கப் பொறந்திருக்கடி” என்றாள்.
மீனாட்சியம்மன் படத்தின் முன் பிரமை பிடித்தவளாக நின்றாள் செல்வி. அவளின் அமைதி அம்மாவை உசுப்பேத்தியது.
“இந்தக் கடன்காரி முன்னால நில்லு. அவகிட்ட எனக்குக் கல்யாணம் நடக்கணும்னு கேட்டயாடி? ஆமா, நீ கேட்டா அவ என்ன கொடுக்கப் போறாளாக்கும்?”

செல்விக்குக் கோபம் கொப்பளிக்க அம்மாவை முறைத்தாள்.
“என்னடி முறைக்கற?” என்றவள், மீனாட்சி படத்தையும் உடைத்தாள். உடைந்த கண்ணாடி சில்லுக்கு இடையில்  மீனாட்சி படத்தை எடுக்க முயன்றாள் செல்வி. கண்ணாடி கையில் குத்தியது. அருகில் வந்த அம்மாவை தள்ளி விட்டு, கோயிலுக்கு ஓடினாள் செல்வி. பொற்றாமரை குளக்கரையில் அமர்ந்து மனம் விட்டு அழுதாள். அப்படியே நிறுத்திய பச்சைப்புடவைக்காரி விளக்கம் அளித்தாள்.
“இது செல்விக்கான முதற்கட்ட சோதனை. வெற்றி பெறுகிறாளா என பார்ப்போம்..”
“ புரியவில்லை தாயே!”
“அங்கே பார்.”
அந்தக் காட்சி உயிர் பெற்றது.
நாற்பது வயது பெண் ஒருத்தி வீல்சேரில் வந்தாள். சேரைத் தள்ளியபடி வந்த கோயில் பணியாளர், குளக்கரையில் நிறுத்தி விட்டு நகர்ந்தார். அதற்குள் கூட்டத்தில் வந்த ஒருவரின் கை பட்டு, வீல்சேர் படிக்கட்டில் கீழ்நோக்கி நகரவே ’வீல்’ என அலறினாள் அவள்.  
செல்வி  பிடிக்க முயன்றாள். சேரில் இருந்த கூர்மையான கம்பி செல்வியின் கையில் குத்தி ரத்தம் வந்தது. ஆனாலும் பிடித்து நிறுத்தினாள். வீல்சேரில் இருந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தாள். அவளுக்கு பாதிப்பில்லை. செல்வியின் கையில் தான் காயம். அருகில் இருந்தவர்கள் முதலுதவி செய்தனர்.  

“முதல் கட்ட சோதனையில் வெற்றி. இரண்டாவது கட்டத்தில் தேறினால் அவள் வாழ்வு சிறக்கும்.” - பச்சைப்புடவைக்காரி விளக்கினாள்.
காட்சி மாறியது. வீல்சேரில் வந்த பெண் நன்றி சொல்லி தன் கழுத்தில் கிடந்த செயினைக் கழற்றி செல்விக்கு அளித்தாள். ஆனால் செல்வி ஏற்கவில்லை.
“வேண்டாமா?”
“இல்லம்மா.. எங்காத்தா பச்சைப்புடவைக்காரியோட வீடு இது. இங்கு வரவங்க எல்லாம் அவளோட புள்ளைங்க. இன்னொரு புள்ளைக்கு உதவுறதுக்குக்
கூலி வாங்கினா பாவம்மா.”
“இரண்டாம் கட்ட சோதனையிலும் தேறி விட்டாள். இனி நடப்பதைப் பார்.”
வீல்சேரில் இருந்த பெண்  நீண்ட நேரம் பேசியதில், செல்வி வேலை தேடுவதை அறிந்து கொண்டாள். முகவரியைக் கொடுத்து  வரச் சொன்னாள். அந்தப் பெண்ணின் பெயர் பாரதி.  நடக்க முடியாவிட்டாலும் அவள் நகரின் சிறந்த பெண்கள் அழகு நிலையத்தை நிர்வகித்து வந்தாள். அதில் வாடிக்கையாளரை வரவேற்கும் பணி செல்விக்கு வழங்கப்பட்டது. மாதச் சம்பளம் பதினைந்தாயிரம். செல்வியின் வாழ்வில் வசந்தம் வீசியது.  
“உங்கள் கருணைக்கு...”நான் இழுத்தேன்.
“நிறுத்து. இன்னும் கதை முடியவில்லை. பார்.”
அன்று காலை செல்வி ஒரு கோரிக்கை வைத்தாள்.
“மேடம், மதியம் உங்களைப் பார்க்க எங்கம்மா வருவாங்க. என்னைப் பொண்ணு பார்க்க வரதுனால லீவு வேணும்னு கேட்பாங்க மேடம். மாட்டேன்னு சொல்லுங்க.”
“ஏம்மா?”
பெண் பார்க்கும் நிகழ்வுகளால் ஏற்பட்ட அவஸ்தையை விளக்கினாள் செல்வி.
“அவ்வளவு தானே! நான் பாத்துக்கறேன்.”
செல்வியின் அம்மா வந்த போது, “நீங்க போங்கம்மா. இன்னும் அரை மணிநேரத்துல செல்வியை அனுப்புறேன்.” என்றாள்.
செல்விக்குக் கோபம் வந்தாலும் காட்டவில்லை.

“செல்வி உன்னுடன் இவங்களும் வருவாங்க.” என இரு அழகுக்கலை நிபுணர்களைக் காட்டினாள் பாரதி.
“எதுக்கு, மேடம்?”
“உன்னை அலங்காரம் பண்ணத்தான். என் காரிலேயே போய் வரலாம்”
சற்று நேரத்தில் செல்வியை தேவதை போல அழகுபடுத்தினர்.
“உங்கள் கருணை இருக்கிறதே.. .” மீண்டும் இழுத்தேன்.
“அவசரக்குடுக்கை. இன்னும் கதை முடியவில்லை..”
பெண் பார்க்கும் வைபவம் நடந்தேறியது. பையன் வங்கி அதிகாரி. களையாக இருந்தான். பையனின் தாய் பேச்சு வார்த்தை தொடங்கினாள்.
“ பொண்ணப் பிடிச்சிருக்கு. மத்ததை..”
“சொல்லுங்கம்மா.”  செல்வியின் தந்தை குழைந்தார்.
“முப்பது பவுன் நகை. நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கம்.”
அப்பாவைத் தடுத்த செல்வி, “பணம் கொடுத்தாத் தான் கல்யாணம்னா...கல்யாணமே வேண்டாம்.” என்றாள்.
ஆனால் செல்வியைத் தான் கல்யாணம் செய்வேன் என பையன் உறுதியாக நின்றதால் அவனது பெற்றோர் விட்டுக் கொடுத்தனர்.
செல்வியின் திருமணம் நடந்து இப்போது இரு குழந்தைகளுக்குத் தாயாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
“தாயே உங்களைப் போல் ஒரு ஏமாற்றுக்காரியை இதுவரை பார்த்ததில்லை?”
“என்ன உளறுகிறாய்?”
“செல்வியைச் சோதித்து அருள்புரிந்தேன் என சொன்னது பொய் தானே?”
“நகை தங்கமா பித்தளையா என சோதித்தால் தானே தெரியும்?”
“மற்றவர் செய்த நகையைப் பொற்கொல்லன் சோதித்துப் பார்க்கலாம். ஆனால், தானே செய்த நகையை ஒருவர் ஏன் சோதிக்கவேண்டும்? செல்விக்கு தங்கமான மனசைக் கொடுத்தது நீங்கள் தான். சரியான நேரத்தில் வீல்சேரில் இருந்த பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என அவளுக்குள் அன்பாய் இறங்கியது நீங்கள் தான். அப்பெண் பரிசளித்த போது, அதை மறுக்கும் அன்பாய் இறங்கியதும் நீங்கள் தான். சோதனையில் அவள் வெற்றி பெற்றதால் அருள்புரிந்தேன் என கதை சொல்கிறீர்களே நியாயமா?”
சிரித்தபடி மறைந்தாள் அந்தச் சிங்காரவல்லி. அவளது கருணையை எண்ணி நானோ அழுதேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar