Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அவள் செய்த அநியாயங்கள்
 
பக்தி கதைகள்
அவள் செய்த அநியாயங்கள்

மாறனை எனக்கு ஐந்து வயதிலிருந்தே தெரியும். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ரவுடி என்று பெயர் எடுத்தவன். எட்டாவது படிக்கும் போதே ஆசிரியைக்குக் காதல் கடிதம் கொடுத்தவன். அவனது தந்தையிடம் செல்வமும், அதிக செல்வாக்கும் இருந்ததால் தான் அவனால் படிப்பை தொடர முடிந்தது. எனக்கு தரமான கல்லூரியில் இடம் கிடைத்தது. அவனுக்கு இரண்டாம்தரக் கல்லூரியில் தான் கிடைத்தது.  அரியர்ஸ் நிறைய வைத்திருந்தான்.  எப்போதாவது அவனை சந்திப்பதுண்டு. அரைநிமிடச் சந்திப்பில் கூட மனிதனை காயப்படுத்தும் கலையை மாறனிடம் தான் கற்க வேண்டும். கடவுள் நம்பிக்கையைக் கேலி செய்து என்னைப் புண்படுத்துவது அவனுக்குப் பொழுதுபோக்கு. அவனைப் பொறுத்தவரை கோயிலில் இருப்பது கல்.  படித்து முடித்ததும் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது மாறன் விளம்பரக் கம்பெனி தொடங்கிச் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தை இன்ஸ்டால்மென்ட்டில் வாங்கித் தவணை கட்ட நான் திணறினேன்.  ஆடம்பர காரில் மாறன் வலம் வந்தான். “கடவுளை நம்பினாக் கடைசி வரைக்கும் இந்த வண்டிதான்; நீ கார் வாங்கறதுக்குள்ள ரிட்டயர் ஆயிருவ.” என ஒருமுறை வதைத்தான்.

விளம்பரக் கம்பெனி என்ற போர்வையில் பெண்களுடன் மாறன் கூத்தடிப்பதை கேள்விப்பட்டு அவனிடம் விசாரித்தேன்.  “அனுபவிக்கறதுக்குப் பேர் தான் வாழ்க்கை. உன்ன மாதிரி ஒத்தப் பொண்டாட்டியோட என்னால வாழ முடியாதுடா.” “தப்பில்லையா?” “தப்பு தான். மீனாட்சி கோயிலுக்குப் போய் கல்லுகிட்டக் கம்ப்ளெயிண்ட் பண்ணு.”
கோபத்தை விடக் கண்ணீர் அதிகம் வந்தது.  “அப்படியே அடிச்சிக் கொல்லணும்னு தோணுதோ. அந்தக் கல்லு கிட்டப் போய் அழு. எங்கிட்ட வம்பு வச்சா தொலச்சிருவேன்.”
என் தொழிலில் பிரச்னைகளைச் சந்தித்தேன். உடல்நலமும் பாதித்தது. எப்படியோ சமாளித்தேன். வெளியில் சொல்லமுடியாத உணர்வுகளை எழுத்தில் கொட்டினேன். எழுத்துலகில் இடம் பிடிக்க பிரயத்னம் செய்த வேளையில் ஆங்கில நாளிதழ் ஒன்று அங்கீகாரம் அளித்தது. எனது ஆங்கில நாவல் வெளியீட்டு விழாவுடன், எனக்கு பாராட்டு விழாவும் நடத்த ஏற்பாடு செய்தனர்.  அதற்கான விளம்பரத்திற்காக பலகோணங்களில் என்னை படம் பிடித்தனர். மகிழ்ச்சியில் மிதந்தேன். ஒருமாத காலம் இருக்கும் நிலையில், விழாவை ரத்து செய்ததாக நாளிதழின் ஆசிரியரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த நாளிதழில் வேலை பார்க்கும் நண்பனிடம் விசாரித்தேன். “உனக்கு அந்த மாறனோட ஏதாவது பிரச்னையா? அந்தாளு எங்க எம்.டி.,யை வசியம் பண்ணி நிகழ்ச்சியைக் கேன்சல் பண்ண வச்சிட்டான்.  அதே தேதியில மாறனுடைய புத்தகத்தை வெளியிடப்போறாங்களாம். விளம்பரக் கம்பெனிகளப் பத்தி ஏதோ எழுதியிருக்கானாமே!”  மனவருத்தமுடன் கோயிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் பச்சைப்புடவைக்காரி உருவெளிப்பாடாகத் தோன்றினாள்.

அவள் முகத்தில் குழப்ப ரேகைகள். எல்லாம் அறிந்தவளுக்கு ஏன் குழப்பம்?  “என்ன ஆயிற்று தாயே? முகத்தில் வேதனை தெரிகிறதே!” “எனக்கு வேண்டியவனாகப் போனதால் உன்னிடம் மறைக்க விரும்பவில்லை. சொன்னாலும் துன்பப்படுவாய்.” “தாயே! ஏன் குழப்பம்? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்!” உன் நண்பன்... இல்லை! உன் எதிரியான மாறனுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது.” “பிறந்ததிலிருந்தே அவனுக்கு நல்ல காலம் தானே!” “இன்னும் சிறப்பாக வாழப் போகிறான். இப்போது எழுதியிருக்கும் புத்தகத்துக்குப் பெரிய பரிசுகள் கிடைக்கும். புத்தகம் லட்சக்கணக்கில் விற்கப்போகிறது. பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கப் போகிறது. தொழிலில் பல உச்சங்களைத் தொடுவான்” என்னையும் மீறி கண்கள் பொங்கின. இவளைக் கல் என சொன்னவனுக்கு ஏற்றம், பெருமை எல்லாமே. எப்போதும் இவளை நினைக்கும் எனக்கு? பிரச்னை, துன்பம், வலி, அவமானம். நன்றாக நடக்கிறதம்மா உங்கள் ஆட்சி.  இவள் என் தாய் தானே! நேராகவே கேட்டுவிட்டால் என்ன என்று எண்ணம் தோன்றியது.  என் முன்னோர்கள் செய்த தவப்பயனாக மனதில் உள்ளதைச் சொல்ல வாயெடுக்கும்முன், சற்று யோசித்தேன்.  “ஏதோ சொல்ல வந்தாய்? ஆனால் நிறுத்திவிட்டாயே!” “அதற்கு முன் ஒருமுறை விழுந்து தங்களின் திருப்பாதம் தொடும் பாக்கியத்தை அருளுங்கள்.”

“சரி...தந்தேன்.” விழுந்து வணங்கினேன். திருப்பாதத்தை மிக லேசாகத் தொட்டேன். ஆன்மா சிலிர்த்தது. ஆயிரமாயிரம் பிறவிகளில் புரியாத விஷயங்களும் அந்த அரைநொடிப் பொழுதில் உணர்ந்தேன்.    எழுந்து கைகூப்பினேன்.  நீவி விட்டது போல மனம் சுத்தமானது. மனதில் இருந்த ஆற்றாமை போன இடம் தெரியவில்லை. “விரும்புவதைக் கேளப்பா. தரக் காத்திருக்கிறேன்.” ’முதலில் ’மன்னித்தேன்’  எனச் சொல்லுங்கள் தாயே!” “ஏன்? என்ன தவறு செய்தாய்?” “ மாறனுக்குப் புகழ், செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறீர்கள் எனத் தெரிந்தவுடன் தங்களை குறை சொல்ல முற்பட்டேன். நிந்தனை செய்ய நினைத்தது பெரும் பாவம். மன்னியுங்கள் தாயே.”

என்னையே பார்த்தாள் பச்சைப்புடவைக்காரி.  “தாயே! நீங்கள் என் எஜமானி.  உங்களை கல் என மறுத்தாலும் மாறனுக்கும் நீங்களே எஜமானி. மனிதர்களாகிய  அனைவரும் உங்களின் அடிமைநாய்கள். இதில் யாருக்குப் பால்சோறு தர வேண்டும், யாருக்குப் பழையசோறு தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு உரியது. இதில் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இந்த நாயை எட்டி உதைத்துவிடுங்கள்.  அடிமை நாய்கள் தங்களுக்குள் ஆயிரம் விதிகளை வைத்திருக்கலாம். எஜமானியைப் பார்த்து வாலைக் குழைத்து நன்றி விசுவாசத்துடன் இருக்கும் நாய்க்கு எல்லாம் கிடைக்கும். எஜமானியைப் பார்த்ததும் குரைத்து அவள் கொடுக்கும் வேலைகளைச் செய்ய மறுக்கும் நாய்க்குச் சோறு கிடைக்காது.  இது நாய்களாக வைத்துக்கொண்ட விதியே தவிர,  எஜமானியான உங்களை அது எப்படி கட்டுப்படுத்தும்,?

அன்னை சிரித்தாள்.  “நீ எது கேட்டாலும் தருகிறேன். ஞானபீட விருது வேண்டுமா? பத்ம விபூஷண் விருது வேண்டுமா?” “அதையும் விட முக்கிய வரம் வேண்டும் தாயே!”
“என்ன?”  “இனிமேல் எக்காலத்திலும் உங்களைக் குறை சொல்லும் மனம் வரக் கூடாது. நீங்கள் என் எஜமானி. கோடானு கோடி அடிமை நாய்களில் நானும் ஒன்று என்பதை மறக்கக் கூடாது. அடிமை நாயாகிய என்னை நீங்கள் பட்டினி போடலாம், எட்டி உதைக்கலாம். ஏறி மிதிக்கலாம். இல்லை அந்த மாறனின் வேலைக்காரனாக இருக்கும் நிலையைக் கூட தரலாம். அப்போதும் உங்களை மறக்கக் கூடாது. நிந்திக்கவும் கூடாதம்மா. இந்த வரத்தைக் கொடுங்கள் தாயே.” அன்னை கலகலவெனச் சிரித்தாள். என் முகத்தில் திடீரென சில்லென்ற உணர்வு ஏற்பட திடுக்கிட்டு விழித்தேன்.  கண் முன்னால் பச்சைப்புடவைக்காரி அதே சிரிப்புடன் நின்றாள்.  “இதுவரை நீ கனவு கண்டாய். மாறன் என்ற பாத்திரம் உண்மையில் கிடையாது. கனவில் பார்த்த சம்பவம் எதுவும் வாழ்வில் நடக்கவில்லை. சில உண்மைகளைச் சொன்னால் புரியாது என்று இக்கனவைக் கொடுத்தேன்.” வாழ்வின் முடிவில் கூடப் பெற முடியாத ஞானத்தை கனவு மூலம் கொடுத்த என் ஞானகுருவை, பச்சைப்புடவைக்காரியை பார்க்க முடியாமல் கண்ணீர்த்திரை மறைத்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar