Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அம்பிகையின் அருட்கொடை
 
பக்தி கதைகள்
அம்பிகையின் அருட்கொடை

தொலைக்காட்சியில் பெரியவர் ஒருவர், “அம்பிகை சிலருக்குக் கேட்டதை எல்லாம் கொடுப்பாள். ஆனால் அவர்கள் வாழ்வில் நிறைவு இருக்காது. இன்னும் சிலருக்கு எதையும் கொடுக்க மாட்டாள். ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வர். இதை உணர ஞானம் வேண்டும்.”

எனக்கோ அந்த ஞானம் இல்லையே என்ற வருத்தம் எழுந்தது.
அன்றிரவு ஒரு கனவு வர  அதில் அம்பிகை வந்தாள்.

“இரண்டு நிகழ்ச்சி மூலமாக உண்மையை விளக்குகிறேன்.  புரிவதும், புரியாவதும் மகனே உன் சமர்த்து.”

ராம்குமாருக்கு ஐம்பது வயது. அவரது வாழ்வில் ஆயிரம் பிரச்னைகள். ஒரே மகளுக்குத் திருமணம் தட்டிக் கொண்டே போனது. ரத்தக்கொதிப்பு,  இதயநோய் என ஒருபுறம் அச்சுறுத்தியது. போதாக்குறைக்கு அவரது பணி கோல்கட்டாவுக்கு மாறியது. பணமுடையால் மகளின் கல்விக்கடனைச் செலுத்த முடியவில்லை.

அடகு வைத்த வீடு ஏலத்துக்கு வரும் என மிரட்டல் வேறு. இந்நிலையில் ராம்குமார் ஒருநாள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த போது, திடீரென துறவி, “மகனே இந்த மோதிரத்தை அணிந்தால் பிரச்னை தீரும்.”

“எனக்கு என்ன பிரச்னை?”

கோல்கட்டாவுக்கு மாற்றல். கடன் தொல்லை. மகள் திருமணம், உடல்நலக் குறைவு எல்லாம்...”

ஆவலுடன் மோதிரத்தை வாங்கி அணிந்தார் ராம்குமார்.
மாய மோதிரம் தன் வேலையைக் காட்டியது.

மேலதிகாரி ஒருவர் திடீரென இறக்க, ராம்குமாருக்கு அப்பதவி கிடைத்தது. பணிமாறுதல் என்ற நிலை போய் பதவி உயர்வால்  கொடிகட்டிப் பறந்தார் அவர். கடந்த காலத்தில் அவரது தந்தை வாங்கிய கம்பெனி பங்குகளின் பெயர் மாற்றம் தொடர்பான வழக்கு சாதகமாக முடிந்ததில், பங்குமதிப்பு பல லட்சம் கூடியிருந்தது.

அதை விற்று மகளின் கல்விக்கடனை அடைத்ததோடு, நல்ல இடத்தில் திருமணத்தையும் நடத்தினார். இதற்கிடையில் பரிசோதித்ததில் நோய் எதுவுமில்லை என்றும், ஏற்கனவே மன அழுத்தத்தில் அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.   

நினைத்ததெல்லாம் நடந்தது. சில ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார். அதன் பின் வெறுமை சூழ்ந்தது. எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லை என புலம்பும் பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்தார் ராம்குமார்.

சொல்லப்போனால் ராம்குமாரிடம் உள்ள மோதிரம் நம் விரலிலும் இருக்கிறது. அதன் பெயர் லட்சியவெறி. அது இருந்தால் சாதாரண ஆள் கூட கோடீஸ்வரராகி மாறுவார்.

ஆனால் செல்வச் செழிப்பிலும், புகழின் உச்சியிலும் யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஒரு கட்டத்தில் சலிப்புற்ற அவர்கள் “புகழும் பணமும் வேண்டாம். நான் பழையபடி மூடை தூக்கப் போகவா?” எனக் கேட்கிறார்கள்.

புரிந்தும், புரியாதது போலிருந்தது.

“இதைப் பார். எல்லாம் புரியும்.”

குழந்தையாக இருந்த போது ரஞ்சனிக்கு போலியோ தாக்கி கால்கள் முடங்கின. தவழ்ந்து தான் நடக்க முடியும். இப்போது அவளுக்கு வயது முப்பது. பெற்றோர் இருக்கும் வரை கவலையில்லை. ஆனால் அதற்குப் பின் அவள்?

சாமியார் ஒருவர் கால்முடக்கத்தை குணப்படுத்துவதாக கேள்விப்பட்டு ரஞ்சனியுடன் மைசூரு புறப்பட்டனர் பெற்றோர்.  
மடத்தில் தங்கி பூஜை, யாகம் என நடத்தி பெருந்தொகை கறந்தார் சாமியார். ஆனால் அங்கிருந்த இதமான ஆன்மிகச் சூழலால் ரஞ்சனி நம்பிக்கை இழக்கவில்லை.    

ஆனால் கால் குணமாகவில்லை. போதாக்குறைக்கு சாமியார் “உங்க பொண்ணு அம்பாளை முழுசா நம்பல. அதனாலதான் குணமாகல” எனத் தெரிவித்தார்.

வேறுவழியின்றி ரயிலில் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர். ரஞ்சனியின் பெற்றோர் தூங்கிவிட்டனர். ரஞ்சனியோ அழுதபடி  இருந்தாள். “கால்கள் குணமாகாவிட்டால் போகிறது, அது தலைவிதி. ஆனால் நான் உன்னை நம்பலன்னு சொல்லிட்டாங் களேம்மா!  அதை தாங்கமுடியல. ஏம்மா இப்படி ஒரு வார்த்தையை கேக்க வச்ச?”

நள்ளிரவு... வண்டி ஈரோடு பக்கம் வந்த போது, ரயிலில் அனைவரும் தூங்கிவிட்டனர். காலியாக இருந்த இருக்கையில் தனியாக இருந்தாள் ரஞ்சனி.

காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் ரயில் நின்ற போது,  ஒரு பெண் ரஞ்சனியின் அருகில் வந்தாள். தோள் மீது கை வைத்து, “ஏம்மா அழற?” எனக் கேட்டாள்.  மனக்குமுறலை கொட்டினாள் ரஞ்சனி.
“காலம் பூரா குறையோடே வாழ்ந்துருவேம்மா. ஆனா  பச்சைப் புடவைக்காரிய நம்பலன்னு சொல்லிட்டாரேம்மா? எனக்கு அவளை விட்டா யாரும்மா இருக்கா?.”

தலை குனிந்தபடி அழுதாள் ரஞ்சனி.

ரஞ்சனியின் முகத்தை கையால் நிமிர்த்தினாள் அந்தப் பெண். ஒரு நொடி தான் அவளின் கண்களைப் பார்த்தாள் ரஞ்சனி.

“அம்மா!”

அலறல் கேட்டு அனைவரும் விழித்தனர். திக்பிரமை பிடித்தது போலிருந்தாள் ரஞ்சனி.

அதிகாலையில் ரயில் மதுரை வந்தது.  வீட்டுக்குப் போகும் வழியில் ரஞ்சனி ஏதும் பேசவில்லை.

குளித்து விட்டு  அபிராமியந்தாதி பாடல் பாடினாள். விளக்கின் திரியைத் தூண்ட காலைத் தரையில் தேய்த்தபடி தவழ்ந்தாள். அதைப் பார்த்த ரஞ்சனியின் தாய்க்கு ஆவேசம் எழுந்தது.  
“நிறுத்துடி. இனி  வீட்டுல இந்த ராட்சசியின் படம் இருக்கக் கூடாது.‘

“யாரும்மா ராட்சசி?”

“பச்சைப்புடவைக்காரி தான். மனசுல கருணை இல்லாதவளை ராட்சசின்னு  சொல்லாம என்ன சொல்றதாம்?”

ரஞ்சனியின் தாய் விளக்கை அணைத்ததோடு, அபிராமியந்தாதி புத்தகத்தை வீசினாள்.

ரஞ்சனியின் கண்ணீருடன் அமைதியாக அதே சமயம் மனஉறுதியுடன் பேசினாள்.

“அம்மா உனக்கு ஒருத்தி ஆயிரம் ரூபா தரணும். கொடுக்காம ஏமாத்திட்டா. நீ என்ன சொல்வ?”

“பித்தலாட்டக்காரி..‘

“கொஞ்சம் பொறு. அந்த ஆயிரத்துக்குப் பதிலா பத்துக்கோடி ரூபா மதிப்புள்ள சொத்த உன் பேர்ல எழுதினா...”

ரஞ்சனியின் தாய்க்குப் பேச்சு வரவில்லை.

“பத்துக்கோடி சொத்து இருக்கட்டும். ஆயிரம் ரூபாய் தரேன்னு சொன்னியே அது எங்கடின்னு சண்டைக்குப் போவியா? இல்லை ஆயிரம் ரூபாய் தராம ஏமாத்திட்டான்னு போலீஸ்ல புகார் கொடுப்பியா?”

“என்னடி சொல்ற?”

“ஆமாம்மா. நேத்து ரயில்ல என் பக்கத்துல உக்காந்து ஆறுதல் சொன்னாம்மா..என் முகத்த நிமித்தித் தன் கண்ணைப் பாக்க வச்சாம்மா. அம்மம்மா! என்ன கண்ணும்மா அவளுக்கு! அதை பார்க்கவே இன்னும் நான் ஆயிரம் பிறவி நொண்டியா வாழத் தயாரா இருக்கேம்மா.

ஒரு பேச்சுக்குச் சொல்றேன். சாமியாரின் பூஜையால ஒருவேளை காலு சரியாயிருச்சின்னு வச்சிப்போம். நான் எத்தனை காலம் சந்தோஷமா இருப்பேன்? அசம்பாவிதம் ஏதும் நடக்காம இருந்தா முப்பது வருஷம் அதிகம் போனா நாற்பது வருஷம். அவ்வளவு தானே!

ஆனா அந்த ராட்சசி – அப்படிச் சொன்னாத் தானே உனக்குப் புரியும் – நான் நாலாயிரம் கோடி பிறவிகள் சந்தோஷமா வாழ வழி பண்ணிட்டுப் போயிட்டாம்மா. நீ சொன்னது சரிதான். அவ கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயைத் தரல. அதுக்குப் பதிலா பத்து கோடி ரூபாய் சொத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டா. நீ என்ன சொன்னாலும் எனக்கு எல்லாம் அந்த ராட்சசி தான்.”

ரஞ்சனி அழுதாள். அவளை விடப் பெரிதாக தாய் அழுதாள். அதையும் விடப் பெரிதாக நான் அழுதேன். அந்த அழுகையின் போது தான் அம்பிகையின் அருட்கொடையின் சூட்சுமம் புரிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.