Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கருணை மனோலய குருபரன்!
கருணை மனோலய குருபரன்!
கருணை மனோலய குருபரன்!

முருகப் பெருமானை தமிழ்க் கடவுள் என்று போற்றுவோம். தமிழின் மூவின எழுத்துகளும் அவன் பெயரில் உள்ளன. மு - மெல்லினம்; ரு- இடையினம்; கா -வல்லினம். அகத்தியருக்கு தமிழும்; பிரணவப் பொருளும் உரைத்தவன் கந்தன். அவன் குறிஞ்சி நிலத் தலைவன் - எனவே அவன் குன்றுதோறாடும் குமரன். தமிழகத்தில் தான் முருக வழிபாடு அதிகம். வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை; சேவலுண்டு ஏவல் இல்லை; குகனுண்டு குறையில்லை என்பதே முருக மகாமந்திரம். வேதம் ஏவ மயூரஸ்யாதி என்பது துதி. வேதமே முருகனுக்கு மயில் வாகனம். முருகன் அமர்ந்திருக்கும் மயில் நம்மை நோக்கியிருந்தால் அது பிரணவாகார வேத மயில். மயிலின் முகம் இடப்புறம் இருந்தால் அது இந்திர மயில். (சூர சம்ஹாரத்தின்போது இந்திரனே முருகனுக்கு வாகனமானான்.) மயிலின் முகம் வலப்புறமாக இருந்தால் அது சூரபத்மனின் மறுவுருவ மயில்.

முருகனைப் போற்றி திருமுருகாற்றுப் படை பாடினார் நக்கீரர். மேலும் பல புலவர்கள் மனமுருகப் பாடி அவனருள் பெற்றனர். ஆதிசங்கரரும் சுப்ரமண்ய புஜங்கம் பாடினார். தேவராயரின் கந்த சஷ்டி கவசமும், பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசமும் தமிழில் அமைந்த அனைத்து பிணிகளையும் நீக்கும் பாடல்களாகும். இவற்றை பக்தியுடன் ஓதி பயன்பெற்றோர் கணக்கில் அடங்கார். முருகன் என்றாலே, சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரியார் நினைவுக்கு வருவார். அவர் பாடிய திருப்புகழ் நினைவுக்கு வரும். அருணகிரி நாவில் முருகனே தன் வேலால் ஷடாட்சர மந்திரம் எழுதி, பிரணவ உபதேசம் பாத தரிசனம் தந்து, முத்தைத் தரு என்று முதலடி எடுத்துக் கொடுக்க, அதனால் பிறந்ததல்லவா திருப்புகழ்! தலங்கள்தோறும் சென்று நெக்குருகிப் பாடியவையல்லவா!

திருப்புகழ் அறிவோம். அதுபோல திறப்புகழ் என்று நூலும் உண்டு. திறம் என்றால் உறுதி, தன்மை, கூறுபாடு, நூற்பகுதி என்று பல பொருட்கள் உண்டு. அதுபோல பல்வேறு சந்த முறையில் முருகன் புகழ் பாடப்பட்டதால் இது திறப்புகழ் எனப்பட்டது. இது சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டது. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான நாகையில், நீலா தெற்கு வீதியில் மெய்கண்ட வேலாயுதமூர்த்தி கோயில் உள்ளது. இங்குள்ள மூர்த்தி முன்னர் விருத்த காவிரியின் வடகரையில், கார்முகேஸ்வரர் கோயிலில் இருந்தவர். டச்சுக்காரர்களால் கோயில் சிதைக்கப்பட, புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை முயற்சியால் 1750-ல் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது. கோயில் தூணில் பிள்ளையின் உருவத்தைக் காணலாம்.

இந்த கோயிலில் காவல் பணி செய்துவந்தவர் அம்பலவாணர். அவர் மனைவி சிவகாம சுந்தரி அந்த தம்பதிக்கு நான்கு ஆண், ஒரு பெண் என ஐந்து பிள்ளைகள். அவர்களுள் ஒருவர் அழகுமுத்து பெயர்தான் அழகுமுத்தே தவிர, சிறுவயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்பட்டார். கல்வி கற்க முடியவில்லை. கோயிலிலேயே தங்கி முருகனைப் பணிந்து வந்தார். தந்தை மறைவுக்குப்பின் காவல்பணி இவருக்குக் கிடைத்தது. அர்ச்சகர் தரும் பிரசாதத்தை உண்டு அங்கேயே வாழ்ந்துவந்தார். ஒருநாள் இரவு பிரசாதம் கொடுக்க அழகுமுத்துவை அழைத்தார் அர்ச்சகர். அவரைக் காணவில்லை. எனவே கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அழகுமுத்துவோ அன்று உடல் அசதியால் வாகன அறையிலேயே தூங்கிவிட்டார். நள்ளிரவில் தூக்கம் கலைந்தது. பசி மிகுந்தது. கோயில் பூட்டப் பட்டுவிட்டதால் வெளியே செல்லவும் வழியில்லை. வேறு வழியின்றி பசியுடனே படுத்துக்கிடந்தார்.

பக்தன் தவிப்பதைப் பொறுப்பானா முருகன்! அர்ச்சகர் வடிவில் வந்து அவரை எழுப்பி உணவு தந்து அகன்றான். அரைத் தூக்கத்தில் அதை உண்ட அழகுமுத்து தன் உடலில் புத்துணர்வு பரவுவதை உணர்ந்தார். தன் உடலைப் பிணித்த நோய் அகன்றுவிட்டிருப்பதைக் கண்டு மெய் சிலிர்த்தார். அப்போது மயில் வாகனத்தில் காட்சிதந்த கந்தன், ஏதாவது பாடு என்றான். காண்பது கனவா நனவா என்று திகைத்தார் அழகுமுத்து. முருகன் அருளால் கவி பிறந்தது. வோலயுதா வேலாயுதா என்று முடியும் வண்ணம் பாக்கள் எழுந்தன. பொழுது புலர்ந்தது. கோயிலைத் திறந்த அர்ச்சகரும், முருகனை வழிபட வந்த மக்களும் அழகுமுத்துவின் பூரணப் பொலிவைக் கண்டு திகைத்தனர். படிக்காத அழகுமுத்து செந்தமிழில் பாடுவதைக் கண்டு பிரமித்தனர். அவர் பாடியவை மெய்கண்ட சதகம் எனும் பெயரில் நூறு துதிகளாக உள்ளன. அதிலிருந்த சில இனிய துதிகள்:

கனவுக்குளே நீ வந்து எனைக்
கலை ஓது எனக் கற்பித்ததும்
நினைவுக்குளே கண்டேன் அலால்
நினைவுக்கு அது நிசமல்லவே
கனையுற்ற நீர் நிழலல்லவே
தோன்றாத் துணையாம் நின்றிடு
வினையத்தை என் சொல்வேன்
ஐயா வேலாயுதா வேலாயுதா.

சூழாமலே கலி தீவினை
தொடராமலே படர் நல்வினை
பாழாமலே அயனாருருய்
பண்ணாமலே பெண்ணாசையால்
ஆழாமலே எமதூதர் வந்து
அணுகாமலே நரகத்தின் வாய்
வீழாமலே எனையாளுவாய்
வேலாயுதா வேலாயுதா.

கல்லாதவன் துதியாதவன்
கருதாதவன் கற்றோர்கள் பால்
செல்லாதவன் பணியாதவன்
தெளியாதவன் செவியாதவன்
பொல்லாதவன் பூணாதவன்
பூசாதவன் புலனைந்தும்
வெல்லாதவன் இனி உய்வேனோ
வேலாயுதா வேலாயுதா

மாதா பிதா ஆசானும் நீ
மாமானும் நீ மாதேவன் நீ
ஆதாரம் நீ ஆகாயம் நீ
ஆகாரம் நீ ஆள்வானும் நீ
தாதாவும் நீ தாரானும் நீ
சார்வானும் நீ சாரானும் நீ
வேதாவும் நீ மாயீசன் நீ
வேலாயுதா வேலாயுதா.

நேசிக்கும் உன் அடியார்களை
நேசிக்கவும் நின்பாதமே
பூசிக்கவும் ஆனந்தமாய்
பூரிக்கவும் போற்றத் தமிழ்
வாசிக்கவும் மௌனத்திலே
வாழ்விக்கவும் செய்யாமலே
வேசிக்கு மால்கொள வையையோ
வேலாயுதா வேலாயுதா

சாம்போதும் வேல் மயிலும் துணை
சடம் வீழ்ந்தபின் பிடி சாம்பலாய்
வேம்போதும் வேல் மயிலும் துணை
வேலாயுதா வேலாயுதா

இதைத் தொடர்ந்து அழகுமுத்துப் புலவர் திறப்புகழ் பாடினார். அவற்றுள் நூறு பாடல்களே கிடைத்துள்ளன.  திருப்புகழ் போலவே இவர் பாடல்களிலும் அறுசமய தெய்வ லீலைகள் பொதிந்திருக்கின்றன. அருணகிரியார் ஈற்றடியை பெருமாளே என்று முடிப்பார். அழகுமுத்து முருகோனே என்று முடிக்கிறார்.

நாதா சிவப்பொழுது பாதா
பொருப்பிலுறை மயில் வீரா
ஞானா நடத்தும் ஒரு
நாராயணற்கரிய
காரோணருக்கினிய
நாகாபுரிக்குள் அமர் முருகோனே.

அழிவில் குரங்கைச் சேனையாய்
எதிர் நிறுவி இலங்கைப் பாவி
இராவணன் அவனை மழுங்கச்
சாடினோன் மகிழ் மருகோனே
அரிய கடம்பைப் பூணு மார்பக
குருபர செந்தில் தேவநாயக அழக
விடங்கத் தியாகனார் திரு
முருகோனே.

குரு வடிவாய் எனை அடிமையதாய் உள
குல தெய்வமாய் அறுமுகமாகி
குருபரனாகிய கருணை மனோலய
குண அனுபூதியை அடைவேனோ.

அழகுசேர் கார்த்திகையின்
விரத நோற்க மயில்
அதனிலே காட்சிதர வரவேணும்
மதுரை மீனாட்சி உமை
கவுரி காமாட்சி என
வரு விசாலாட்சி தரு முருகோனே.

உரியில் தயிர் பானுகர் பொற் திருமால்
உசிதப் பெருமாள் மருகோனே
உயிருக்குயிரே அறிவுக்கறிவே
உரசைப் பெருமான் முருகோனே.

அவரது கடைசி (நூறாவது) வாழி திறப் புகழ்.

சீருள தலங்கள் வாழி
கார்மழை பொழிந்து வாழி
சேவலு மகிழ்ந்து வாழி மயில்வாழி
தேனுறை கடம்பு வாழி
வேலினொடு செங்கை வாழி
தேசிகர் மடங்கல் வாழி மறைவாழி
வாரிதி முழங்கு நாகை
ஆலய மிகுந்து வாழி
மாது குறமங்கை வாழி கயமாது
வாழி திருத்தொண்டர் வாழி
நாகை வரு ரெங்கன் வாழி
வாழுதி மெய்கண்ட வேல முருகோனே.

(கோயிலை நிர்மாணித்த ரங்கன் வாழ்க என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.) இவைதவிர மெய்கண்ட வேலாயுதர் உலா, காயாரோகணக் குறவஞ்சி போன்ற நூல்களையும் அழகுமுத்துப் புலவர் இயற்றினார். ஆனால் அவை தற்போது கிடைக்கவில்லை.

அவர் தனது கடைசி நாட்களில் சீர்காழி சென்று, அங்கிருந்த சேனைத் தலைவர் மடாலயத்தில் தங்கியிருந்து சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் முருகன் திருவடி சேர்ந்தார். அவரது சமாதி சீர்காழி அருகே உள்ள திருக்கோலக்கா தாளமுடையார் கோயில் அருகே உள்ளதாகச் சொல்வர். ஆனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆயினும் ஒரு அதிசயம் என்னவென்றால், சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று மெய்கண்ட வேலர் சன்னிதியில் மாலை நேர தீபாராதனை நடந்துகொண்டிருந்தபோது, அவர் முருகன் சன்னிதிக்குள் நுழைந்ததை பக்தர்கள் பலரும் கண்டனராம். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. எனவே முருகனிடம் ஐக்கியமானார் எனலாம்.

சேந்தனார் சேய்த்தொண்டர் புராணம் என்று 78 முருகனடியார்களைப் பாடியுள்ளார். அதில் துன்றிரு சீர் அழகுமுத்து நாயனாருக்கு அடியேன் என்று போற்றுகிறார்.

முருகன் புகழைப்போல அடியார் பெருமையும் போற்றத்தக்கதே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.