Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பத்திரகாளியம்மன் ஊஞ்சல்
பத்திரகாளியம்மன் ஊஞ்சல்
பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

(கயிலை மாமணி திரு. பழ.தரும. ஆறுமுகம் தம் 30ஆவது வயதில் (1972)ல் இயற்றியது)

1. தந்திமுகன் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
தக்கன்தன் குமரிநீர் ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழர் மனமென்னும் தொட்டில் தன்னில்
சேர்ந்திருக்கும் உமையம்மை ஆடீர் ஊஞ்சல்
திந்திமென முழவொலிக்கத் தில்லை மன்றில்
தேர்ந்தநடம் புரிகின்றீர் ஆடீர் ஊஞ்சல்
பந்தமற எமைக்காக்கும் சிரவை யூரில்
பத்ரகாளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

2. வேலவனின் தாயாரே ஆடீர் ஊஞ்சல்
வெள்ளிமலை வீற்றிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
ஞாலமெல்லாம் புகழாறு முகவன் கையில்
ஞானவேல் வடிவானீர் ஆடீர் ஊஞ்சல்
சீலமுடன் செம்மைசேர் வாழ்வளிக்கும்
திலகநுதல் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
காலமெல்லாம் சிரவைமா நகரம் காக்கும்
காளிஉமை சங்கரிநீர் ஆடீர் ஊஞ்சல்

3. கொன்றைமணி செஞ்சடையான் செம்பா கத்தைக்
கோலமுறக் கொண்டருள்வீர் ஆடீர் ஊஞ்சல்
மின்றயங்கும் சிற்றிடையீர் ஆடீர் ஊஞ்சல்
மீனாட்சி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்
நின்றியங்கி உலகத்தை ஆட்டுவிக்கும்
நீலி, திரிசூலி, பரை, ஆடீர் ஊஞ்சல்
மன்றிலங்கும் நாயகிநீர் ஆடீர் ஊஞ்சல்
மாகாளி சிரவையுளீர் ஆடீர் ஊஞ்சல்

4. நாமணக்க உம்புகழை நாங்களெல்லாம்
நலம்பாடி ஆடிடவே ஆடீர் ஊஞ்சல்
பாமணக்க மக்கள்மனப் பயிர்வா டாமல்
பாங்காய்நீர் வரந்தந்தீர் ஆடீர் ஊஞ்சல்
பூமணக்கக் கனிகனியக் கோயில் எல்லாம்
பொலிவடையச் செய்தவரே ஆடீர் ஊஞ்சல்
தேமணக்கும் அதுபோலச் சிரவை யூரைச்
செய்திடவே வேண்டும் எம்தாய் ஆடீர் ஊஞ்சல்

5. அருள்சுரக்கும் நீரூற்றே ஆடீர் ஊஞ்சல்
அடியவரைக்காக்கும் அம்மை ஆடீர் ஊஞ்சல்
பொருள்சுரக்கும் செந்திருவே ஆடீர் ஊஞ்சல்
புனிதநலத் தாயேநீர் ஆடீர் ஊஞ்சல்
மருள்சுரக்கும் மனம்தேர அஞ்சேல் என்று
வாழ்வளிக்கும் அன்னைநீர் ஆடீர் ஊஞ்சல்
தெருள்சுரக்கச் சேய் யானும் உம்மை பாடச்
சிரவைநகர் காத்தருள்வீர் ஆடீர் ஊஞ்சல்

6. அரும்பொருளே ஆரணங்கே ஆடீர் ஊஞ்சல்
அங்கயற்கண் நாயகியே ஆடீர் ஊஞ்சல்
வரும்பகைகள் மாற்றிடுவீர் ஆடீர் ஊஞ்சல்
வளர்காதல் பெண்ணுமையே ஆடீர் ஊஞ்சல்
பெரும்பகையைத் தீர்த்திடுவீர் ஆடீர் ஊஞ்சல்
பிஞ்ஞகனார் பங்கிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
சுரும்பாரும் பூங்குழலீர் ஆடீர் ஊஞ்சல்
சொற்சிரவை நகருடையீர் ஆடீர் ஊஞ்சல்

7. விளங்குசிவ சங்கரியே ஆடீர் ஊஞ்சல்
வீரவிளையாட் டுடையீர் ஆடீர் ஊஞ்சல்
களங்கமிலா தெம்மையெல்லாம் காக்கும் தாயே
கன்னி, ஒளிர்சிவகாமி, ஆடீர் ஊஞ்சல்
குளங்காவும் சோலைகளும் வானை முட்டும்
கோபுரமும் ஒளிர்பெறவே விளங்கவேண்டும்
வளம்பலவும் சேர்சிரவை நகரந் தன்னில்
வளர்காளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

8. ஓங்காரத் துட்பொருளே ஆடீர் ஊஞ்சல்
உத்தமியே மெய்த்தவமே ஆடீர் ஊஞ்சல்
ஆங்காரம் தீர்த்திடுவிர் ஆடீர் ஊஞ்சல்
ஆதிபரா பரையேநீர் ஆடீர் ஊஞ்சல்
தீங்கெம்மை அணுகாமல் காத்து நிற்கும்
திரிபுரைநற் சிவசக்தி ஆடீர் ஊஞ்சல்
பாங்காகச் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

9. அனைநடை யுடையவரே ஆடீர் ஊஞ்சல்
அபிராமி, புகழ்நாமி, ஆடீர் ஊஞ்சல்
மின்னிடையீர் என் அன்னை ஆடீர் ஊஞ்சல்
விழிக்கடையால் அருள்பவரே ஆடீர் ஊஞ்சல்
பொன்பொருளும் தருபவரே ஆடீர் ஊஞ்சல்
புவிஏழும் பூத்தவரே ஆடீர் ஊஞ்சல்
பன் நெடுநாள் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

10. விரைமலர்க் குழல்வல்லி ஆடீர் ஊஞ்சல்
விமலிகற் பகவல்லி ஆடீர் ஊஞ்சல்
மரைமலர்ப் பதவல்லி ஆடீர் ஊஞ்சல்
மாதுளம்பூ நிறவல்லி ஆடீர் ஊஞ்சல்
வரையினிடை வளர்வல்லி ஆடீர் ஊஞ்சல்
வண்டாரும் தார்வல்லி ஆடீர் ஊஞ்சல்
சிரவையூர்த் தென்றிசையில் நின்று காக்கும்
சிற்சத்தி பராசத்தி ஆடீர் ஊஞ்சல்

வாழி வெண்பா

வாழ்க சிரவைநகர் வாழ்பத்ர காளிபுகழ்
வாழ்க அவர்பாதம் வாழ்த்துமன்பர் - வாழ்கவே
வையகமும் வண்தமிழும் வான்மழையும் மாதவரும்
சைவநெறி யாவும் தழைத்து.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar