Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுப்பிரமண்ய புஜங்கம்
சுப்பிரமண்ய புஜங்கம்
சுப்பிரமண்ய புஜங்கம்

ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவர், ஆறுமுகப் பெருமான். இந்தத் தகவலைப் பலவிதங்களிலும், சங்ககால நூல்கள் விரிவாகவே விவரிக்கின்றன. இதிகாசங்களிலும் புராணங்களிலும் முருகப்பெருமானின் மகிமை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. முருகப்பெருமானின் அருளாடலை விளக்கும் பிள்ளைத் தமிழ் நூல்களோ, அளவில் அடங்காதவை.

அப்படிப்பட்ட ஆறுமுக வள்ளலைப் பற்றி, ஆசார்ய புருஷரான ஆதிசங்கரர் ஓர் அற்புதமான நூலைப் பாடியிருக்கிறார். அந்த நூலின் பெயர் ஸ்ரீஸுப்ரஹ்மண்ய புஜங்கம். 33 பாடல்கள் கொண்ட அந்த நூலுக்கு மிகவும் பெரியவரான ஒருவர், அபூர்வமான உரையை எழுதியிருக்கிறார். அவர்...

காஞ்சி காமகோடி பீடத்திலும், சிருங்கேரி சாரதா பீடத்திலும் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். சாஸ்த்ர ரத்னாகரம் என்னும் உயரிய விருது பெற்றவர். அவருடைய தகுதியையும், உயர்வையும், பற்றற்ற தன்மையையும் உணர்ந்ததால், மரியாதை காரணமாக யாருமே அவர் பெயரைச் சொல்லமாட்டார்கள். தேதியூர் பெரியவா என்று மட்டும்தான் கூறுவார்கள். எதிர்காலத் தலைமுறைக்குத் தெரியவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே, அவரது பெயர் இங்கே எழுதப்படுகிறது.

சாஸ்த்ர ரத்னாகரம் தேதியூர் ப்ரஹ்மஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள் அவர்கள் என்று உரை நூல்கள் அவரது பெயரைக் குறிப்பிடுகின்றன.

மிகுந்த உயர்வும் எளிமையும் கொண்ட அவர், மந்திர ஸித்திகள் பல பெற்றவர். இந்நூலுக்கு உரை எழுதும்போது, முதல் பாடலுக்கான உரையிலேயே, இந்த ஸ்துதியானது ஒரே ஆவர்த்தி பாராயணம் செய்த மாத்திரத்தில் தீராத வியாதிகளையும் போக்கடிக்கக்கூடியது. பூத, பிரேத, பிசாச உபாதைகள், இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்கிறவர்களின் அருகிலேயே அண்டாது. இந்த ஸ்துதியினால் குஷ்டங்கள், குன்மரோகம், க்ஷயரோகம், வலிப்பு, இழுப்பு முதலான தொத்து வியாதிகள் எல்லாம் பறந்துபோய்விடும்.

பன்னீர் மரத்தின் இலையில் விபூதியை வைத்துக்கொண்டு, ஷண்முகனை தியானம் செய்து கொண்டு, இந்த புஜங்கத்தை ஒரு தடவை பாராயணம் செய்து, அந்த விபூதியை அணிந்து கொள்வதால், சகலவிதமான பீடைகளும் அடியோடு தொலைந்துவிடும் என உறுதிபடக் கூறியிருக்கிறார்.

மூன்றாவது பாடலான மயூராதிரூடம் எனும் பாடலுக்கான உரையில், வேதங்களே மயிலாக வடிவம் தாங்கி முருகப்பெருமானுக்கு வாகனமாகிச் சுமந்தன என்று விவரிக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பவை:

அநாதியாக உள்ள சகல வேதங்களும் முருகப் பெருமானைத் துதிக்க முயன்றன. ஆனாலும், யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ என்ற சாஸ்திரப்படி, வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாததான மகிமையோடுகூடிய முருகப்பெருமானின் வடிவத்தை வர்ணிக்க இயலாமல், அவ்வேதங்கள் வருந்தின.

இருந்தாலும், எவ்விதத்திலாவது முருகப் பெருமானை அடைந்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து, இந்த அனைத்து வேதங்களும் ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் தவவலிமையால் மயிலாக வடிவம் கொண்டு முருகப்பெருமானுக்கு வாகனமாகி தங்கள் மனோரதத்தைப் பூர்த்தி செய்துகொண்டன.

இதை ஸ்கந்தோபநிஷத் முதலான நூல்கள் கூறுகின்றன.

மயூரபாவம் நிகமா: தபஸா ப்ராப்ய ஷண்முகம் உத்வாஹ்ய த்ருப்திம் பரமாம், ஸம்ப்ராபு: ஸர்வதா புவி என ஸ்காந்த புராணமும், வேதம்தான் மயில் எனக் கூறுகிறது. (தேதியூர் உரை பக்கம் 13)

இதையடுத்து உபாஸன மஹிமை, சகல வியாதி நிவ்ருத்தி, ஷடக்ஷரீ மஹிமை (ஷடாக்ஷரி என்பது தவறு; ஷடக்ஷரீ என்பதே சரி!) குஹ தர்சனத்தால் பரம ஆரோக்யம் என்றெல்லாம் விவரித்துக் கொண்டு வந்த இந்நூல், அதன்பின் அபூர்வமான தகவல்களைக் கூறுகிறது. அதாவது, தேவசேனை ஏன் தேவலோகத்தில் வளர்க்கப்பட்டாள், வள்ளி ஏன் குறவரிடையே வந்து வளர்ந்தாள் என்பதற்கான காரியங்களையும், காரணங்களையும் தெளிவாக விளக்குகிறது.

ஷடக்ஷரீ மந்திரம் என்பது எது என்று சொல்லி, அந்த ஆறு எழுத்துக்களும் எதை எதை அருள்கின்றன என்று விவரித்து, ஸனத்குமாரர், நாரத மஹரிஷி, அகஸ்தியர், பிரம்மா, தேவேந்திரன், ஸரஸ்வதிதேவி எனும் அறுவரும், ஆறெழுத்து மந்திரத்தை ஆறுமுகனிடமிருந்தே உபதேசம் பெற்றார்கள் என (பக் 29ல்) விவரிக்கிறது இந்த நூல்.
இஹாயாஹி எனத் தொடங்கும், 18-ஆம் பாடலுக்கான உரையில், ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டிய முறையையும் விவரிக்கிறது. அம்பிகையின் மடியில் அமர்ந்திருக்கும் அழகு முருகனை சிவபெருமான் அழைத்துக் கட்டித் தழுவி ஆனந்தம் அடைந்ததாக அமைந்துள்ள பாடல் இது.

இதை நினைவில் வைத்துக்கொண்டு, ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்யும் முறையைப் பற்றி விவரிக்கும் உரையைப் பார்க்க வேண்டும்.

ஷண்முகனுடைய ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை மூன்று பாகமாகப் பிரித்துக் கொண்டு, முதல் இரண்டு அக்ஷரங்களை (எழுத்துக்களை) சக்தி கண்டம் என்றும், நடுவில் உள்ள இரண்டு அக்ஷரங்களை, குமர கண்டம் என்றும், கடைசி இரண்டு அக்ஷரங்களை சிவகண்டம் என்றும் பிரிக்க வேண்டும். இவ்விதம் பிரித்துக்கொண்டு, சிவனோடும் சக்தியோடும் முருகப்பெருமானை இணைத்துத் தியானம் செய்து, ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்பவர்களுக்கு சகலவிதமான சவுபாக்கியங்களும் ஸித்திப்பதோடு, குமார சுவாமியுடன் சேர்ந்து பார்வதி-பரமேஸ்வரனும், (ஸோமாஸ்கந்தர்) ஒரே காலத்தில் தரிசனமும் அளிப்பார்கள் என (பக்கம் 61-62) விவரித்து வழிகாட்டுகிறது இந்நூல்.

திருச்செந்தூரில், பன்னீர் இலையில் வைத்து அளிக்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் விசேஷமானது! அந்தப் பன்னீர் இலை விபூதியின் மஹிமையை விவரிப்பதோடு, பன்னீர் இலை விபூதிப் பிரசாதப் பழக்கம் விஸ்வாமித்திரரால் வந்தது எனச் சொல்லி, அதற்கான காரணங்களையும் (பக்கம் 82-83) இந்நூல் விவரிக்கிறது.

தொட்ட இடமெல்லாம் பக்தியும் ஞானமும் கொட்டிக் கிடக்கும் இந்த ஸ்ரீஸுப்ரஹ்மண்ய புஜங்க உரையாசிரியரான தேதியூர் பெரியவா அவர்கள் மஹாசாஸ்திரக்ஞர் மட்டுமல்ல; நிறைய நூல்கள் எழுதி, எதிர்கால தலைமுறைக்கும் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அவற்றுள் முக்கியமான ஆதித்ய ஹ்ருதயம், ராமாயணம், சவுந்தர்ய லஹரீ முதலான உரை நூல்கள்; மற்றும் அவரே எழுதிய மீனாக்ஷி பஞ்சதசி எனும் மந்திரபூர்வமான நூல் ஆகியவை இன்றைக்கும் பல ஞானிகளாலும் போற்றிப் பாராட்டப்படுகின்றன.

அந்தக் காலத்தில் (1946) இந்த நூலை வெளியிட்டவர்கள் கிரி பிரஸ் எனும் பதிப்பாளர்கள். இந்நூல்கள் எண்: 96, ஜி.என். செட்டி தெரு, சென்னை 600 017-ல், அதே பதிப்பகத்தாரால் பல ஆண்டுகளுக்கு முன் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி நேரத்தில் இந்த ஸ்ரீஸுப்ரஹ்மண்ய புஜங்க பாராயணம் ஸர்வமங்கலங்களையும் அருள, ஆறுமுகனையே பிரார்த்திப்போம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar