Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அமிர்தகடேஸ்வரர்
  உற்சவர்: காலசம்ஹாரமூர்த்தி
  அம்மன்/தாயார்: அபிராமியம்மன்
  தல விருட்சம்: வில்வம், ஜாதி
  தீர்த்தம்: அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை
  புராண பெயர்: திருக்கடவூர்
  ஊர்: திருக்கடையூர்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்




சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.




திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.




 
     
 திருவிழா:
     
  எம சம்ஹாரம் - சித்திரை மாதம் - 18 நாட்கள் - மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் - 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  நிர்வாக அதிகாரி, அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் - 609 311. நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4364 - 287 429. 
    
 பொது தகவல்:
     
 

பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். இங்குள்ள "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.  பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது. விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. இத்தலத்து உற்சவரின் திருநாமம் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.


முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும்.


 
     
 
பிரார்த்தனை
    
 

சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.


50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.


உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  அங்க பிரதட்சணம் , கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும்,புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
 

அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.  சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.


மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.


பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.


அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.


காலசம்ஹார மூர்த்தி: மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.


தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.


எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது,  எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.

சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, ""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.


தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.

சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம்.  இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.


சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.


தீர்த்த சிறப்பு: மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.


மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.


சதாபிஷேகம்: திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.


திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.


திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.  இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.


எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.


நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.


 
     
  தல வரலாறு:
     
 

பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.


சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.


பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar