Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வைகுந்தப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வைகுந்தப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வைகுந்தப் பெருமாள், வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி
  புராண பெயர்: மாயனூர்
  ஊர்: மையனூர்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆண்டுதோறும் மாசி மக உற்சவத்தின்போது நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா இங்கு வெகுபிரசித்தமானது. அச்சமயம் ஆதிதிருவரங்கக் கோயிலிலுள்ள அரங்கப் பெருமாளின் உற்சவமூர்த்தி இந்த மலைக்கு வந்து நீராடிச்செல்வார்.  
     
 தல சிறப்பு:
     
  கருடன் பாறையைப் பிளந்து உருவாக்கிய நீருற்றால் ஏற்பட்ட குளம் கருட குளமெனப்படுகிறது; அதிலிருந்து பெருகி ஆறாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கும் நதி கருட நதியெனப்படுகிறது. தற்போது அது மருவி கெடில நதி என அழைக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு வைகுந்தப் பெருமாள், வரதராஜப்பெருமாள் திருக்கோயில், மையனூர், விழுப்புரம்.  
   
போன்:
   
  +91  
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலின் கும்பாபிஷேகத் திருவிழா  திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத் தலைவரான முத்துக்குமாரசாமியின் உதவியோடு, ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் ஆகியோருடன் கோயில் கொண்டுள்ள வைகுந்தப் பெருமாளுக்கு  மிகவிசேஷமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு சாதிமத பேதம் கடந்து பக்தர்கள் நிதியுதவி செய்தனர்.  
     
 
பிரார்த்தனை
    
  இக்கோயில் பெருமாளின் மகிமைகள் ஏராளம். குழந்தைப்பேறு வேண்டியும் மனக்குறை நீங்கவும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர் ஒருவர் நீண்டநாட்கள் குழந்தைப் பேறின்றி இருந்தார். தனது மனக்குறையை மாதவனிடம் சொல்லிப் பிரார்த்தித்தார். இறைவனும் அவரது குறைதீர்த்து குழந்தைப் பேறு அருளினார் இதனால் தனது நேர்த்திக்கடனாக தன் மகிழ்ச்சியை இக்கோயிலின் கும்பாபிஷேகத் திருவிழாவுக்கு நிதியளித்து வெளிப்படுத்தியுள்ளார்.  
    
 தலபெருமை:
     
  நாரம் என்றால் தண்ணீர்; அயனம் என்றால் படுத்திருத்தல். தண்ணீரில் படுத்திருப்பவர்- அதாவது பாற்கடலில் உறைபவர் என்ற பொருளில் நாராயணன் என்றனர். அந்த நாராயணன் வைகுண்டப் பெருமாளாக அமர்ந்துள்ள மலை இந்த மலை. இறைவனின் நாமத்தை உச்சரித்தாலும் புண்ணியம்; தரிசித்தாலும் புண்ணியம். இந்தக் கருடமலை பெருமாளை தரிசித்தால் அனைத்து யாகங்களையும் செய்ததற்கு ஈடான புண்ணியமுண்டு.  
     
  தல வரலாறு:
     
  பறவைகளின் அரசனும் மகாவிஷ்ணுவின் வாகனமுமான கருடாழ்வாருக்கு ஒருசமயம் சந்தேகமொன்று எழுந்தது. கருடன் பரமாத்மாவின் பிரியத்துக்குரியவரல்லவா? அதனால் பகவான் ஓய்வாக இருக்கும் நேரத்தில், பரந்தாமா, அடியேனுக்கு ஓர் ஐயம். கருணைகூர்ந்து தீர்த்தருளவேண்டும். உலகில் ஏன் ஜீவன்கள் பிறக்கின்றன பிறகு என்ன காரணத்தால் இறந்து சொர்க்கம்- நரகம் புகுகின்றன இன்ப வீடான சொர்க்கத்தை அடைய எந்தவிதமான புண்ணியம் தேவை நரகத்துக்கு வருபவர்கள் எத்தகையவர்கள் என்ன கர்மங்கள் செய்தால் நரகத்திலிருந்து நீங்கலாம் இவைகுறித்து அடியேனுக்கு விளக்கியருளவேண்டும் என கருடன் கேட்டது. செயல்களனைத்திற்கும் மூலரும், செயலே புரியாதவர்போல பாற்கடலில் அறிதுயில் புரியும் ஹரி, கருடனை கருணை பொங்க பார்த்து சிரித்தபடி, வா, உலகை வலம்வந்தபடி பதில்சொல்கிறேன் என்று கருடனின்மேல் ஏறிக்கொண்டார்.

கருடனே, நீ நல்லதொரு கேள்வி கேட்டாய். இதில் உலக ஜீவராசிகளுக்குப் புரியாத ரகசியங்கள் பல உள்ளன. பிறப்பதனைத்தும் இறப்பது உறுதி. இதை மனிதன் நினைப்பதேயில்லை. எமனிடம் சென்றவர்கள் எவரும் திரும்பமுடியாது. இதையுணர்ந்து மனிதர்கள் அறநெறிப்படி வாழ்ந்து, தானதர்மங்களை மேற்கொள்ளவேண்டும். அத்தகையவர்களை அவர்களது தர்மமே காக்கும். அறநெறிப்படி வாழ்ந்து, தனக்குரிய கடமைகளை முறைப்படி செய்கிறவனே எல்லாவிதத்திலும் மேலானவன். பறவைகளின் அரசனே இந்த உலகம் தோன்றும்போது, இதில் 84 லட்சம் ஜீவராசிகள் தோன்றின. அவை கொசு மற்றும் அதனினும் சிறிய சிற்றினங்கள் 21 லட்சமும்; செடி, கொடி, மரவகைகள் 21 லட்சமும்; முட்டையிலிருந்து உருவாகும் பாம்பு, பறவைபோன்ற இனங்கள் 21 லட்சமும்; மனித ஜீவராசிகள் 21 லட்சமும் ஆகும். இந்த உயிர்களனைத்திலும் மானிடனே மேலானவன்.

மானிடனாய்ப் பிறந்து தன் மகத்துவத்தை அறியாதவர்கள் சூழ்ச்சி, சூது, வாது; மண், பெண், பொருள் மயக்கத்துக்கு ஆட்பட்டு, அறநெறியிலிருந்து விலகி பாவமென்ற பாதாளத்தில் வீழ்கிறார்கள். பாவத்திலிருந்து விலகி தரும நெறியோடும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்போடும், இறைவனிடம் பக்தியோடும் வாழ்பவர்களே சொர்க்கத்தை அடைகிறார்கள் என்றார். கருடனிடம் பேசியபடியேவந்த இறைவனுக்கு தாகம் உண்டாகவே, அருகிலிருந்த மலைக்குன்றில் இறங்கினார். கருடனிடம், கொஞ்சம் நீர்கொண்டுவா என பணித்தார். கருடன் அந்த மலைக்குன்றை சுற்றிப் பறந்தது. அங்கே குடிப்பதற்கு நீருள்ள குளமோ, ஏரியோ, ஆறோ எதுவுமில்லை. எனவே கருடன் தரையிறங்கி பாறையின் ஒரு பகுதியை தனது அலகினால் கொத்தி உடைத்தது. பாறை பிளந்து நீர்ப் பிரவாகம் வெளிப்பட்டது. அதிலிருந்து நீரெடுத்துக்கொண்டு சென்று அரியின் தாகம் தணித்தது.

தாகம் நீங்கிய பெருமாள், அங்கிருந்து வடக்கே சிறிது தூரம் சென்று பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ள சோலையில் சற்றுநேரம் சயனித்தார். (இவ்வாறு அரங்கன் சயனித்த இடமே தற்போது ஆதிதிருவரங்கம் என்னும் தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு சயனகோலத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார்.) தாகவேட்கையால் மலைக்குன்றில் இறைவன் இறங்கிய இடம் கருடமலையென்றும், இம்மலை அமைந்துள்ள ஊர் மையனூர் என்றும் அழைக்கப்படுகிறது. மாதவன் தங்கியதால் இது மாயனூர் எனப்பட்டு மையனூர் என மருவியதெனவும்; முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசனின் எல்லைக்குப்பட்ட மையப்பகுதியாக திகழ்ந்ததால் இது மையனூர் என்றானது எனவும் சொல்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியருகே அமைந்துள்ளது மையனூர். இங்குதான் சிறப்புமிக்க கருடமலை வைகுந்தப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருடன் பாறையைப் பிளந்து உருவாக்கிய நீருற்றால் ஏற்பட்ட குளம் கருட குளமெனப்படுகிறது; அதிலிருந்து பெருகி ஆறாக ஓடி கடலூர் அருகே கடலில் கலக்கும் நதி கருட நதியெனப்படுகிறது. தற்போது அது மருவி கெடில நதி என அழைக்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar