Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெங்கடாசலபதி
  உற்சவர்: மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்
  தீர்த்தம்: சுவாமி புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : வைகானஸம்
  புராண பெயர்: கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்னாத்ரி, வேங்கடாத்ரி
  ஊர்: மேல்திருப்பதி
  மாவட்டம்: சித்தூர்
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
பாடியவர்கள்:
     
 

குலசேகராழ்வார் மங்களாசாஸனம்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே.

-குலசேகராழ்வார்

 
     
 திருவிழா:
     
  பிரம்மோற்சவம் ஆண்டு சேவை: தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர், சீதா, லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர். அடுத்த நாள் துவாதசியன்று ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப உலா வருவர். நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ரூ.2500. 5 பேர் பார்க்கலாம். மாலை 5 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு வஸ்திரம், ரவிக்கைத்துணி, ஒரு லட்டு, ஒரு வடை பிரசாதமாக வழங்கப்படும். வசந்த உற்சவம் : சித்திரை மாதம் (மார்ச் / ஏப்ரல்) திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும். மூன்றாவது நாள் சுவாமி யுடன் சீதாராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள். மதியம் 1.30 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு அங்கவஸ்திரம், ரவிக்கைத் துணி, 20 தோசை, 6 வடை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும். பத்மாவதி பரிநயம் : வைகாசி மாதம் நவமி, தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். அதன்பிறகு கொலுவு நிகழ்ச்சி நடத்தப்படும். ஹரிகதை மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்படுகிறது. ரூ.5000 செலுத்தி 5 பேர் அருகில் இருந்து இந்த நிகழ்ச்சியை காணலாம். மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். அபிதேயக அபிஷேகம் : மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக சிறப்பு திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை அடுத்து வரும் மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கும். இதை ஜேஷ்டாபிஷேகம் என்று சொல்வார்கள். மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அபிஷேகம் முடிந்தவுடன் வைரம் பதித்த வஜ்ர கவசம் அணிவிக்கப்படும். பின்னர் சுவாமிகள் ரதவீதிகளில் உலா வருவர். இரண்டாம் நாள் முத்தங்கி சேவை, மூன்றாம்நாள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி பவனி வரும். புஷ்ப பல்லக்கு: நமது பாரம்பரியப்படி கோயில்களில் புதுக்கணக்கு தட்சிணாயன காலத்தில் ஆரம்பிக்கப்படும். ஜூலை மாதம் 16ம் தேதி இதை ஒரு நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் திருமலையில் நடத்து கிறார்கள். அன்று வெங்கடாசலபதியிடம் ஆண்டுகணக்குகள் ஒப்படைக்கப்படும். இதற்காக அன்று மாலை 6 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் பவனி வருவார். இந்த நிகழ்ச்சியில் கோயிலின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் சரியாகத்தான் கணக்கு வழக்குகளை பராமரிக்கின்றனரா என்று சுவாமி பரிசோதிப்பதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை 5 பேர் பார்க்க கட்டணம் ரூ.1000. ஒரு லட்டு, ஒரு வடை மற்றும் வஸ்திரங்கள் பிரசாதமாக தரப்படும். இந்த நிகழ்ச்சியை "புஷ்ப பல்லக்கு' என்றே குறிப்பிடுவர். இந்தப் பெயரிலேயே தரிசன டிக்கட் புக் செய்ய வேண்டும்.  
     
 தல சிறப்பு:
     
  இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 3.30 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். பெயரளவுக்கு அரை மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது. 
   
முகவரி:
   
  திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி-517 501 சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம்.  
   
போன்:
   
  +91-877-223 3333, 227 7777 
    
 பொது தகவல்:
     
 
பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.

ராஜ கோபுரம்: இங்குள்ள ராஜகோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. "படிகாவலி மஹா துவாரம்' என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர்.
 
மூன்று பிரகாரம்: கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை "சம்பங்கி பிரதட்சிணம்' என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

கிருஷ்ண தேவராய மண்டபம்: கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ரங்க மண்டபம்: சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.

திருமலை ராய மண்டபம்: ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

ஜனா மண்டபம்: திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

துவஜஸ்தம்ப மண்டபம்: வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங் களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.

நடிமி படி காவிலி: இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி' என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோயிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருமாமணி மண்டபம்: பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு, "திருமாமணி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டது. "முக மண்டபம்' என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.

பங்காரு வகிலி: திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு வகிலி' எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.

கருவறை: வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை "ராமர் மேடை' என்கின்றனர். இதில் ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்தி
களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக சீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர்.இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர படி' என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது,
""செடியாய வல்வினைகள் தீர்க்கும் 
திருமாலே!
நெடியானே! வேங்கடவா! 
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும் 
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் 
பவளவாய் காண்பேனே!''
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.

பிரகார தெய்வங்கள்: வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.

உண்டியல் மண்டபம்: கோயிலுக்குள் செல்லும் பக்தர்களில் ஒருவர் விடாமல் உண்டியல் செலுத்த சென்று விடுவார்கள். தனது திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கிய பெருமாள், ""யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப கலியுகத்தில் அவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்து விடுவேன்,''என அவரிடம் வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி, அவர் நம்மிடமிருந்து வசூலை நடத்திக் கொண்டிருக்கிறார். "காவாளம்' எனப்படும் மிகப்பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நமது பார்வைக்கு தெரியாமல் உள்ளே நிறுத்தப்பட்டிருக்கும். அது நிறைந்தவுடன் அந்த வண்டியை நகர்த்தி விட்டு, புதிய அண்டாவுடன் இன்னொரு வண்டி உள்ளே தள்ளப்படும். நிரம்பிய பானை பாதுகாப்புடன் உண்டியல் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் படும். பக்தர்களில் சிலர் உண்டியல் எண்ணும் இடத்துக்கு அனுமதிக்கப் படுவர். அவர்கள் கையில் சில்லரைக் காசு கூட கொண்டு செல்லக்கூடாது. ஒருவேளை தப்பித்தவறி, பெரும் தொகை, நகைகளுடன் உள்ளே சென்றுவிட்டால், அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகி விடும்.சில பக்தர்கள் தங்கள் நகைகளை உண்டியல் முன்னால் நின்று கழற்றிப் போடுவதாக நேர்ச்சை செய்துகொள்வர். இந்த நேர்ச்சையை "நின்றபடியே உருவிப்போடுதல்' என்பர். தெலுங்கில் இதை "நிலுவு தோபிடி' என்பார்கள். உண்டியல் மண்டபத்தை "பரகாமணி மண்டபம்' என்பர்.

வரதராஜ சுவாமி சன்னதி: திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

யோக நரசிம்மர் சன்னதி: முதல் பிரகாரத்தில் வடகிழக்கு பகுதியில் யோக நரசிம்மர் சன்னதி அமைந் துள்ளது. இவரை கிரிஜாநரசிம்ம சுவாமி என்று அழைப்பர். சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும். வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இவரது கருவறையை சுற்றி வரும்போது கல் ஒன்று பதிக்கப் பட்டிருக்கும். இதில் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை விரல்களால் எழுதுவார்கள். 15ம் நூற்றாண்டில் இந்த சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், இந்த சன்னதியிலுள்ள கற்கள் பளபளக்கும் விதத்தில் பாலிஷ் கற் களாக இருக்கின்றன.

கருடாழ்வார் சன்னதி: வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரம்மோற்ஸவ கொடியேற்றும்போது அந்த கொடியில் கருடனின் உருவம் பொறிக்க  பட்டிருக்கும். இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத் தால் நோய், நொடி எதுவும் வராது என்பது நம்பிக்கை. வெங்கடாசல பதிக்கு காலை பூஜை முடிந்ததும் பரிவார தேவதைகளுக்கு நைவேத்யம் எடுத்து செல்லப்படும். அதை ஒரு சிவிகையில் (பல்லக்கு) சுமந்துசெல்வார்கள். அந்த சிவிகை கருடாழ்வாரின் அம்சமாக கருதப்படுகிறது. கருவறைக்குள் நுழையும் வழியில் உள்ள ராமர் மேடையில் உற்சவ கருடாழ்வார் காட்சியளிக்கிறார்.

ராமானுஜர் சன்னதி: சங்கீர்த்தன பண்டார அறையின் வடக்கே, ராமானுஜர் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியை, "பாஷ்யக்காரர் சன்னதி' என அழைக் கிறார்கள். ராமானுஜர் திருமலைக்கு வந்தபோது, பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம்புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண் டில் இவரது சன்னதி அமைக்கப் பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சங்கீர்த்தன பண்டார அறை: ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் "தலப்பாகமரா' எனப்படும் "சங்கீர்த்தன பண்டார' என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். "தலப்பாக' கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள் ளது. இதன் காரணமாக இதற்கு "சங்கீர்த்தன பாதுகாப்பு அறை' என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. கி.பி.1424ல் அன்னமாச்சாரியாரும், அவரது மகன், பெயரனும் திருமலைக்கு வந்தனர். அவர்கள் பெருமாளைப் பணிந்து பல பாடல்களை பாடியுள்ளனர். தென்னிந்திய இசைக் கலைக்கு இவர்களது பாடல்கள் மகுடம் சூட்டுவது போல் உள்ளன.

மடப்பள்ளி: பகவானுக்கு நைவேத்தியம்  தயாரிக்கும் முக்கிய சமையலறையை "பொட்டு' என்று சொல்கிறார்கள். இதற்குள் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். அவளை "பொட்டு அம்மா' என்கிறார்கள். இதற்கு "சமையலறை பெண்மணி' என்பது பொருள். இவளை "மடப்பள்ளி நாச்சியார்'  என்றும் அழைப்பதுண்டு. இந்த பெண்மணியே ஸ்ரீநிவாசனுக்கு திருமலையில் தங்க இடமளித்த வராக சுவாமியால் அனுப்பப்பட்ட வகுளமாலிகா என நம்பப்படுகிறது. இவள்தான் பத்மாவதியுடன் ஸ்ரீநிவாசனுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்தாள். வரலட்சுமி விரத நாளில் இந்த தாயாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மற்றொரு சமையலறையிலும் மகாலட்சுமியின் சிற்பம் உள்ளது. இந்த சமையலறையில் அன்னப்பிரசாதம், பணியாரம், லட்டு, வடை, அப்பம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய சமையலறையை "படிப்பொட்டு' என அழைக்கிறார்கள்.

திருப்பதியில் ஆண்டுதோறும் குவியும் முடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும்.... அப்பாடா! கொஞ்சம் மூச்சு விட்டு படியுங்கள்! ரூ.100 கோடி.

டிக்கட் விற்பனை மூலமும் ரூ. 100 கோடி கிடைக்கிறது.

உண்டியல் அல்லாத நன்கொடை வருமானம் மட்டும் ரூ.100 கோடி. இங்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் குடும்பத்துடன் (ஐந்து பேர்) வந்து வி.ஐ.பி., காட்டேஜ்களில் இலவசமாகத் தங்கி சுவாமியை சிறப்பு தரிசனம் செய்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு வஸ்திரமும், ஆறு லட்டுகளும் வழங்கப்படும். ஐந்து லட்சம் முதல் பத்துலட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் மூன்று நாட்கள் தங்கி வஸ்திரம், பத்து மகாபிரசாத பாக்கெட், 10 சிறிய லட்டு பெற்றுக் கொள்ளலாம். பத்துலட்சத்துக்கு அதிகமாக நன்கொடை செலுத்துவோர் 5 பேர் கொண்ட குடும்பமாக ஐந்து நாட்கள் தங்கி சுவாமியை வழிபடலாம். அர்ச்சனைக்கு பிறகு நடக்கும் பூஜையை இவர்கள் பார்க்க அனுமதியுண்டு. முதல் தடவை வரும்போது ஐந்து கிராம் தங்க காசு, தங்கமுலாம் பூசிய வெள்ளி பதக்கம் ஆகியவை தரப்படும். ஆண்டுதோறும் பத்து மகாபிரசாதம் பாக்கெட் மற்றும் 20 சிறிய லட்டுகள் வழங்கப்படும். இந்த நன்கொடைக்கு வருமானவரி விலக்கும் உண்டு.

திருப்பதியில் காட்டேஜ்கள் கட்டவும் விதிகளின் அடிப்படையில் நன்கொடை வழங்கலாம். இவர்கள் திருப்பதியில் ஆண்டில் ஒரு மாதம் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால், ஒரே சமயத்தில் பத்துநாட்களுக்கு மேல் தங்க முடியாது.

திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நூலகம் 1993ல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்நூல்கள் இருக்கும்.
 
     
 
பிரார்த்தனை
    
  செல்வச்செழிப்புக்காகவும், பிறப்பற்ற நிலை வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  முடி காணிக்கை, அங்கப்பிரதட்சணம், மலையேறி பெருமாளை சேவித்தல். 
    
 தலபெருமை:
     
 
யார் பொறுமைசாலி: ஒரு முறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது, பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும், என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்.... இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.

முனிவரின் சோதனை : பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக்கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார்.பக்தனை வரவேற்கான பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு,சிலோகம் சென்றார்.சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டு மென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

பத்மாவதி பிறப்பு : பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.

வேடனாக வந்த சீனிவாசன் : பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.

அதிகாலையில் எழும் சீனிவாசன்: திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம்' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.  ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.   அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை' என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா' என மாறிவிட்டது.

கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முதல் மணி: அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம்' என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு' என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

கல்யாண உற்சவம்: திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம்' என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

திருப்பதி லட்டு: திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம்' என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்த படுகின்றன.

ஏகாந்த தரிசனம்: திருப்பதியில் நள்ளிரவு 1.30 மணி வரை நடை திறக்கப்பட்டு சர்வதரிசனம் நடக்கும். 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும். இந்த தரிசனத்தைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120. இரண்டு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். இந்த தரிசனத்தைக் காண மிக அதிகமான கூட்டம் இருக்கும்.

பாவாஜியுடன் விளையாடிய பாலாஜி: ஹாதிராம் பாவாஜி என்னும் வடநாட்டு பக்தர் சீனிவாசனை தினமும் வணங்குபவர். அவரின் பக்தியை ஏற்ற வெங்கடேசப் பெருமான், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். ""சுவாமி! என்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும்'' என்று பாவாஜி கேட்டுக் கொண்டார். வெங்கடேசனுடன் அதையேற்று விளையாடினார். ஒருநாள் பெருமாள் தான் அணிந்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை விட்டுச் சென்று விட்டார். ஹாதிராம் பாவாஜி காலையில் கோயிலில் சென்று கொடுத்துவிடலாம் என்று எண்ணினார். காலையில் பூஜைக்கு சென்ற அர்ச்சகர்கள் மாலை இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மாலையை வைத்திருந்த பாவாஜியை திருடன் என்று முடிவெடுத்து தண்டித்தனர். பாவாஜி இறைவனே நேரில் வந்து சொக்கட்டான் விளையாடிய உண்மையை சொல்லியும், யாரும் நம்புவதாக இல்லை.பாவாஜியை சிறை வைத்தனர்.அவரிடம் ""நீர் சொல்வது உண்மையானால், இந்த அறையிலுள்ள கரும்புக்கட்டுக்களை தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும்,'' என்று நிபந்தனை விதித்தனர். பாவாஜி பக்தியுடன் பாலாஜியைத் தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் கரும்புக்கட்டுகளை தின்று தீர்த்தார். திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியிலுள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாவாஜியின் அதிஷ்டானம் அமைந்து உள்ளது.

சிலா தோரணம்: திருமலையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் மலைப்பாதையில் சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப்படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். ஆசியாவில் இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை. இரண்டாயிரத்து 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி. உயரம் 10அடி. இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடாழ்வார், ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. இவ்விடத்திற்கு ஜீப்கள் சென்று வருகின்றன.

சிகரத்தில் ஸ்ரீவாரி பாதம்: திருமகளைத் தேடி அலைந்த திருமலை முழுவதும் அலைந்த சீனிவாசப் பெருமாள், இறுதியாக ஓரிடத்தில் வந்து நின்றார் . அம்மலையின் சிகரத்தில் திருமால் பாதம் பதித்து நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்படுகிறது.இப்பாதங்களை "ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கின்றனர். ஒரு அழகான மண்டபத்தின் நடுவில் பாததரிசனத்தை இப்போதும் காணலாம். பக்தர்கள் பாதங்களை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றனர். மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும் ரசிக்கலாம். ஜீப்பில் சென்றால் சிலாதோரணத்தையும், ஸ்ரீவாரி பாதங்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம். இவ்விரண்டு பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

மலைப்பாதையில் திருப்பதி செல்வோமா?: திருப்பதியில் இருந்து பஸ்களில் திருமலைக்குச் சென்றால் போக வர கட்டணம் ரூ.48 ஆகிறது. இதுதவிர, ஏழு மலைகளைக் கடந்து, படிகளில் ஏறியே திருமலையை அடையலாம். இது மிகுந்த புண்ணியத்தை தரும். மலைப்பாதையில் அலிபிரி என்னும் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 11 கி.மீ., தூரம் உள்ளது. திருப்பதியில் இருந்து டவுன் பஸ்சில் அலிபிரிக்கு செல்லலாம். "அலிபிரி' என்றால் "அடிப்படி' என்று பொருள். அலிபிரியில் கம்பீரமாக இரு சிறகுகளை விரித்த நிலையில் பெருமாளை வழிபாடு செய்யும் நிலையில் கூப்பிய கைகளுடன் மிக உயரமான கருடாழ்வார் காட்சி தருகிறார்.மலைப்பாதை வழியாகத்தான் ஆழ்வார்களும், முனிவர்களும், யோகிகளும், மாமன்னர்களும் மலையேறி ஏழுமலையானைத் தரிசிக்க சென்றுள்ளனர். இதை உணர்ந்து மலையேறினாலே, மலைப்பாதையில் செல்வதற்கு சிரமமாகத் தெரியாது. இந்த மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து வழிபாடுசெய்து தங்கள் பயணம் நல்லமுறையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். சில பக்தர்கள் முதல் படியிலிருந்து கடைசி வரை எல்லாப்படிகளிலும், மஞ்சளும், குங்குமம் இட்டு "கோவிந்தா' என முழங்கியபடியே செல்வர். சிலர் படிகளில் கற்பூரம் ஏற்றி படி வழிபாடு செய்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 600 படிகள் உள்ளன. 2ஆயிரத்து 500 படிகள் வரை படிகள் ஏறுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் காலிகோபுரம் என்னும் இடத்தை அடைந்தவுடன் நீளமான படிகள் சமதளத்தில் இருப்பதால் நடக்க எளிதாகி விடும் .

ஸ்ரீ பாத மண்டபம்:  மலைப்பாதையில் நாம் முதலில் அடைவது ஸ்ரீபாத மண்டபம். தன் வாழ்நாளை ஸ்ரீமந்நாராயணனுக்கே அர்ப்பணித்த ராமானுஜர் திருப்பதியில் தங்கி இருந்த போது அடிவாரத்தில் ராமாயண சொற்பொழிவு நடத்துவது வழக்கம்.அவரது மாமனான திருமலைநம்பி, அடிவாரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து சென்று, மலையப்பசுவாமிக்கு பூஜை செய்து விட்டு கீழே இறங்கி வருவார்.ஒருமுறை இப்படி ராமாயணம் கேட்டுவிட்டு, உச்சிகால பூஜை நேரத்தை தவற விட்டு விட்டார். பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் ராமாயணம் கேட்டு நேரத்தை கழித்துவிட்டோமே என்று வருந்தினார். திருமலைநம்பிகளின் வருத்தத்தைப் போக்க வேங்கடவன் அடிவாரத்தில் அவர்முன் காட்சி கொடுத்தார். வெங்கடாசலபதி மலையடிவாரத்திலே நம்பிக்கு நின்று தரிசனம் கொடுத்த இடத்தில் இரண்டு திருப்பாதங்களை காணலாம். அதில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதுவே ஸ்ரீபாத மண்டபம். இன்று ராமானுஜர் ராமாயணம் சொன்ன இடம் அழகிய கோயிலாக காட்சி அளிக்கிறது. எளிமையான கோலத்தில் வேங்கடேசன் காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னதி ஒன்றும் இருக்கிறது. இங்கு பக்தர்களுக்கு பெருமாளின் பித்தளை பாதுகைகளை ஐந்து ரூபாய் டிக்கட் கட்டணத்தில் தருகிறார்கள். அவற்றைச் சுமந்துகொண்டு ஆண்டாள் சன்னதியைச் சுற்றி வர வேண்டும். பெருமாளை எளிய முறையில் வழிபாடு செய்ய அருள்செய்ய வேண்டி பாதுகைகளைச் சுமந்து ஆண்டாளைப் பிரார்த்தனை செய்கின்றனர். மலை யாத்திரையை இக்கோயி லிலிருந்து முறையாகத் தொடங்குகிறார்கள்.

தலையேறு குண்டு: பாத மண்டபத்தை அடுத்துள்ள பகுதி தலையேறு குண்டு பாறை. இப்பாறையில் ஆஞ்சநேயரின் திருவுருவத்தைப் பார்க்கலாம். இவரிடம் தலைபதித்து வணங்கினால், திருமலை யாத்திரை சென்று சேரும் வரையில் தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற எந்த உபாதைகளும் இல்லாமல் சென்று வரலாம் என்று நம்பிக்கை. இதுபோல் தலையேறு குண்டு ஆஞ்சநேயர் உருவங்கள் மலைப்பாதையில் மூன்று இடங்களில் அமைந்துள்ளன. புதியவீடு கட்ட ஆசைப்படுபவர்கள் சிறு கற்களை அடுக்கி இங்கு வேண்டுகின்றனர்.

தசாவதார, ஆழ்வார் மண்டபங்கள்: மலைப் பாதை யில் வழி நெடுகிலும் தசாவதார மண்டபங்கள் உள்ளன. இவற்றில், திருமாலின் தசாவதாரங்களை சிலா ரூபத்தில் வடித்து வைத்துள்ளனர். மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன் ஆகிய ஒன்பது அவதார மண்டபங்களைக் கடந்ததும், கல்கி அவதார மண்டபம் வருமோ என எதிர்பார்த்தால், ஹயக்ரீவர் மண்டபம் வருகிறது. கல்கி அவதாரம் இனிமேல் நிகழப்போகிறது என்பதால் இந்த மாற்று ஏற்பாடு. மேலும், ஹயக்ரீவர் கல்விக்குரிய தெய்வம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் பன்னிரண்டு ஆழ்வார்களின் மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த தசாவதார மண்டபங்களையும், ஆழ்வார் மண்டபங்களையும் முழுமையாகக் கடந்து முடிக்கும் போது நாம் திருமலையின் உச்சியில் இருப்போம். ஆழ்வார்களைப் பற்றிய குறிப்பும், அவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய விபரமும் அந்தந்த மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருவ மண்டபம்: தலையேறு குண்டுவைத் தொடர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள மண்டபத்தை "குருவ மண்டபம்' என்கின்றனர். குருவநம்பி என்னும் குயவர் குடிசையிட்டு இங்கு தங்கியிருந்தார். மலையப்பரின் மரச்சிலையை வடித்து அதன் பாதங்களில் தான் செய்த மண்மலர்களால் பெருமாளைப் பூஜித்து வந்தார். தொண்டைமான்சக்கரவர்த்தி மலைஉச்சியில் பெருமாளை தங்கமலர்களால் பூஜித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். "தான்' என்ற அகந்தையுடன் பொன் மலர்களால் வழிபாடு செய்த மன்னனுக்கு பாடம் புகட்ட பெருமாள் விரும்பினார். மன்னன் பூஜித்த மலர்கள் அனைத்தும் மறையச் செய்தார். குருவநம்பியின் மண்மலர்களை தன் பாதத்தில் கிடக்கும்படி செய்தார். பொன் மலர்களைக் காணாமல் மன்னன் தவித்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், குருவநம்பியின் உ<ண்மையான பக்தியையும், மன்னனின் செருக்கினையும் உணரச் செய்தார். அடுத்தநாள் மன்னன் குருவநம்பியின் பாதங்களை வணங்கி, அவருக்கு ஒரு மண்டபத்தை ஏற்படுத்தி கொடுத்தான். இந்த மண்டபமே குருவ மண்டபம் எனப்படுகிறது.

காலி கோபுரம்:  மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன. அலிபிரியில் முதல் கோபுரம் அமைந்துள்ளது. 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலிகோபுரம்' உள்ளது. 17ம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னனே இந்த மலைப் பாதை கோபுரங்களை கட்டியவன். இக்காலி கோபுரத்தை அடைந்து விட்டாலே திருப்பதி மலையில் பாதி ஏறிவிட்டது போலாகி விடும்.  செங்குத்தாக இருக்கும் படிகள் காலி கோபுரத்துடன் முடிவடைகின்றன.இக்கோபுரத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இரவு நேரத்தில் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இவ்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோபுரம் உள்ளது. இனி மலைப்பாதையில் சரிவான படிகளே பெரும்பாலும் இருப்பதால் நடப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. முற்காலத்தில் காலிகோபுரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு தண்ணீர்பந்தல் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது பெரிய கடைத்தெருவாக காட்சி தருகிறது. சகல பதார்த்தங்களும் கிடைக்கின்றன. இங்கு பக்தர்கள் சற்று இளைப்பாறி பயணத்தைத் தொடர் கின்றனர்.

தபோவன நரசிம்மர்: காலிகோபுரத்தை அடுத்து சற்று தொலைவில் நரசிம்மர் கோயிலைத் தரிசனம் செய்யலாம். நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடம் தபோவனம் என்று அழைக்கப்படுகிறது. ரிஷுபமுனிவர் இத்தபோவனத்தில் தவம் செய்த போது நரசிம்மர் காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது. யோகநரசிம்மர் சுயம்பு வடிவத்தில் நெடிய மூர்த்தியாக காட்சி தருகிறார். பிற்காலத்தில் இவ்விடத்தில் லட்சுமிநரசிம்மருக்கு கோயிலை எழுப்பியுள்ளனர். இத்தபோவனம் மரங்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தருகிறது. தியான பயிற்சி செய்பவர் கள் இக் கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து மனஅமைதி பெறுகிறார்கள்.

வரவேற்கும் வேங்கடாத்ரி: முழங்கால் முறிச்சானிலிருந்து சற்று தூரம் நடந்தால் வேங்கடாத்ரி மலை வருகிறது. இங்கு பரமனுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், பாவை பாடிய கோதையும் காட்சி தருகின்றனர். இத்துடன் மலைப்பாதை நிறைவுபெற்று, சாலை வழியே வரும் பாதையைச் சந்திக்கிறோம்.
திருமலையை எட்டிவிட்டோம். சுப்ரபாத ஒலி தெருவெங்கும் முழங்குகிறது. படியேறி களைப்பை மறந்து திருமலை வேங்கடத்தானின் ஆனந்த நிலையத்தை காணும் ஆர்வம் எழுவதை நம்மால் உணரமுடிகிறது.

முழங்கால் முறிச்சான்: இயற்கை அழகு பச்சைப்பசேல் என்று எங்கும் நிறைந்திருக்கும் மலைப்பாதையில் சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, "மோக்காலு மிட்டா' என்னும் இடம் வருகிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு "முழங்கால் முறிச்சான்' என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை "மோகாலு மிட்டா' என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்தான். அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது.

இசைக்குயிலுக்கு சிலை: திருப்பதி என்றதுமே சுப்ரபாதத்தை நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுக்கும். மொழி தெரியாதவர்கள் கூட, இதை ரசிப்பர். அந்த ஈர்ப்பை தன் இனிய குரலால் நமக்கு வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. "கவுசல்ய சுப்ரஜா...' என்று தொடங்கும் சுப்ரபாதத்தை அவரது இனிய குரலில் கேட்காதவர்களே இருக்கமுடியாது. இந்த இசையரசிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் திருப்பதி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலிபிரி செல்லும் வழியில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர்.

வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இதுவே ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி. அதுபோல அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும். அத்ரி சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது.இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி "ஆதி வராகர்' எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.

சுவாமி புஷ்கரணி: திருப்பதியில் உள்ள தெப்பக்குளத்தை சுவாமி புஷ்கரணி என்பர். பார்ப்பதற்கு மகாவிஷ்ணு தங்கியுள்ள வைகுண்டம் போல காட்சியளிக்கும். கருடபகவான் இந்த குளத்தை வெங்கடா சலபதிக்காக அமைத்துள்ளார். பக்தர்கள் இந்த குளத்தில் நீராடலாம். இந்த தீர்த்தத்தில் உலகிலுள்ள மூன்று கோடி தீர்த்தங்கள் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தில் 12வது நாளில் "முக்கோட்டி துவாதசி' இந்த குளக்கரையில் நடக்கும். அன்று பகவான் இந்த குளத்தில் நீராடுவதாக நம்பிக்கை. அந்த நாளில் கங்கை நதியும் இந்த  தீர்த்தத்திற்கு வந்து நீராடி தன்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை கழுவுகிறது. இந்த குளத்தின் மேற்கு கரையில் வராக சுவாமி கோயிலும், தென்கரையில்வெங்கடாலசபதி கோயிலும் அமைந்துள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு தெப்பத்திருவிழா நடக்கும். பிரம்மோற்ஸவத்தின் கடைசிநாளில் "சக்ர ஸ்நானம்' நிகழ்ச்சி இந்த தீர்த்தத்தில் நடத்தப்படும். தை மாதத்தில் ராமகிருஷ்ண தீர்த்த திருவிழாவும், மாசி பவுர்ணமியில் குமாரதாரா தீர்த்த திருவிழாவும், பங்குனி பவுர்ணமியில் தும்புரு தீர்த்த திருவிழாவும், கார்த்திகை மாத க்ஷிராப்தி துவாதசியில் சக்ர தீர்த்த விழாவும் நடக்கிறது.

ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோயில்: திருப்பதி சன்னதி வீதியில் ஸ்ரீபேடி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. ஒரு பெருமாள் கோயிலின் எதிரே கருடன் அல்லது ஆஞ்சநேயர் கோயில் தனித்து அமைந்திருந்தால் அது மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. அவ்வகையில் வெங்கடாசலபதி கோயிலின் எதிரே இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் விசேஷ பூஜை உண்டு. "பேடி' என்றால் "விலங்கு' என பொருள். அஞ்சனாதேவி திருமலையில் தவமிருந்து ஆஞ்சநேயரை பெற்றதாக சொல்வதுண்டு. வெங்கடாசலபதியின் அருளால் பிறந்த இந்த குழந்தை அவரை எந்த காலமும் பிரியக்கூடாது என அஞ்சனாதேவி நினைத்தாள். ஆனால் விளையாட்டு பிள்ளையான ஆஞ்சநேயரோ சூரியனை பிடிப்பதற்காக வானத்திற்கு பறந்து சென்று திரும்பினார். இதன்பின்னும் அவர் எங்காவது விளையாட செல்லக்கூடாது என்பதற்காக அஞ்சனா அவருக்கு விலங்கிட்டு வைத்தாள். அந்த நிலையிலேயே அவரை வெங்கடாசலபதி சன்னதி முன்னால் நிறுத்தி சுவாமியை எந்நேரமும் வணங்க வேண்டும் என கட்டளையிட்டாள். இந்த விலங்கை நம்மால் காண இயலாது. ஏனெனில் அஞ்சனாதேவி விண்வெளியையே கயிறாக திரித்து அவரது கைகளில் கட்டி வைத்தாள். விலங்கிடப்பட்ட ஆஞ்சநேயர் என்பதால் இவரை "பேடி ஆஞ்சநேயர்' என்கிறார்கள்.இதுதவிர வராக சுவாமி கோயில் எதிரிலும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது.

திருமலை தீர்த்தங்கள்: கபில தீர்த்தம்; திருப்பதி மலையடிவாரத்தில் (அலிபிரி) உள்ள தீர்த்தம் கபிலதீர்த்தம். இதற்கு "ஆழ்வார் தீர்த்தம்' என்றும் பெயர் உண்டு. மாதவன் என்னும் அந்தணன் பெண்பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, இங்கு வந்தான். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான். நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தான். கபிலமுனிவர் இங்கு வந்து சிவனருள் பெற்றதால், இப்பெயர் பெற்றது. தீர்த்தக்கரையில் காமாட்சி சமேத கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. இப்போது இத்தீர்த்தம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. மழைக்காலங்களில் சிறிது தண்ணீர் வரும்.

பாபவிநாச தீர்த்தம்:  பத்ரன் என்ற அந்தணன் தன் மனைவியருடன்
வறுமையில் வாழ்ந்து வந்தான். அந்தணன் மனைவியருள் ஒருத்தி தன் தந்தையின் ஆலோசனைப்படி, பத்ரனை பாபவிநாச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு வரச்சொன்னாள். அவ்விதமே நீராடி தன் வறுமை நீங்கப்பெற்றான். இத்தீர்த்தக் கரையில்பவானிஅம்மன்கோயில் அமைந்துள்ளது.  இத்தீர்த்தங்கள் நீர்த்தாரைகளாக ஐந்து இடங்களில் விழும்படி ஏற்பாடு செய்துள்ளனர். இழந்த சொத்தை மீண்டும் பெற இத்தீர்த்தத்தில் நீராடி பவானி கங்கை அம்மனை வழிபாடு செய்யவேண்டும் என்பது ஐதீகம்.

ஆகாச கங்கை தீர்த்தம்: கேசவபட்டர் என்பவர், ஒருநாள் தன் தந்தையின் சிரார்த்த நாளில் வீட்டிற்கு வந்த அந்தணருக்கு உணவளித்து தட்சணையும் தந்து வழியனுப்பினார். இதன்பிறகு, அவர் அவலட்சண வடிவை அடைந்தார். இதற்கு காரணம் தெரியாமல் தவித்தபோது, அகத்தியரிஷி அங்கு வந்தார். அவரிடம் நடந்த விபரத்தை சொல்லி வருந்தினார். குழந்தை இல்லாத அந்தணரைக் கொண்டு பிதுர்தர்ப்பணம் செய்ததால் குரூர வடிவம் பெறுவார்கள் என்று சொன்ன அகத்தியர்.

இதற்குப் பரிகாரமாக, திருமலையிலுள்ள ஆகாச கங்கையில் நீராடினால் மீண்டும் பழையவடிவம் பெறலாம் என்றார். கேசவபட்டரும் அவ்வாறே செய்து பலன் பெற்றார். பாபவிநாச தீர்த்தம், ஆகாசகங்கை தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில்(பாவாஜி சொக்கட் டான் விளையாடிய இடம்) மூன்று இடங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இப்பகுதிகளுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. போவதற்கும், வருவதற்குமாக சேர்த்து ஒரு நபருக்கு டிக்கெட் ரூ.15. லேபாட்சி பஸ் ஸ்டாப்பில் இருந்து இப்பகுதிகளுக்கு பஸ்சில் செல்லலாம். திருப்பதி பத்மாவதி தாயாரின் தந்தை ஆகாசராஜனின் பெயர் இந்த தீர்த்தத்துக்கு வைக்கப்பட் டதாகவும் சொல்வர்.

பிரம்மோற்சவ தரிசனத்தில் கருடசேவையின் முக்கியத்துவம்: திருப்பதியில் நடக்கும் முக்கியத்திருவிழா பிரம்மோற்ஸவம்.இவ்விழாவில் ஐந்தாம் நாள் வைபவமாக கருடசேவை நடக்கிறது. இந்த விழாவை காண 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். புரட்டாசி மாதத்தில் நவராத்திரியை ஒட்டி இந்த விழா நடத்தப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இந்த விழா இரண்டுமுறை நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தில்முந்தைய நாள் தேவர்களையும், முனிவர் களையும், பக்தர்களையும் விழாவிற்கும் அழைக்கும் அங்குராப்பணம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் முதல் நாள் அன்று மாலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். அன்று இரவு 9மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வலம் வருவார். மறுநாள் காலையில் சிறிய சேஷ வாகனத்தில் உலாவும், இரவில் ஊஞ்சல் சேவையும், ஹம்ச (அன்னம்) வாகனத்தில் பவனியும் நடக்கும். மூன்றாம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் பவனியும், இரவில் முத்துப்பந்தல் வாகனத்தில் பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் பவனியும் இரவில் சர்வபூபால வாகனத்தில் பவனியும் நடக்கும். ஐந்தாம் நாளே மிக முக்கியமான கருடசேவை தினமாகும். அன்று காலையில் மோகினி அவதாரத்தில் சுவாமி உலா வருவார். இரவில் கருடவாகனத்தில் வரும் மலையப்பசுவாமியைக் காண கண் கோடி வேண்டும். இந்த தரிசனம் கிடைக்க வேண்டுமானால் பகல் 2 மணிக்கே கோயிலைச் சுற்றி உள்ள காலரிகளில் அமர்ந்து விடுவது நல்லது. நள்ளிரவு 1மணிவரை கருட சேவை நடக்கும். கருடசேவையின் போது மூலவருக்கு அணியப்படும் லட்சுமி ஆரத்தை உற்சவரே அணிந்து வருவார். எனவே, மூலவரே வெளியே வந்ததாக கருதி சிறிது நேரம் நடை அடைக்கப்படுவது வாடிக்கை. இந்த தரிசனத்தை பார்த்து விட்டால் வெங்கடாசலபதியை காண வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. ஆறாம் திருவிழா அன்றுகாலையில் அனுமான் வாகனத்தில் பவனியும், மாலை 5மணிக்கு தங்கத்தேர் உலாவும், இரவில்  யானை வாகன பவனியும் நடக்கும். ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் சூரியபிரபை வாகனத்தில் பவனியும், இரவில் சந்திர பிரபை வாகனத்தில் பவனியும் நடக்கும். எட்டாம் நாள் திருவிழா அன்று காலையில் தேரோட்டம் நடக்கும். இரவில் குதிரை வாகனத்தில் பவனி நடக்கும். கடைசி நாளான ஒன்பதாம் திருவிழாவில் காலை 5மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். 8 மணிக்கு சக்கர ஸ்நானம் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். பிரம்மோற்ஸவத்தின் முக்கிய விழாவான கருடசேவை கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை உண்டு. திருமால் சீனிவாசனாக அவதாரம் கொண்டு திருப்பதி வந்து சேர்ந்தார். தான் ஓடி விளையாட வைகுண்டத்தில் இருப்பது போல இயற்கை அழகு மிக்க ஒரு இடம் வேண்டும் என பெருமாள் சொல்ல, கருடன் வைகுண்ட மலையையே பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழுமலை ஒன்று சேர்ந்து பூலோகத்திற்கு வந்தது. அங்கேயே சீனிவாசன் குடியிருந்தார். இன்றும் குடியிருக்கிறார். அவ்வளவு பெரியமலையையே பெயர்த்து வந்த கருடனைக் கவுரவிக்கும் வகையில் திருமால் அவரையே வாகனமாக்கி கொண்டார். தன்னைத் தரிசிக்கவரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்தபிறகே, தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வாசலில் கருடபகவான் வீற்றிருக்கிறார்.
 
     
  தல வரலாறு:
     
  கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்?'' என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை  தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார்.லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா' என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல
நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம்' என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு "பத்மாவதி' என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள். பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar