தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > வாசவி ஜெயந்தி
வாசவி ஜெயந்தி
வாசவி ஜெயந்தி (சித்திரை வளர்பிறை தசமி): ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதிதேவியும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு காவலாக நந்தியம்பெருமான் நின்று கொண்டிருந்தான். தினமும் அம்மை, அப்பனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சமாதி மகரிஷி. அப்படி வந்திருந்த அவரை சிறிதுநேரம் காவலுக்கு இருக்கும்படி அமர்த்திவிட்டு நந்தியம் பெருமான் குளிக்கச் சென்றார்.

அப்போது இறைவனை தரிசனம் செய்ய துர்வாச மகரிஷி அங்கு வந்தார். அவரை உள்ளே விட சமாதி மகரிஷி மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட துர்வாசர் பூலோகத்தில் நீ மானுடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். குளித்து முடித்து விட்டு வந்த நந்தி, அன்று மட்டும் தேவியை தரிசிக்காமல் இறைவனை மட்டும் வணங்கினார். இதனால் கோபம் கொண்ட தேவி, நந்திதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பதிலுக்கு நந்திதேவரும் பார்வதியை மானிடப்பெண்ணாய் பூலோகத்தில் பிறந்து வளர்ந்து கன்னியாக அக்னியில் இறங்கி இறைவனை அடைவாய் என்று சாபமிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஒரு ஊரில் விருபாட்சன் வாசம்பா என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குழந்தைச் செல்வம் இல்லையே என இறைவனை விடாது வழிபட்டுக் கொண்டிருந்தனர். இறைவனை வழிபட்டதன் பயனாக இவர்களுக்கு குசுமாம்பிகா என்ற பெயரில் பார்வதி தேவியும், சிரேஷ்டி என்ற பெயரில் சமாதி மகரிஷியும் பிறந்தனர். நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, குசுமாம்பிகா அழகும், அறிவும் கொண்ட கன்னியாக வளர்ந்து நின்றாள். இந்த குசுமாம்பிகா என்ற வாசவியின் அழகைக் கண்டு வியந்த விஷ்ணுவர்த்தன் என்ற மன்னன் அவளை மணம் முடிக்க விரும்பினான். மன்னன் தனது விருப்பத்தை வாசவியின் பெற்றோர்களிடம் தெரிவிக்க வைசிய குல தர்மப்படி அவளை மணமுடித்து தர இயலாது என்றும், தன் குலத்தவர்களை ஆலோசிக்க வேண்டும் என்று வாசவியின் தந்தை கூறிவிட்டார்.

ஊரில் உள்ள ஆலயத்தில் வைசிய குலத்தவர்கள் 714 பேர் ஒன்று கூடினார். அவர்களில் 612 பேர் மன்னனின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தும், மீதமுள்ள 102 பேர் எதிர்ப்பு தெரிவிக்கவே 612 பேரும் ஆலயத்தை விட்டு வெளியேறினர். தனது திருமணத்தில் இத்தனை குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்ட வாசவி மனம் உடைந்து, தான் இப்புவியில் வாழக்கூடாது என்றெண்ணி அக்னிவளர்த்து அதில் குதித்து உயிர்நீத்தாள்.  தங்களால் தான் இந்த தவறு நிகழ்ந்தது என்று வருந்திய 102 வைசிய கோத்திரக்காரர்களும் அதே அக்னியில் உயிர்நீத்தனர். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நாம் தானே என்று நினைத்த விஷ்ணு வர்த்த மன்னனும் உயிர்விட்டான். நந்தி தேவரின் சாபப்படி வாசவியாக பிறந்து வளர்ந்து அக்னியில் குதித்த பார்வதிதேவி ஆரியகுல வைசியர்களுக்கு காட்சி தந்து அருளினாள். அன்று முதல் ஆரிய வைசிய மக்கள் பார்வதி தேவியை தங்கள் குலதெய்வமாக வாசவி கன்னியா பரமேஸ்வரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தனர்.

தை அமாவாசைக்கு அடுத்து வரும் இரண்டாவது நாள் சுக்ல துவிதியை அன்று அக்னி குண்டத்தில் தேவி இறங்கியதால் அன்றைய தினத்தை அக்னி பிரவேச தினமாக ஆரிய வைசியர்கள் கொண்டாடுகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும், மாங்கல்ய பலம் கூடவும் இவளை வழிபடுகின்றனர்.

அத்துடன் வாசவி ஜெயந்தியன்று பெண்கள் சனி பகவானையும் வணங்கி,

மாங்கல்ய காரகனே போற்றி மந்தனே போற்றி
ஆயுளுமும் திறனும் அருள்வோய் போற்றி
காகவாகனா போற்றி! காத்தருள்வாய் போற்றி!

என்று வன்னி இலைகளால் அர்ச்சனை செய்திட மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.