தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான்  தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி  இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான்.  காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.

பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு : இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில்  காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி  தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்  நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு  பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை  கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.  மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும்  இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.

பக்தியுள்ள கணவர் கிடைக்க
: தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக  பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார்.  இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை  கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து  கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி  உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.  இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப்  பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

சாஸ்தாவின் அவதார நாள்:
சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர்  தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். ஐயப்பன் வழிபாட்டில்  நெய்த்தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு. நெய்த்தேங்காய் இருமுடியில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றாகும்.தேங்காயில்  வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்னும் மூன்று கண்கள் உண்டு. ஒரு கண்ணைத் தோண்டி அதில் இருக்கும் இளநீரை  வெளியேற்றிவிடுவர். இளநீர் உலக இன்பத்தைக் குறிப்பதாகும். அதை வெளியேற்றுவதன் மூலம் நம் அஞ்ஞானம் விலகுகிறது. இன்ப  வேட்கை மறைகிறது. நெய்யை நிரப்புவதன் மூலம் தெய்வீக சிந்தனை நம்முள் நிரம்புகிறது. இந்தச் சடங்கின் நோக்கமே மனத்தூய்மை  பெற்று ஞானம் அடைவது தான். இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே  இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். சாத்து என்ற சொல்லுக்கு கூட்டம் என்று  பொருள். இதனால், இவர் சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான் என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார்.  தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும்.

சபரிமலையில் பங்குனி உத்திரம்:
சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டுள்ளார். மாத பூஜை நீங்கலாக  நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள்  சபரிமலைக்கு வருவர். கடந்த சில ஆண்டுகளாக பங்குனி பிரம்மோற்ஸவமும் இணைந்து நடப்பதால், மண்டல, மகர விளக்கு  காலத்திற்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் நடை திறந்திருக்கும் காலமாக பங்குனி விளங்குகிறது.

சம்பந்தர் பாட்டில் உத்திர விழா: சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு  திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள்.  அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு  வரச்செய்தார். பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற  பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள். பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக்  காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.

குளிர்ந்த நெற்றிக்கண்:
சிவனுக்கு வெப்பமான அக்னி நெற்றிக்கண்ணாக இருப்பது போல, அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன்  நெற்றிக்கண்ணாக இருக்கிறது ஒரு கோயிலில்.  திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி  அம்மைக்கு இத்தகைய சிறப்பு இருக்கிறது. அகத்தியர் இந்த அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை  என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளார். இந்த அம்பாளை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பேச்சுத்திறமைக்காகவும்  இவளுக்கு பூஜை செய்து வரலாம். பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி  உத்திரமாகக் கொண்டாடுகிறோம். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று  வாருங்கள். இந்த அம்பாள் மனோபலமும் தருபவள் என் பது குறிப்பிடத்தக்கது.

பால்போலவே வான்மீதிலே...:
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில்  பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று  பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும்  மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.

மணவிழா காணும் குன்றத்து முருகன்: திருப்பரங்குன்றம். பாடல் பெற்ற சிவத்தலமாகவும், முருகனின் அறுபடைவீடுகளில் முதல்  தலமாகவும் உள்ளது. வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயிலான இங்கு, சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கியும்,  பவளக்கனிவாய்ப் பெருமாள் மேற்குநோக்கியும், கற்பகவிநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்குநோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.  தனியாக கோவர்த்தனாம்பிகை சன்னதி உள்ளது.  தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர்,  அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம்  கயிலாயத்திற்கு ஈடானதாகும். சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இம்மலை சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார்.  திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இங்குள்ள முருகன் மீது பாடினார்.

மணவாழ்வு தரும் உத்திர திருநாள்

பங்குனி உத்திரநாளில் சிவபார்வதி திருமணம் நடந்தது. நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி  விரதம் மேற்கொள்வர். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு  உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம்.  இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும்  மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை

* மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
* பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
* தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
* சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.