தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > தெலுங்கு வருடபிறப்பு
தெலுங்கு வருடபிறப்பு
தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பார் ஒரு கவிஞர். தர்மம் என்பது அறம். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்கிறார் வள்ளுவர். வால்மீகி ராமாயணமோ ராமோ விஹ்ரஹவான் தர்ம: தர்மமே வடிவானவன் ராமன் எனப் போற்றுகிறது. அதாவது தாய் கவுசல்யாவிற்கு நல்ல பிள்ளையாய் தந்தை தயரதனுக்கு வாக்குத் தவறாத தனயனாய், தம்பிகளுக்கு உகந்த அண்ணனாய், தர்மபத்னி சீதைக்கு ஏற்ற கணவனாய், வேடன் குகனுக்கு உற்ற நண்பனாய், அடியவன், ஆஞ்சநேயனுக்கு ஆருயிர் அண்ணலாய், நல்லரக்கன் வீடணனுக்கு சிறந்த சரணாகத வத்ஸலனாய், சபரி போன்ற பக்தர்களுக்கு பேரருள் புரியும் பகவானாய் இராமன் தன்னிகரற்று விளங்கியதால் தர்மவான் எனப் போற்றப்படுகிறார்.

தர்மம் க்ருத யுகத்தில் நான்கு பாதங்களோடு இருப்பதாகவும், த்ரேதா யுகத்தில் அது மூன்று பாதங்களில் நிற்பதாகவும், துவாபர யுகத்தில் இரண்டு பாதங்களில் நின்றிருப்பதாகவும் இக்கலியுகத்தில் ஒத்த பாதத்தில் (காலில்) தவமிருப்பதாகவும் பெரியோர் கூறுவர்.

தர்மம் க்ருதயுகத்தில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்னும் புருஷார்த்தங்களோடு நான்கு பாதங்களாக இருந்தது. அதாவது தர்மதர்ம, தர்மஅர்த்த, தர்மகாம, தர்மமோக்ஷமாக, த்ரேதா யுகத்தில் தர்ம மோக்ஷத்திற்கு குறை ஏற்பட்டது. அதை போக்கவே ராமசந்திர மூர்த்தி இம்மண்ணுலகில் திருவவதரித்து அண்டசராசரங்களை வைகுந்தத்தில் ஏத்தி என்னும் ஆழ்வார் கூற்றிற்கு இணங்க அனைவருக்கும் மோக்ஷத்தை பிரசாதித்தார்.

துவாபர யுகத்தில் தர்ம காமத்திற்கு குறைவு ஏற்பட அதை நீக்க கிருஷ்ண பகவான் தோன்றி பாரதப் போரை மூட்டி காமமாகிய இச்சையை போக்கியருளினார். இக்கலியுகத்தில் மோக்ஷம், காமம், அர்த்தம் மூன்றும் வலுவிழக்கவே தர்மம் மட்டும் தனித்து நிற்கிறது. இப்புருஷார்த்தங்களை மீண்டும் இம்மண்ணில் நிலைநிறுத்தவே இராமனே வேங்கடராமனாக, கிருஷ்ணனே வேங்கட கிருஷ்ணனாக தர்மமே வடிவமாக மலைமீது நின்றருள் பாலிக்கின்றான் அர்ச்சா மூர்த்தியாக என்றால் அதில் வியப்பு ஒன்றும் இல்லை.

யுகத்திற்கு யுகம் தர்மம் மாறுபடுகிறது. அதைத்தான் யுக தர்மம் என்கிறோம். எப்பொழுது தர்மத்திற்கு குறைவு ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் பகவான் அவதரிப்பதாக அதாவது தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எனக் கீதைப் பகர்கிறது. அந்த கீதையிலேயே பகவான் கண்ணனெம்பெருமான் ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என எல்லா தர்மத்தையும் விட்டு என்னை ஒருவனையே பற்று என்கிறார்.

ஒவ்வொரு யுகத்திலும் காலங்கள் மாறுகின்றன. அவற்றோடு அது நமக்கு நன்மை பயக்கும் அநுபூதிகள் கொடுக்கின்றன. ஆனால் இயற்கை எப்பொழுதும் நித்திய நவீனமாக இருக்கும். காலங்களில் வசந்த காலம் மநோஹரமானது. மகிழ்ச்சியளிப்பது. ருதூனாம் குசுமாகர: காலங்களில் வசந்தகாலம் நானே என்கிறான் கண்ணன். எனவே வருடத்தின் ஆரம்பத்திற்கு இதனையே காலமானமாக எடுத்துக் கொண்டு முதல் காலமாகக் கூறுவர். அத்தகு வசந்தத்தில் வரும் முதல் மாதம் சைத்ரம். சைத்ர: ஸ்ரீமாநயம் மாஸ: இந்தச் சித்திரை மாதமானது மாதங்களில் சிறப்புற்றது. திதிகளில் முதல் மரியாதை பாட்யமிக்கு. பிரம்மாவின் படைப்பு ஆரம்பமானது இந்த சைத்ர சுத்த பாட்யமியன்றே என்கிறது ப்ரம்ம புராணம். அதுவே யுகாதி. முதல் முதலாக வரும் அந்நாளையே தெலுங்குமக்கள் முதல் பண்டிகையாக யுகாதியைக் கொண்டாடுகின்றனர்.

ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்ததும், கிருஷ்ணர் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டதும் கலியுகம் ஆரம்பமானதும் அந்நாளே எனப் பண்டிதர்கள் கூறுவர். ககோள ஜோதிட சாத்திர நிபுநர் வராஹ மிஹ்ரர் ஊகத்தின் படி சைத்ர மாதமே முதல் மாதம். அந்நாளே பஞ்சாங்கத்தை மக்களுக்கு காணிக்கையாக்கினார். கலியுக கண்கண்ட தெய்வமான பத்மாவதி ஸ்ரீநிவாசனின் பரிபூரண அருள்இந்த ஹேவிளம்பி யுகாதியின் போது உலக மக்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என எண்ணுவோம்.

வஸந்த காலத்தில் முதலாவது. சித்திரை மாதத்தில் முதலாவது. சுக்கில பக்ஷம்,
திதியிலும் முதலாவது. முதல் என்றால் ஆதி. இத்தனை ஆதிகளும் சேர்ந்து வரும் நாள்தான் யுகாதி. யுகாதி ஆண்டு பிறப்பு (வருடப் பிறப்பு) என்றும் இயற்கை பண்டிகை எனவும் உத்தமமான ஆண்டு என்றும் பெயர்கள் உள்ளன. தற்போது தெலுங்கு மாத சைத்ர, சுத்த (வளர் பிறை) பிரதமை அன்று யுகாதி பண்டிகையை கொண்டாடி வருகிறோம்.

புராண விரிவுரைகள்:

1. மஹாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதலில் அவதாரம் மத்ஸ்யம். அந்த அவதாரத்தை விஷ்ணு யுகாதியன்று தான் எடுத்ததாக கூறப்படுகிறது.

2. ராமச்சந்திரன் வனவாசத்தின் பிறகு ராவணனை சம்ஹரித்து, அயோத்திற்கு திரும்பி வந்தது கூட யுகாதியன்றுதான் என்று ராமபக்தர்களின் கூற்று.

3. ஏராளமான கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த பிறகு பாரதக் கதையில் தர்மராஜர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட நாள் யுகாதி என்று ஒரு கதை பிரசாரத்தில் உள்ளது.

4. கிருஷ்ணரின் நினைவுநாள் என்று சிலரின் கருத்து. கிருஷ்ணாவதாரம் முடிந்ததும் துவாபரயுகத்திற்கு பிறகு கலியுக ஆரம்பமே இந்த யுகாதி பண்டிகை என்பது சிலரின் கருத்து.

5. யுகாதி பண்டிகைக்கும் நாரதரின் கதைக்கும் ஒரு தொடர்பு உள்ளது என பிரச்சாரத்தில் உள்ளது. ஒரு பொழுது நாரத மஹரிஷி விஷ்ணு மாயையும் சம்சார பந்தத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்க விஷ்ணு அவருடைய கோரிக்கையை ஏற்கிறார். விஷ்ணு மாயையால் குளத்தில் ஸ்நானமாடிய நாரதர் பெண் உருவத்திற்கு மாறி விடுகிறார். பெண் உருவில் நாரதரை ஒரு நாள் மோஹித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு 60 பேர் குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர்கள் தான் ப்ரபவ, விபவ என்று 60 ஆண்டுகளின் பெயர்கள். சிறிது காலத்திற்குப் பிறகு வறட்சி நிலைமை ஏற்பட்டது. அரசனின் வாரிசுகள் இறந்து விடுகின்றனர். நாரதி விஷ்ணுவை பிரார்த்தனை செய்கிறாள். விஷ்ணு ப்ரத்யக்ஷமாகி நாரதியை திரும்பவும் நாரதராக அனுக்ரஹிக்கிறார். ஆனாலும் நாரதருக்கு தன் மக்களின் மேலுள்ள ஆசை தீரவில்லை. அதனால் விஷ்ணு என்றும் நிரந்தரமாக அவர்கள் பெயர்கள் நிலைக்க வேண்டும் என்று அவர்களின் பெயர்களையே ஆண்டின் பெயர்களாகக் கூற ஏற்பாடு செய்தார். அதனால் தான் அவை திரும்ப, திரும்ப வருகிறது எனவும் கூறுகின்றனர். ஒரு விதமாக பார்த்தால் நாரதரின் கதை கூட யுகாதிப் பண்டிகைக்கு சம்மந்தம் உள்ளது என தெரிகிறது.

சரித்திர கதைகள்:


1. சுக புருஷனான சாலிவாஹன சக்கரவர்த்தி சித்திரை சுத்த பிரதமை அன்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அன்றே யுகாதி என சரித்திர கதையுண்டு.

2. விக்கிரமார்க்கனின் சகாப்தம் ஆரம்பமான நாளும் யுகாதியன்று தான். விக்கிரமார்ககன் சுத்த பிரதமையன்று தான் பட்டாபிஷேகம் செய்து கொண்ட நாளே யுகாதியன்றுதான்.

3. உலகப் புகழ் பெற்ற கணித மாமேதை சாஸ்திரக் கலைஞர் வராஹமஹிரர் சித்திரை சுத்த பிரதமை அன்றுதான் முதல் பஞ்சாங்கத்தை வெளியிட்டதாகவும் அன்றே யுகாதி பண்டிகையையும் நாம் கொண்டாடுகிறோம் என்றும் சிலரின் கூற்று.

யுகாதி ஆசாரங்கள்: யுகாதி பண்டிகையை செய்து கொள்பவர்கள் சில ஆசாரங்களை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அவை,

எண்ணெய் தேய்த்தல்: யுகாதி பண்டிகையன்று சூரிய உதயத்திற்கு முன்பே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். அதனால் கங்காபவானி, லக்ஷ்மி தேவி இவர்களுடைய அனுக்ரஹம் கிடைக்கிறது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது சுப சூசகம். ஆயுர் வேத சாஸ்த்திர முறையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

2. கொடி ப்ரதிஷ்டாபனை: இதையே த்வஜாரோஹணம் என்று கூட அழைப்பர். இந்த ஆசாரம் சில பேரிடமே உள்ளது. அது கூட கன்னட, மஹாராஷ்டிர மக்களிடம் சில பேர் மட்டுமே கடைபிடிக்கின்றனர். வீட்டின் அதன் நடுவில் ஒரு மூங்கில் கம்பை நட்டு அதற்கு வெள்ளி ஜரிகைத் துணியை சுற்றி அதைக் கொடியாக கட்டுவார்கள். அந்த கம்பிற்கு மாவிலைத் தோரணங்கள், வேப்பிலை மற்றும் புஷ்பங்களால் அலங்காரம் செய்கின்றனர். இவற்றுடன் ஒரு சொம்பை கவிழ்த்து வைக்கின்றனர். சில பகுதிகளில் உள்ளவர்கள் அந்த மூங்கில் கம்பிற்கு தேங்காய் கூட கட்டுகின்றனர். இந்த த்வஜாரோஹணம் ஆந்திரா மாநிலத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை.

யுகாதி பச்சடி: இந்த யுகாதி பச்சடிக்கே யுகாதி கொஜ்ஜு, யுகாதி ரசாயணம் என்ற பெயர்கள் கூட உள்ளன. யுகாதியனறு அப்யங்க ஸ்நானத்திற்கு பிறகு யுகாதி பச்சடி செய்து கடவுளுக்கு நைவேத்தியம் செய்து வெறும் வயிற்றில் இந்த பச்சடியை சாப்பிடுகின்றனர். இதனால் புதிய வருடத்தில் தம் வருங்காலம் ஆனந்தமாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

யுகாதிப் பச்சடி அறு சுவைகளுடன் கூடியது. அவை, 1. தித்திப்பு, 2. புளிப்பு, 3. உவர்ப்பு, 4. கசப்பு, 5. உப்பு, 6. காரம் இத்தனை ருசிகளுடன் கலந்த பச்சடி வரவேற்கதக்கதாக உள்ளது. இதில் தித்திப்பிற்கு சிலர் புதிய வெல்லத்தை (சிலர் சர்க்கரை) உபயோகிக்கின்றனர். இதில் ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு தனி ருசி. ஒவ்வொரு சுவைக்கும் ஒரு பொருள் உண்டு. தித்திப்பு - சுகத்திற்கு கசப்பு - வாழ்க்கையில் துக்கத்திற்கும், மற்ற ருசிகள் கஷ்ட நஷ்டங்களுக்கும், ஆனந்தங்களுக்கும் எடுத்துக்காட்டு. வாழ்க்கையில் இவையெல்லாம் சகஜம். இவற்றை சாமார்த்தியமாக எடுத்து சமாளிக்க வேண்டும் என்று இந்த யுகாதி பச்சடியை நாம் உட்கொள்வதன் மூலம் நினைவு கொள்ள வேண்டும் என்பது ஒரு பாவனை.

பஞ்சாங்க ஸ்ரவணம்: பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள் என்று பொருள். 1. திதி, 2.வாரம், 3. நட்சத்திரம், 4. யோகம், 5. கரணங்கள். காலவடிவினனான ஜனார்த்தனன் நிவாஸம் செய்வது திதி. ஜனார்த்தனனை ஸேவித்து ஒரு கிரஹம் பிரதட்சணை செய்யும் தினம் வாரம், நாசனம் ஆகாமல் காப்பாற்றுவது நட்சத்திரம். சந்திரன் நட்சத்திரத்துடன் இணைந்து இருக்கும் காலம் யோகம். சாதனையே கரணம் என்கின்றனர்.

யுகாதியன்று பஞ்சாங்க சிரவணம் முறையாக நிர்வகிக்கின்றனர். ஆண்டின் பலனைக் கேட்பதே பஞ்சாங்க ஸ்வரணம். புதிய வருடத்தில் தேசத்திற்கும். மாநிலத்திற்கும் வரும் ஏற்றத்தாழ்வுகள், வெற்றித்தோல்விகள், பயிர்களின் வளர்ச்சிகள் மனிதர்களின் அவரவர் நட்சத்திரங்களை அனுசரித்து நடக்கப் போகின்றவை, கிரஹணங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் பஞ்சாங்கத்தின் மூலமாக தெரிகின்றது. பஞ்சாங்க ஸ்ரவணம் மனிதனுக்கு அந்த ஆண்டு காலத்தின் வெற்றி தோல்விகள். எதிர்படும் கஷ்டங்களை முன்பே அறிவிப்பதால் அவர்கள் தகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க அவகாசமுள்ளது. யுகாதியன்று புரோகிதர்களின் மூலமாக பஞ்சாங்கத்தை படிக்க வைத்து வருடத்தின் பெயர், வருடத்தின் அதிபதி, வருண தேவதை, தனதானியங்களின் அதிதேவதைகள் பெயர்கள் போன்றவற்றைக் கேட்க வேண்டும் என்றும், அந்த நாளின் பஞ்சாங்க ஸ்ரவணத்தினால் கங்காஸ்நானம் செய்த பலன் கிடைக்கும் என்பது சாஸ்த்ரங்களின் கூற்று.

யுகாதி நிகழ்ச்சிகள்: யுகாதியன்று புதிய வருடம் ஆரம்பம் காரணமாக வருடத்திற்கு வரவேற்பு கொடுப்பதற்காக கலைநிகழ்ச்சிகள், கவி சம்மேளனம் ஏற்பாடு செய்கின்றனர். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலை அன்றே ஆரம்பிக்கின்றனர்.

கலைநிகழ்ச்சிகள்: யுகாதியன்று யுகாதிக்கு வரவேற்பு அளித்து மக்கள் நாட்டியங்கள், நாடகங்கள் போன்றவை மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கின்றனர்.

கவி சம்மேளனங்கள்: யுகாதியன்று கவிசம் மேளனங்கள் நடத்துவது தெலுங்கர்களின் சிறப்பு. யுகாதியைக் குறித்து சிறப்பாக அந்த ஆண்டின் பெயரைக் குறித்து, யுகாதிக்கு வரவேற்பு அளித்து வஸந்த காலத்தை குறித்து கவிஞர்கள் தம் பாவங்களை அற்புதமாக விவரிக்கின்றார்கள். கவிசம்மேளனத்துடன் அஷ்டாவதானம், சதாவதானம் சில இடங்களில் ஏற்பாடு செய்கின்றனர். இவ்விதமாக யுகாதிக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.