தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, கிருஷ்ணர் அசுரர்களை வதைத்து, பக்தர்களைக் காத்து, உயிர்கள் அனைத்திற்கும் நன்மையை அளிக்க பூலோகத்தில் அவதரித்த நன்னாள். கிருஷ்ணாவதாரத்தின் பெருமையை விளக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் சுலோகமே பகவானின் சொரூபத்தைத் தெளிவுறக் காட்டுகிறது: எவரிடமிருந்து இப்பிரபஞ்சம் தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகின்றதோ, எவரின்றி இவ்வுலகம் தோன்றாதோ, எவரைக் காட்டிலும் மேலான பொருள் வேறொன்றும் இல்லையோ, எவர் வேதத்தை பிரம்மாவிற்கு அருளினாரோ, எவர் மாயைக்கு அப்பால் விளங்கும் பெருஞ்சுடரோ, அந்த சத்ய, ஆனந்த, ப்ரஹ்ம ஸ்வரூபியான பரமாத்மாவை தியானிப்போமாக.

உபநிஷத்துக்கள் ப்ரஹ்மம் என்றும், ஏனையோர் பரமாத்மா என்றும், பாகவதர்கள் பகவான் என்றும் போற்றும் அந்தப் பரம்பெருளான வாசுதேவனே கிருஷ்ணராக இவ்வுலகத்தில் அவதரித்தார். கிருஷ்ணாவதாரத்தில் பகவான் நிகழ்த்திய செயல்கள் யாவும் மானிடருக்கு ஆச்சரியத்தைத் தருவதுடன் அவர் சாக்ஷாத் பரமேசுவரனே என்பதை நன்கு புலப்படுத்துகின்றன. மற்ற மூர்த்திகளைக் காட்டிலும் ஸ்ரீகிருஷ்ண ரூபத்திலும் குணத்திலும் ஈடுபட்டு, பக்தர்கள் ஆனந்தக் கூத்தாடுவதின் காரணம் என்ன?

கிருஷ்ணரின் ரூபசவுந்தர்யம்: தேவிகளில் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியையும், புருஷர்களில் ஸ்ரீராமனையும் ரூபசௌந்தர்யத்தில் முதன்மை பெற்றவர்கள் என்பர். ஆனால் பராசக்தியின் அழகும் ஸ்ரீராமனின் லாவண்யமும் ஒருங்கே அமைந்த கிருஷ்ண ரூபத்தில் எவர்தான் மதிமயங்காமல் இருப்பர்.

நாரீஷு லலிதாதேவீ! புருஷேஷு ச ராகவ:
தயோ: ஸம்மேளனம் கிருஷ்ண லாவண்யம் கேன லாவண்யதே

எல்லாம் துறந்த சுக மகரிஷியே பகவானின் சவுந்தர்யத்தில் ஈடுபட்டு, சாக்ஷாத் மன்மத, மன்மத: என்று போற்றி மகிழ்ச்சியடைகிறார்.  மேலும் ஆழ்வார்களும் மற்ற பக்தர்களும் பகவானது குழந்தை, பால்யம் மற்றும் இளமைப் பேரழகில் தங்கள் மனதைப் பறிகொடுத்துப் பேரானந்தத்தில் மூழ்கினர். கிருஷ்ண கர்ணாம்ருதத்தை இயற்றிய ஸ்ரீலீலாசுகர் பகவானின் சவுந்தர்யத்தைப் பல சுலோகங்களில் வர்ணிக்க முயன்றும், அது மனிதனால் வர்ணிக்க இயலாதது என்னும் கருத்தில், மதுரம், மதுரம், மதுரம் என்று மட்டுமே கூறி மதிமயங்கி நிற்கிறார். ஏன்? எந்தச் சமயத்திலும், யாராலும், அணுகி அடையக் கூடிய அவனே அல்லவா நம் ஆத்மாவின் இறைவன்! கன்றிடம் அன்பு கொள்ளும் பசுவைப் போல் பகவான் பக்தர்களிடம் தன் அன்பைப் பொழிகிறான். தனது தூய குணங்களால் இடையர்கள் போன்ற பாமரர்களோடு எப்போதும் நின்று அவர்களைக் கடைத்தேற்றுகிறான். இதை சவுசீல்யம் என்து புகழ்வதுண்டு.

தன் அடியார் யாவருக்கும் தன் நிலையையும் தன் தன்மையையும் அளிக்கிறான். இதை சவுலப்யம் என்பர் பெரியோர்.  அவனே நமக்கெல்லாம் சுவாமி அல்லது எஜமானன். அதனால் தன்னை அண்டினவரிடம் பேரன்பு கொண்டு அவர்களை ஆதரிக்கிறான். ஆயர்பாடியில் கோபர்களிடமும் கோபியர்களிடமும் பகவான் கொண்ட அன்பையும் சவுசீல்யத்தையும் வியந்து - அஹோ-பாக்யம் - அஹோ - பாக்யம் - நந்தகோப -வ்ரஜௌகஸம்
யன் -மித்ரம் - பரமானந்தம் - பூர்ணம் - பிரம்ம - ஸநாதனம் என்று பிரம்மாவே ஆச்சரியப்படுகிறார். ஆதலால் பக்தர் அனைவரும் கிருஷ்ண ரூபத்திலும் குணத்திலும் ஈடுபட்டு மெய்மறந்து பிதற்றுவதில் ஆச்சரியமென்ன!  மேலும் கிருஷ்ணாவதாரத்தில் பகவான் நிகழ்த்திய ஒவ்வொரு லீலையும் கேட்பவர் மனம் மகிழ்ச்சியடையும்படி வெகு விசித்திரமாய் அமைந்துள்ளது. அத்துடன் அவை நம் ஆத்மாவின் உண்மையான பல தத்துவங்களை வெளியீட்டுக் காட்டுகின்றன.

மாயையாகிய தளைகள்: உதாரணமாக, வசுதேவர் சிசுவான பகவானைத் தன் தலைமீது வைத்து கோகுலத்திற்கு எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் கைகளிலும் கால்களிலும் இருந்த விலங்குகள் தெறித்து விழுகின்றன.  மீண்டும் அவர் சிறைக்கு வந்ததும் விலங்குகள் தாமாகவே வந்து அவருடைய கைகளிலும் கால்களிலும் பூட்டிக்கொள்கின்றன. இந்நிகழ்ச்சியின் மூலம் ஜீவாத்மாக்களாகிய நமது நிலை நன்கு புலப்படுகிறது.  ஜீவன், பகவானைத் தன் இருதயத்தில் நிறுத்தி அவனைத் தியானித்து வழிபடுவானாகில் சம்சாரமாகிய பிறப்பு. இறப்புகளால் உண்டாகும் துன்பங்கள் யாவும் தானாகவே அவனை விட்டு விலகும். சம்சாரம் என்பது அநாதிகாலமாக யமுனையின் வெள்ளம் போல் ஓடி வருகிறது. பகவானைத் தியானம் செய்தால் இந்த பிரவாகம் வறண்டு, பிறப்பும் இறப்பும் நீங்கும். ஆனால் ஜீவன் மாயையின் வசம் ஆகும்போது சம்சாரமாகிய விலங்குகள் ஒருவனைத் துக்கத்தில் அமிழ்த்தி, பிறப்பு - இறப்பு என்னும் சிறையில் அவனைத் தள்ளுகின்றன.

வெண்ணெய்த் திருட்டு முதலிய கிருஷ்ண லீலைகள் மற்றோர் உண்மையத் தெரிவிக்கின்றன. இடையர்களின் முக்கிய சொத்துக்கள் பால், தயிர் மற்றும் வெண்ணெய், இவற்றில் வெண்ணெய்யே மிக உயர்ந்தது. சிலநாட்கள் வைத்துக் காக்கத்தக்கது. அவற்றைத் தங்கள் வீட்டு இருட்டு அறைகளில் வைத்து இடைச்சியர் காத்து நிற்பர். கண்ணன் அங்கே புகுந்து தயிர், பால், வெண்ணெய் முதலியவற்றை எடுத்துத் தானும் உண்டு கோபாலர்களுக்கும் கொடுப்பான். உலகத்தில் ஜீவர்கள் வெகு கஷ்டப்பட்டு உழைத்துத் திரவியம் தேடி அதை என்னுடையது என்ற மமதையுடன் வேறு ஒருவரும் அறியாமல் இருக்கும்படி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் உபயோகப்படுத்தாத வெண்ணெய் எவ்வாறு கெட்டுப் போகுமோ, அதுபோலவே பகவானது கைங்கரியத்திற்கும், அவனுடைய பக்தர்களுக்கும் பயன்படாத செல்வம் அழிந்து போனதேயாகும். அவனுக்கும் அவன் அடியாருக்கும் செலவிடப்பட்ட சொத்து ஒருவரின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்து, பிறகு பகவானின் அருளுக்கும் ஒருவரைப் பாத்திரமாகும்படிச் செய்யும். இது இங்கு தொனித்து நிற்கும் பொருளல்லவா? மற்றும் கோபிகா ஸ்திரீகளின் உடைகளை கிருஷ்ணன் எடுத்துக் கொண்டது வேறோர் உண்மையை வெளிப்படுத்தும். கோபியரிடம், இது என்னுடையது, இதை இழந்தால் என் மானம் போய் விடும் என்கிற நான், என்னுடையது என்ற அகம்பாவமும் மமதையும் குடி கொண்டிருந்தன. ஆனால், பகவானை அடைய விரும்புவோர் அகம்பாவம், மமதை என்ற இரண்டையும் அறவே ஒழிக்க வேண்டும். அதை உபதேசிக்கவே கோபிகளை நதியினின்றும் வெளியேறி, இரு கைகளைக் கூப்பித் தங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். இவ்வாடைகளும் அவன் அனுக்கிரகத்தாலேயே முன்னர் கிடைத்தன வல்லவா?

ஆத்மசாக்ஷாத்கார அருள்: இவ்வாறே கிருஷ்ணாவதாரத்தில் அறிவிலிகளால் பெரிய குறையாகக் கருதப்படும் ராஸ லீலையும் ஆத்ம சாக்ஷாத்காரம் என்னும் மகத்தான ஒரு தத்துவத்தைக் காவியங்களில் காணும் சிருங்கார வர்ணனைச் சொற்களால் புகட்டுகின்றது. பகவான் ராஸ லீலை நிகழ்த்திய காலமே சமம் (மனதின் அடக்கம்), தமம் (இந்திரிய அடக்கம்) முதலிய குணங்களாலும் வைராக்கியம், விவேகம், மோட்சத்தில் தீவிரமான ஆசை போன்ற சாதனங்களாலும் மனதில் தோன்றும் சாந்தநிலை. கிருஷ்ணன் செய்த வேணு கானமோ தத்த்வம் அஸி - நீயே அது, ஜீவனே ப்ரம்மம் என்பது போன்ற உபநிஷத்துகளில் வரும் மகாவாக்கியங்களாகும். அவற்றின் பொருளான வேணுகானத்தைச் செவியுற்ற கோபியர்களான ஜீவாத்மாக்கள் கணவன், குழந்தை, சுற்றத்தார், சொத்து என்று சொல்லப்படும் தளைகளையெல்லாம் உதறியெறிந்துவிட்டு, பகவானையே நாடி வருகின்றனர்.

ஆயினும் பகவானுடன் கூடி நிற்கும் ஸாயுஜ்யம் என்ற நிலையிலும் அநாதிகாலமாக வளர்ந்து வரும் அவித்யா எனும் அஜ்ஞானத்தின் பயனாக அகங்காரம் அவர்கள் மனதில் தலைதூக்கி நிற்கிறது. இந்த அகங்காரம் ப்ரஹ்மானுபவம் பூர்ணமாகக் கிடைப்பதற்கு விரோதி. எனவே அதை அறவே ஒழிக்குமாறு பகவான் தன் ஸ்வரூபத்தை அவர்களிடமிருந்து மறைத்து, முக்தியில் நாட்டம் கொண்ட அந்த கோபியர்களைத் துக்கக் கடலில் ஆழ்த்துகிறார். அந்த நிலையில் பகவானைக் காணாது ஜீவன் தவித்துப் புலம்புவதே கோபிகா கீதம். பின்னர் பகவானின் அருளால் அகங்காரம் யாவும் அழிகிறது. உடனே பகவானை அடைந்து அவனுடன் ஒன்றெனக் கலந்து அவனையே எங்கும் காணும் நிலை ஏற்படுகிறது. இதுவே ராஸக்கிரீடை. இவ்வாறு ஆத்மசாக்ஷாத்காரம் என்றால் என்ன? எனும் தத்துவத்தை உபதேசிக்கவே பகவான் ராஜலீலையை நிகழ்த்தினார். இதேவிதமாக பல லீலைகள் ஆத்மாவைப் பற்றிய ஞானத்தையே தொனித்து நிற்கும்படி காட்டுகின்றன. மேற்கூறிய உண்மையை ஒருவரும் மறுக்க முடியாது. ஏனெனில் கிருஷ்ணாவதாரமே ப்ரஹ்ம வித்யையை ஜீவராசிகளுக்குப் போதிப்பதற்காக ஏற்பட்டதன்றோ? கர்மம் பெரிதா? பக்தி பெரிதா? என்கிற விஷயத்தில் புத்திமான்களுக்கும் கலக்கம் ஏற்படுவது இயல்பு. வேதங்கள் இம்மூன்றினுள் ஒவ்வொன்றையுமே மிகவும் உயர்ந்தது என வெற்வேறிடங்களில் பேசுகின்றன. ஆனால், இம்மூன்று மார்க்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல. ஒரு மார்க்கம் மற்றொன்றிற்கு அனுகூலத்தைச் செய்வதாக இருக்கிறது என்னும் விஷயத்தை ஜீவர்களுக்குப் புரிய வைத்தது கிருஷ்ண பரமாத்மாவே.

போர்க்களத்தில் பதைத்து நின்ற பார்த்தனுக்கு ஆத்ம சொரூபம் எப்படிப்பட்டது என்று உபதேசித்து, அதை அடைவதற்குக் கர்மயோகம் உடனே முக்தியைக் கொடுக்க முடியாது எனினும், கர்மாவை யாதொரு சுகத்தையோ, கவுரவத்தையோ, லாபத்தையோ விரும்பாமல் அனுஷ்டித்து வந்தால் அதன் பயனாக சித்த சுத்தி ஏற்படுகிறது. சித்தம் சுத்தியடைந்தால் பகவானிடம் பக்தி வளர்கிறது. பக்தி பக்குவமாகி முதிர்ந்தால், ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. ஆகவே கர்மயோகம் பக்தியை வளர்த்து, பின்னர் ஞானம் உதித்து மோக்ஷம் சித்திக்கும்படிச் செய்கிறது. கர்மம், பக்தி, ஞானம் எனும் மூன்று மார்க்கங்களையும் இணைத்து, அவை ஒன்றோடொன்று எவ்விதமாக சம்பந்தப்பட்டு நிற்கின்றன என்பதை உபதேசம் செய்த பெருமை கிருஷ்ணருடையதே. இப்படி அர்ஜுனனுக்குதச் செய்த உபதேசத்தின் தாத்பரியத்தையே பரம பாகவதரான உத்தவருக்கு உபதேசிக்கிறார் பகவான். ஆரம்பத்தில் பக்தியின் பெருமையை விஸ்தாரமாகக் கூறிப் பிறகு ஞானத்தையே உத்தமமான புருஷார்த்தமாக உபதேசிக்கிறார். ஆதலால் பகவானிடத்தில் பக்தி முதிர்ச்சியடைவதே ஞானம். பக்திக்கும் ஞானத்திற்கும் யாதொரு பேதமும் இல்லை. பால் வெண்ணெய்யாக மாறுவது போல பகவத் பக்தியே ஞானமாக மாறுகிறது என்னும் உண்மையை நன்கு விளக்குகிறார் பகவான். இவ்வாறு ரூபத்தின் பேரழகினாலும், மனிதனால் இயலாத தெய்விகச் செயல்களினாலும் பக்தர்களுக்கு எக்காலத்திலும் அருள்புரிந்து, ஆத்ம ஞானத்தை உதிக்கும் படிச் செய்யும் கிருஷ்ண பகவானை எண்ணி எண்ணி மனமுருகி, பக்த கோடிகள் அவரையே எப்போதும் சரணம் அடைவதில் ஆச்சரியம் உண்டோ?

இக்காரணத்தினாலேயே, வேதாந்திகளுள் முன்னணியில் விளங்கும் ஸ்ரீமதுசூதன சரஸ்வதி, கிருஷ்ண பரமாத்மாவின் அளவற்ற கல்யாண குணங்களால் அவருக்கு வசப்பட்டுத் தேன் சொரியும் மொழிகளால், வேணுவைக் கையில் ஏந்தி, கருத்த மேகம் போல் காந்தியுடனும், பீதாம்பரத்தின் அழகுடனும், சிவந்த அதரங்கள், சந்திர பிம்பம் போன்ற முகம், தாமரை மலரையொத்த கண்கள் இவற்றுடன் விளங்கும் கிருஷ்ணனையன்றி வேறு தத்துவத்தை நான் அறியேன் என்று வெகு அழகாகக் கூறுகிறார்.

வம்சீ விபூஷித கராத் நவ நீரதாபாத்
பீதாம்பராத் அருண பிம்ப பலாதரோஷ்டாத்
பூர்ணேந்து ஸுந்தர முகாத் அரவிந்த நேத்ராத்
க்ருஷ்ணாத் பரம கிமபி தத்வம் அஹம் ந ஜானே.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.