தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > ராமானுஜ ஜெயந்தி
ராமானுஜ ஜெயந்தி
சக்ரவர்த்தி என்ற வைணவப் பெரியார் காஞ்சியைச் சேர்ந்தவர். ஒருமுறை அங்கே நதியில் மிதந்து வந்த ஒரு சவம் கரையில் ஒதுங்கியது. அச்சவத்தின் தோள்களில் சங்கு சக்கரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனால், இறந்தவர் ஒரு வைணவர் என்று புரிந்து கொண்டார் சக்ரவர்த்தி. பஞ்ச சம்ஸ்காரம் என்பது வைணவப் புனிதச் சடங்கு. இதை ஒரு குருவிடம் செய்துகொள்ள வேண்டும். இது பின்வரும் ஐந்து பாகங்களைக் கொண்டது.

1. திருமாலின் சங்கையும் சக்கரத்தையும், சீடனின் இரு தோள்களிலும் குரு பொறிப்பது.
2. வைணவர்களின் மதச் சின்னமாக திருமண், திருச்சூர்ணம் இவற்றை குரு சீடனுக்கு அணிவிப்பது.
3. திருமாலின் அல்லது ஆழ்வார்களின் பெயர்களைச் சீடனுக்கு வைப்பது.
4. ரகசிய மந்திரங்களைச் சீடனுக்கு உபதேசம் செய்வது.
5. பெருமாளைப் பூஜை செய்யும் முறையை உபதேசிப்பது.

சிறிது காலம் பொறுத்திருந்து பார்த்தார் சக்ரவர்த்தி. இறந்தவனைச் சொந்தம் கொண்டாடி-ஒருவரும் வரவில்லை. அனாதைப் பிணத்தை எத்தனை காலம் தான் அப்படியே வைத்திருக்க முடியும்? ஒரு வைணவரின் பிணத்தை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை சக்ரவர்த்திக்கு. ஆபத்துக்கு தோஷம் இல்லை என்பது பழமொழி. அதனால் அந்த வைணவப் பிணத்துக்கு சக்ரவர்த்தியே ஈமச்சடங்குகளைச் செய்தார். யார் என்று தெரியாமல் ஈமச் சடங்குளைச் செய்ததால், அவரை ஊர் மக்கள் விலக்கி வைத்தனர். அனாதைப் பிணத்துக்கு இரங்கி, தான் செய்த நல்ல காரியத்துக்காகத் தன்னை ஊரார் ஒதுக்கிவிட்டனரே என்று துயரத்தில் ஆழ்ந்தார் சக்ரவர்த்தி. அப்போது காஞ்சி வரதராஜபெருமாள் அர்ச்சகர் மூலமாக, அவன் (சக்ரவர்த்தி) ஊருக்குப் பொல்லான். ஆனால் எனக்கு நல்லான் என்று அருளினார். பெருமாளுடைய அருள் வார்த்தையைக் கேட்டு, அதிசயப்பட்டனர் மக்கள். சக்ரவர்த்தியை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அது முதல், அவருக்கு நல்லான் சக்ரவர்த்தி என்றே பெயர் ஏற்பட்டது. இன்றைக்கும் இவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் நல்லான் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்றனர். இச்சம்பவம் காஞ்சிக்குப் பதிலாக, திருவரங்கத்தில் நிகழ்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி சக்ரவர்த்தி மற்றவர்களுக்காக இரக்கப்பட்டதைப் பெருமாளே மகிழ்ந்து பாராட்டினான். ஜீவராசிகளிடம் ஒரு மனிதன் இரக்கம் காட்ட வேண்டும். எல்லா நற்குணங்களிலும், தர்மங்களிலும் மிக உயர்ந்தது இரக்க குணம்தான். இதை ராமபிரானே, இரக்க குணம்தான் மிக உயர்ந்த தர்மம் என்று சீதையிடம் கூறி இருக்கிறான். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நஞ்சீயர் என்னும் வைணவ குருவிடம் ஒருவன், வைணவன் என்பதற்கு என்ன அடையாளம்? என்று கேட்டான். நஞ்சீயர், மற்றவன் துன்பப்படுவதைப் பார்த்து, எவன் ஒருவன் ஐயோ என்று இரக்கப்படுகிறானோ, அவன்தான் உண்மையான வைணவன்.

இவன் கெட்டவன், இவனுக்குக் கடவுள் கொடுத்த சரியான தண்டனை தான் இது என்று ஒருவன் நினைத்தால், அவன் உண்மையான வைணவன் அல்லன் என்று கூறினார். அதாவது மற்றவன் நல்லவனோ, கெட்டவனோ அவன் துன்பப்படுவதைக் கண்டால், எவன் இரக்கப்படுகிறானோ, அவனே வைணவன். இதே கருத்தைத்தான், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த வைஷ்ணவ ஜனதோ என்ற பிரசித்த பெற்ற குஜராத்திப் பாடலும் கூறுகிறது. பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவர் கூறுகிறார்:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்-        (திருக்குறள்-30)

நல்லான் சக்ரவர்த்தி வைணவ குருவாகவும் விளங்கினார். பல சீடர்களுக்கு வைணவப் புனிதச் சடங்கான பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். சோழ மன்னன் கொடுத்த தொல்லையால் ஸ்ரீராமானுஜர் கர்நாடகாவுக்குச் சென்றார். திருவரங்கத்திலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில், ஸ்ரீராமானுஜரும் அவருடைய சீடர்களும் பல நாட்கள், பசி தாகத்துடன் இருந்தனர். ஒரு நாள் இரவில், காட்டில் சில வேடர்களைக் கண்டனர்.  கர்நாடகாவிற்கு வழிகேட்டனர். பசியுடன் வந்தவர்கள் அந்தணர்கள் என்பதை அறிந்தனர் வேடர்கள். அவர்களை அன்புடன் வரவேற்று நெருப்பை மூட்டி, குளிர் காய வைத்தனர். வேடர்கள், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டனர். சீடர்கள், நாங்கள் திருவரங்கத்திலிருந்து வருகிறோம் என்றனர். வேடர்கள், அங்கே ஸ்ரீராமானுஜர் நலமாக இருக்கிறாரா? என்றனர். சீடர்கள், உங்களுக்கு ஸ்ரீராமானுஜரை எப்படித் தெரியும்? என்றனர். வேடர்கள், நாங்கள் நல்லான் சக்ரவர்த்தியின் சீடர்கள். எங்களுக்கு எங்கள் குரு, ஸ்ரீராமானுஜருடைய பெருமையை எடுத்துக் கூறியிருக்கிறார் என்றனர்.  சீடர்கள், இந்த மகான்தான் ஸ்ரீராமானுஜர் என்று சொல்லி அவரைக் காட்டினர்.

வேடர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் ஸ்ரீராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். வந்தவர்களுக்கு தேன், தினை, கேழ்வரகு முதலியவற்றை உண்பதற்கு அன்புடன் கொடுத்தனர். ராமானுஜர் மகிழ்ந்து, நல்லான் என்னும் மேகம், இந்தக் காட்டில் நம்மேல் அன்பு மழையைப் பொழிந்து இருக்கிறது என்றார். இப்படி ஸ்ரீராமானுஜராலும் அன்புடன் பாராட்டப் பெற்றவர் நல்லான் சக்ரவர்த்தி. ஏழை எளியவர்கள்பால் ராமானுஜருடைய கருணையும் அளவற்றது. மேகம் எல்லா இடங்களிலும் மழை பொழிவதைப் போல, எல்லாரிடத்திலும் கருணை மழையைப் பொழியும் ஸ்ரீராமானுஜர் என்று அமுதனார் அழைக்கிறார். (ராமானுஜ நூற்றந்தாதி).  ஸ்ரீராமானுஜர் டெல்லியிருந்து செல்வப் பிள்ளை மூர்த்தியை எடுத்து வரும்போது, மேல் கோட்டைக்கு அருகில், சில இடையூறுகள் ஏற்பட்டன. அப்போது தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள், பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அந்த மக்களிடம் மிகுந்த கருணை கொண்டார் ஸ்ரீராமானுஜர். அவர்களைத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்தார். மேலும், திருமாலுடைய அருள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்படியாக ஓர் ஏற்பாடும் செய்தார்.

கடுமையான சாதிச் சூழல் நிலவிய 11-ஆம் நூற்றாண்டிலேயே ஒவ்வோர் ஆண்டும், மேல்கோட்டை பெருமான் பிரம்மோற்சவத்தின்போது, மூன்று நாட்கள் அவர்கள் திருக்கோயிலுக்கு வருவதற்கு அனுமதி அளித்தார் ஸ்ரீராமானுஜர். அந்த மூன்று நாட்களிலும் திருக்குலத்தார் கோயில் குளத்தில் நீராடி, கோயிலில் வலம் வந்து, சுவாமியின் தீர்த்தப் பிரசாதம் வாங்கிக் கொள்ளலாம். இப்படி திருக்குலத்தாரிடம் கருணை கொண்டு, அபயம் அளித்தவர் ஸ்ரீராமானுஜர்.

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 4-4-1017 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப்பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளையபெருமாள்.

இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பி. அதேசமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக்கொண்டார்கள். பெரிய நம்பி, இளையபெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்றுவரை அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார்.

ராமானுஜர் பிட்சைக்குப் போகும்போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்றபோது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்டபின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர்.

ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.

இதேபோல், அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர்.

அப்போது, சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே, சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலைமீது ஸ்ரீராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து, இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலைவிட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடிகொள்ளப்போகிறேன் என்று சொல்லி, அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில்  தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக்கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக்கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர்.

பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும்  அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப்பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சிதருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பதுபோல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின்முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம்தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டுவிரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்கமுடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும்போது கட்டை விரலால் சுட்டுவிரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள்பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

வைணவத்தில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற இன வேறுபாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர்தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்துவருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகுதான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.