தினமலர் முதல் பக்கம் iPaper | RSS Feed
 
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 
 

முதல் பக்கம் > வரவிருக்கும் பண்டிகை > பலராம ஜெயந்தி!
பலராம ஜெயந்தி!
பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது.

மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

நாம் கிருஷ்ணரைக் கொண்டாடும் அளவு அவருடைய தமையன் பலராமரைப் போற்றுவதில்லை. வடநாட்டில் இவரை கருணையே வடிவமானவர் எனப்போற்றி விழா எடுக்கிறார்கள். இவ்வுலகில் இவரைப் போன்ற தயாளு வேறு எவருமில்லை. ஆதரவற்றோரைக் காப்பவர், அவர்களின் கஷ்டங்களைக் களைந்து, தடைகளைக் தகர்த்தெறிபவர் எனப்போற்றி வணங்கப்படுபவர். கிருஷ்ணரின் தமையன் தாவூ (அண்ணன்) பலராமர். இவரின் அவதார தினத்தை நாம், சித்திரை மாதம் வளர்பிறை திரிதியைத் திதி (அட்சயத் திரிதியை) அன்று அனுசரிக்கிறோம். அதுவே வட இந்தியாவில் ஆவணி மாதம் பவுர்ணமி சிராவண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. முக்கியமாக அவர் பிறந்து, வளர்ந்த ஆயர்பாடி, மதுரா உள்ளிட்ட பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்திக்கு மூன்று நாட்களுக்கு முன் சஷ்டி திதியன்று பலதேவா சத், லாலா கி சத், ஹல் (கலப்பை) சஷ்டி என்றும், குஜராத்தில் ரண்தன் சத் எனவும் விமரிசையாக விழா எடுக்கப்படுகிறது.

தேவகியின் ஏழாவது சிசுவாகக் கருவிலிருக்கும்போதே நந்த கோபனின் மற்றொரு மனைவி ரோஹிணியின் கருவுக்கு சக்தி தேவியால் மாற்றப்பட்டதால் சங்கர்ஷணன், ரோஹிநேயன் என்றும், வசீகரத் தோற்றத்துடன் மகிழ்ச்சியும், சந்தோஷமும் அளித்து பல சாலியாகவும் விளங்கியதால் குலகுரு கர்கீய மகரிஷியால் பலராம் எனப்பெயர்ச் சூட்டப்பட்டு உழவுத் தொழிலுக்கு அதிபதியாய், கலப்பையைக் கையில் ஏந்தியுள்ளதால் ஹல்தாரி வெண்சங்கு போன்ற உடலழகு உள்ளதால் வால்வளை மேனி வாலியோன் என இளங்கோ அடிகளால் சிறப்பிக்கப்பட்டவர் பலபத்ரன். இன்றளவும் மதுராவாசிகளால் தாவுஜி மகாராஜ் என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார்.

நந்தகோபனின் வாரிசுகளாகப் பல ராமன் கோகுலம், பல்தேவ் பிரதேசங்களையும், கிருஷ்ணன் மதுரா, கோவர்தன், பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளையும் அரசாண்டதாகக் கூறப்படுகிறது. பிருந்தாவனத்துக்குத் தென்கிழக்கே இருபத்தைந்து கி.மீ. தொலைவில் யமுனை நதியின் மறு கரையில் அமைந்துள்ளது. ரிர்ஹா என்றழைக்கப்பட்ட பல்தேவ்கிராமம். பிருந்தாவனத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் சென்றடையலாம். பஸ் வசதி உண்டு. புதுதில்லியிலிருந்து மதுரா சுமார் மூன்று மணி நேரப் பிரயாணம். இக்கோயிலின் தலப்புராணத்தை அறிந்துக் கொள்ள சுமார் 5000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனும், பிரத்யும்னனின் பேரனும், அனிருத்தின் புத்திரனுமான வஜ்ரபாகா மதுராவை அரசாண்ட காலம். தன் கொள்ளுப் பாட்டனார்களின் புகழ் எங்கும் நீக்கமற நிறைந்து, அமைதியும், மகிழ்ச்சியும் மதுரா எங்கும் பொங்கிப் பரவி நிற்க ஆவல் கொண்டான். சாண்டில்ய ரிஷியின் அறிவுரையை ஏற்று, அழிக்க முடியாத ப்ரஜ எனும் ஒரு வகைக் கல்லால் பதினாறு கிருஷ்ணர் சிலைகளையும், ஒரு பலராமர் சிலையையும் வடித்து ராஜ்யமெங்கும் நிறுவினான். அவற்றில் எல்லைக் காவல் தெய்வங்களாக மதுராவுக்கு கேசவன், கோவர்தன் பிரதேசத்துக்கு ஹரிதேவா, பல்தேவுக்கு பலராமன், பிருந்தாவனத்துக்கு கோவிந்தன் என நிர்மாணித்தான்.

அந்நியப் படையெடுப்புகளின்போது களவாடப்பட்டும், அழிக்கப்பட்டும், எதிரிகளிடம் சிக்காமல் இருக்க மறைவிடத்தில் பதுக்கப்பட்டும் பல சிலைகள் காணாமல் போயின. அதில் ஒன்று பல்தேவ் சிலை. ஒரு சமயம் ஸ்ரீவல்லபாச்சாரியாரின் சீடர் கோகுல்நாத் கோஸ் சுவாமியின் கனவில் சூசகமாக அருகிலுள்ள பால் குளத்தில் அமிழ்ந்து இருப்பது தெரியவர, அவரது பெருமுயற்சியால் வெளிக் கொணரப்பட்டது. அதைக் கோகுலத்துக்கு எடுத்துச் செல்ல நடந்த முயற்சிகள் பலனளிக்காததால் அங்கேயே நிறுவப்பட்டது. பெயருக்கேற்ப பலராமனின் சிலை பெரும் சுமையாக விளங்கியதாம்! பின்பு, 150 ஆண்டுகளுக்கு முன்னர், தில்லியைச் சேர்ந்த பெரும் வணிகர் சேடஷ்யாம் தாஸ் என்பவரால் புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், இந்த கோயில் தீர்த்தம், சற்றுப் பாழடைந்த நிலையில் தென்பட்டாலும் பக்தர்கள் இதில் நீராடி ஆராதித்ததால் தாவூஜியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என நம்புகின்றனர். ஒரு சமயம், நந்தகிராமத்தின் யாதவர்கள் சுமார் ஒரு லட்சம் கறவைப் பசுக்களின் பாலை இக்குளத்தில் ஊற்றிக் கலந்து அதைப் பாற்கடல் போல் தோற்றமளிக்க வைத்து விட்டதால் அதற்குப் பால் குளம் என்றே பெயரிட்டு விட்டதாக ஒரு செவி வழிச் செய்தியும் இங்கு நிலவுகிறது. அழகிய கற்சிற்பங்கள் நிறைந்த பிறைச்சந்திர நுழைவாயிலை இருபக்கமும் யானைகள் தங்கள் சிரசின் மீது தாங்கிப் பிடித்துள்ள நிலை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மொஸைக் தரைப் பரவிய கோயில் திறந்தவெளி முற்றத்தை அடைய பனிரெண்டு வாயில்கள் உள்ளன. அதன் மத்தியில் நான்கு வரிசைகளாக பதினாறு தூண்கள் கொண்ட முன் மண்டபம். அதன் வழியாக நேராகச் சென்றால் கருவறையை அடையலாம்.

பொதுவாக, பால் வண்ண மேனியில் நீலநிற வஸ்திரம் உடுத்தி, புனுகுத் திலக மிட்டு, மார்பில் மலர் மாலை ஆபரணங்கள் அணிந்து, தொடை வரை நீண்டிருக்கும் உறுதியான கரங்களிலும், கால்களிலும் அணிகலன்கள் பூணி, ஏர் கலப்பை, கதாயுதம் ஏந்திக் கம்பீரமாகக் காட்சி தரும் தாவூ. இங்கு ஆறரை அடி உயர, கருமை நிற மேனியில், வலது கையை உயர்த்தி, இடது கையில் மதுக் கோப்பை ஏந்தி நாட்டியம் ஆடும் பாணியில் காட்சியளிக்கிறார். இதன் காரணத்தைப் புராண வாயிலாக அறியலாம்.

கிருஷ்ணன், ராதை மற்றும் பிற கோபிகைகளுடன் பிருந்தாவனத்தில் ராஸ லீலையில் ஈடுபட்டிருப்பதைக் காணும் பலராமர், அதுபோல் தானும் கிருஷ்ணன் மீது அன்பு கலந்த பாசத்தைக் காட்டி அவனுடன் நடனமாட விரும்பினாராம். ஆனால், அது நிறைவேறாத காரணத்தால், ஆசைத் தீ உடலில் பரவப் பெருமூச்சு விடுவதாகவும், அதன் வெப்பத்தாக்கத்தால் அவர் மேனி கருகி விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நிலையிலேயே அவ்விடத்திலிருந்தபடியே யமுனையின் எதிர்க்கரையிலுள்ள கிருஷ்ணன் ராதையைப் பார்த்தவாறு அவர்களுக்கு ஏற்ப நடனமாடுகிறாராம்!

அருகில் தான் மணம் புரிந்து கொண்ட குஷஸ்தலி மன்னன் காகுதமியின் புதல்வி ரேவதி தேவியுடனும் காட்சி தரும் சிற்பம் உள்ளது. கோயில், பலராமர் ஜெயந்தி அன்று விடியலிலிருந்தே திமிலோகப்படும். பல்தேவ் மகாராஜா, எங்களைக் காப்பாற்று என்று பக்தர்கள் இடும் கூக்குரல் எங்கும் நிறைந்திருக்கும். தாவூஜிக்கு விருப்பமான ராதே, ராதே, பர்ஸானாவாலி ராதே பாட்டு இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். விசேஷ அபிஷேகம், கண்கவர் அலங்காரம் செய்விக்கப்படும். நண்பகலில் மகா ஆரத்தி பக்தி ஆரவாரத்துடன் நடந்தேறும். தொடர்ந்து ஆயர்பாடியில் நடப்பது போல் நந்தோற்சவம் எனும் தயிர் விட்டெறியும் கேளிக்கை விளையாடல் நடக்கும். பின், கோயிலிருந்து காய்கனிகள், பூக்கள் பக்தகோடிகளை நோக்கி வீசப்படும். பயில்வான்கள் வீரதீரச் செயல்கள், சாகசங்கள் மூலம் தங்களது குரு பல்தேவ்ஜிக்கு மரியாதை செலுத்துவர்.

யாகசாலையில் வேள்வி தீ வளர்த்து ஏழு நாட்கள் நடைபெற்ற பாகவத சப்தகம் அன்று முடிவடைந்து, பிரம்மாண்ட பூர்ணா ஹுதி நடைபெறும். அத்துடன், ஜெயந்தி கோலாகலம், முடிவுக்கு வரும். கோயில் பூஜை வழிமுறைகளை கண்காணிக்கும் பாண்டாக்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. யமுனை நதிப்படுகையில் நீரில் மூழ்கியிருந்து தவமியற்றியவர் ஸௌரப ரிஷி. கருடனிடமிருந்து தன்னைக் காப்பாற்றி அங்கு தங்க தஞ்சமளித்ததற்குக் காளிங்கன் அவருக்கு ஒரு வர மளித்தான்! அதன்படி அவரது அஹவாஸிகௌர் சந்ததியினர் ஆதிசேஷனின் அவதாரமான பலராமர் கோயிலின் நித்ய கைங்கர்யங்களைச் செய்யும் பெரும் பேற்றை அடைந்தனர். இன்றளவும் அவர்களின் சந்ததியினரே இங்கு கோயிலைப் பராமரிக்கின்றனர். இங்கு நடந்தேறும் முக்கியப் பண்டிகைகள், ஹோலி, கிருஷ்ணாஷ்டமி, பலதேவ் சஷ்டி.

கண்டு, களித்துப் பக்தி பரவசமடைய வேண்டிய கோயில் இது!

தரிசனநேரம்: காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரையிலும், மாலை ஆரத்தி 6.00 மணி  முதல் இரவு 9.00 மணி வரையிலும் பின்பு இரண்டாவது ஆரத்தி.
 
  தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
 
 
 
 
 
 
 
 
Copyright 2024 www.dinamalar.com. All rights reserved.